படிப்புக்கு தர்ற முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் கொடுங்க! பெற்றோர்களிடம் வேண்டுகிறார் மிஸ்டர் சென்னை விக்ரம்

Friday, January 13, 2017

“ஒவ்வொரு பாடிபில்டிங் போட்டிகள்லயும் பலவிதமான அரசியலைக் கடந்து தான் நாங்க பங்கேற்கிறோம்; அதுல வெற்றியும் தேடுறோம். மாநில அளவிலேயே இவ்வளவு இடர்கள் இருக்கும்பொழுது, தேசிய அளவுல எப்படி இருக்கும்னு நினைச்சு பார்க்கக் கூட பயமாயிருக்கு. ஆனா, தேசிய அளவுல பங்கேற்று  வெற்றி பெற்றால் தான் எங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குது.

அரசிடமிருந்து உதவிகளோ அல்லது ஸ்பான்சர்கள் கிடைத்தாலோ நல்லாயிருக்கும்” என்று கடகடவென பேசுகிறார் விக்ரம். இளைஞர்களை ஈர்க்கும் பாடிபில்டிங் துறையில் தனக்கான அடையாளத்தை உருவாக்கத் துடிப்பவர். நரம்புகள் முறுக்கேறிய உடலுக்குச் சொந்தக்காரர். மூன்று முறை மிஸ்டர் திருச்சி பட்டம் பெற்றவர். கடந்த ஆண்டு நடந்த மிஸ்டர் சென்னை போட்டியிலும் வெற்றிவாகை சூடியவர். 

பிட்னஸ் ட்ரெய்னராக பலருக்குப் பயிற்சி கொடுத்துவரும் விக்ரம், மிஸ்டர் தமிழ்நாடு போட்டிக்காகத் தயாராகி வருகிறார். பிட்னஸ் பற்றியும், தமிழ்மக்களிடம் இருக்கும் பாடிபில்டிங் பற்றிய ஆர்வத்தைப் பற்றியும், அவரிடம் கேட்டோம். தன்னில் இருந்து பேசத் தொடங்கினார் விக்ரம்.

“எனக்கு சொந்த ஊர் திருச்சி. எட்டாம் வகுப்பு படிக்கும்போதே, ஆணழகன் போட்டியில கலந்துக்கணும்னு ஆர்வமா இருந்தேன். பத்தாம் வகுப்பு முடிச்சதும், ஜிம்ல போய்ச் சேர்ந்தேன். தொடர்ந்து, பயிற்சிகளை தீவிரமாகச் செய்ய ஆரம்பிச்சேன். என்னோட இந்த தீவிர பயிற்சியை பாத்துட்டு, ஜிம்ல சேர்ந்த ஒரு வருஷத்திலேயே என்னை பாடி பில்டிங் போட்டியில கலந்துக்கச் சொல்லி ஊக்குவிச்சாங்க. அதுல பரிசுன்னு ஒண்ணும் வரலை. இருந்தாலும், சோர்வடையாம மறுபடியும் தொடர்பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பிச்சேன். 

பிறகு, மூன்று முறை மிஸ்டர் திருச்சியாக தேர்வானேன். மிஸ்டர் சென்னை போட்டியில கலந்துக்கிட்டு, அதுலயும் டைட்டில் வின் பண்ணேன். என்னைப் பொறுத்தவரை, இந்தப் போட்டியில கலந்துக்கிட்டு வெற்றி பெறுவது பிரியா தவம் மாதிரி. 

காலையில நான்கரை மணிக்கு எந்திரிச்சு, ஒரு மணி நேரம் நடைபயிற்சி முடிச்சிட்டு, ஜிம்ல பிராக்டீஸ் செஞ்சுட்டு, அப்படியே என் வேலையை தொடங்க ஆரம்பிச்சுடுவேன். மதியம் 12:30 மணிக்கு வெய்யில்ல ஒரு மணிநேரம் நடந்திட்டு, வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் தூங்குவேன். மறுபடியும் பிராக்டீஸ் செய்ய ஆரம்பிச்சுடுவேன். நிறைய கஷ்டப்பட்டேன். அந்த உழைப்புக்கான பலன் கிடைச்சிருக்கு” என்று கடின உழைப்பால் வந்த வெற்றி அனுபவத்தை பற்றிக் கூறினார் விக்ரம். 

அவரிடம், ஜிம் செல்வதற்கு ஏற்ற வயது எது? என்று கேட்டதும், “பதினெட்டு தான் சரியான வயது. அதுக்கு முன்னாடி கூட பயிற்சி எடுத்துக்கலாம். ஆனால், தசைகள் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் ரொம்ப அதிகம். உடற்பயிற்சி 30 சதவிகிதம் உதவுதுன்னா, உணவுக் கட்டுப்பாடு அதைவிட பெருசா உதவும். 

ஆண்களோ அல்லது பெண்களோ கொழுப்புச்சத்து, சர்க்கரை அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். புரதச்சத்து நிறைந்த வெள்ளைக்கரு, வேகவைத்த சிக்கன் போன்ற உணவுகள், பைபர் சத்துக்கள் நிறைந்த முட்டைகோஸ் போன்ற உணவுப்பொருட்களை அதிக அளவில் எடுத்துக் கொண்டால், நமது உடல் பிட்டாகவே இருக்கும். அதே நேரத்துல வெளி உணவுகள், ஜங்க் உணவுகளை கட்டாயம் தவிர்த்துடுங்க. கூடுமானவரை வீட்ல செய்யுற உணவை எடுக்குறது நல்லது. இப்போ, இணையத்துல பிட்னஸ் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு கொடுத்துட்டு வர்றாங்க. ஆனால் பயிற்சியாளர்கிட்ட போய் கத்துக்கிட்டாதான் பாடிபில்டிங்லயோ, பிட்னஸ்லயோ நினைச்சதை அடைய முடியும். ஏன்னா, அவங்க எடுத்த உடனே நமக்கு எடை பயிற்சி கொடுக்க மாட்டாங்க. உங்களோட தசைகள் சேதம் ஆகாம இருக்க அடிப்படையான சில பயிற்சிகளைத் தருவாங்க. ப்ளோர் பயிற்சி, அப்டோமன் பயிற்சி போன்றவற்றைக் கொடுத்துட்டு, படிப்படியா பாடிபில்டிங்குக்கான பயிற்சிகளைக் கொடுப்பாங்க.

உடற்பயிற்சிக்கு வயது வரம்பே கிடையாது. ஆனா, பாடி பில்டிங்கை 35 வயதுக்கு மேல செய்றது நல்லது இல்லை. இயற்கையாகவே தசைகள் வலு இழந்துடும். அதனால, இந்தத் துறையில சாதிக்க நினைக்கிறவங்க முப்பத்தி ஐந்து வயதிற்குள் சாதிக்கணும்.

பாடி பில்டிங் போட்டிகள்ல கலந்துக்குறவங்களோட உடல்ல கொழுப்பு சதவீதம் குறைவா இருக்கணும். அதோட, அவங்க தசைகள்ல பைபர் அதிகமா இருக்கணும். அதுக்கு, உணவு கட்டுப்பாடு மற்றும் தேவையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து ஆறு மாதம் செஞ்சுட்டே இருக்கணும். இதனால மற்ற வேலைகள்ல கான்சென்ட்ரேட் செய்ய முடியாது. ரொம்ப கடினமான விஷயம் இது. முக்கியமா, போட்டியில அப்டோமென் மற்றும் கால் தசைகளைத்தான் பார்ப்பாங்க. இவ்ளோ மெனக்கெட்டீங்கன்னா தான், போட்டியில உங்கள் இலக்கை அடைய முடியும்.

போட்டி நடத்துறவங்க டோப் டெஸ்ட் கண்டிப்பா செய்யணும். ஆனால் அவங்க அதை செய்றது இல்லை. போட்டியில வெற்றி பெறணும், நல்ல உடற்கட்டு வரணும்கற அளவுக்கு அதிகமா ஸ்டீராய்டு எடுத்துக்குறாங்க. அதிகமான ஸ்டீராய்டுகள் உடல்ல சேர்றதுனால சிறுநீரக கோளாறு, இளம் வயதிலேயே மாரடைப்பு போன்றவை வரக்கூடும். இயற்கையா போட்டிகளுக்கு ஏற்ற உடற்கட்டை கொண்டு வர்றதுக்கு இரண்டு வருஷம் ஆகும். ஸ்டீராய்டு எடுத்தீங்கன்னா, சில மாதங்களிலேயே அது சுலபமா கிடைச்சுடுது. அவங்க டாப் டென்ல தேர்வாகிடறாங்க. அதனால, வேற வழியே இல்லமாத்தான் இதை செய்யுறாங்க.

ஒரு சில ஜிம்ல பார்த்தீங்கன்னா, பயிற்சிக்கு சேர்ந்த உடனேயே புரோட்டின் பவுடர் கொடுப்பாங்க. அது தேவையே இல்லை. இயற்கையிலேயே புரதம் இருக்குற உணவை எடுத்துக்கிட்டு உடற்பயிற்சியை தொடங்கலாம். அப்புறமா, இது போன்ற சப்ளிமென்டுகளை எடுத்துக்கலாம். 

இன்னும் சில பேரைப் பார்த்தீங்கன்னா, ஒரு மாசத்துல உடலைக் குறைக்கணும், கிராஷ் டயட் சொல்லுங்கன்னு வந்து நிப்பாங்க. ஆனா, நாங்க கிராஷ் டயட்டை அறிவுறுத்தவே மாட்டோம். அவங்களை மருத்துவர்கிட்ட உடல் பரிசோதனையை செஞ்சுக்கச் சொல்லி, அதுக்கு ஏற்ற மாதிரி டயட்டை வலியுறுத்துவோம்”
என்று ஜிம் பற்றிய அடிப்படை விஷயங்களைப் பற்றி ‘கிளாஸ்’ எடுத்தார் விக்ரம். 

அவரிடம், “அரசு சார்பில் பாடிபில்டிங் செய்பவர்களுக்கு உதவிகள் கிடைக்கிறதா?” என்றோம். என்ன உதவி உங்களுக்கு தேவை என்றதற்கு,
“கிரிக்கெட்டுக்கு கொடுக்குற அங்கீகாரம், மற்ற எந்த ஸ்போர்ட்ஸுக்கும் அரசு கொடுக்குறது இல்லை. தேசிய அளவுல மட்டுமில்ல, தமிழ்நாடு அளவுல பங்கெடுக்கவே அதிகமா செலவாகுது. அதுக்குள்ள சில அரசியலும் இருக்கு. இதெல்லாம் தாண்டித்தான் நாங்க ஜெயிக்க வேண்டியிருக்கு. அரசு தரப்பில ஸ்பான்சர் கிடைத்தால் உதவியாக இருக்கும்.

நான் பணக்காரக் குடும்பத்து பின்னணியிலிருந்து வரலை. எங்க அப்பா டெய்லர், அம்மா வீட்லதான் இருக்காங்க, என்னோட தம்பி இன்னும் படிச்சிட்டு இருக்காரு. ரொம்ப கஷ்டப்பட்டு தான், இதை செஞ்சுட்டு வர்றேன். நான் முதன்முதல்ல பாடிபில்டிங்கில இறங்கினதும், எங்க வீட்ல ரொம்ப அதிர்ச்சியானாங்க. என்னோட வெற்றியைப் பார்த்தபிறகு, இப்போ உதவி செய்றாங்க. இதை அவங்க கொஞ்சம் முன்னாடி யோசிச்சிருந்தாங்கன்னா, இன்னும் நல்லா வந்திருப்பேன். இப்போவாவது என்னைப் புரிஞ்சிக்கிட்டாங்களேன்னு நினைக்குறப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

என் அனுபவத்தின் மூலமாக, மற்ற பெற்றோர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புறேன். படிப்புக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்குறோமோ, அதே அளவு முக்கியத்துவம் விளையாட்டுக்கும் கொடுங்க. உங்க பசங்களோட எதிர்காலம் ஸ்போர்ட்ஸ்ல பிரகாசிக்கலாம் இல்லியா?” என்று அடுத்த தலைமுறையினருக்காகவும் வேண்டுகோள் விடுக்கிறார் விக்ரம். 

'ஐ' படத்தில் வரும் விக்ரம் போல, இன்று தமிழ்நாடு முழுவதும் பல விக்ரம்கள் பாடிபில்டிங்கில் அசத்துகின்றனர். அதிலொருவராக இருக்கும் இந்த விக்ரம், மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் வெல்ல வேண்டும்; விரைவில் மிஸ்டர் இந்தியாவாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். அதற்கான வாழ்த்துகளைக் கூறி விடைபெற்றோம்.

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles