பாரபட்சம் இல்லாத நடவடிக்கை வேண்டும்.. பாவனா விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள்!

Monday, February 20, 2017

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலியில், மர்ம கும்பலால் நடிகை பாவனா பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார். இந்த கொடுஞ்செயலுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில், இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்வண்ணன் பேசினார். 

"சகோதரி பாவனா அவர்களுக்கு நடந்த சம்பவம், மிகவும்  சங்கடமான விஷயமாகும். அவர்களுக்கு நடந்ததற்காக மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த பெண் இனம் இன்று எந்த அளவிற்கு மனிதாபிமானமற்ற ஆண்களின் கையில் தவறாகப் பயன்படுகிறது என்று எண்ணும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, உடனடியாக கேரளா முதலமைச்சர் அவர்களுக்கும் காவல்துறைக்கும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தொலை நகல் ஒன்றை அனுப்பியுள்ளோம். அதில், இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

பாவனாவிடம் சிறிய விசாரணை நடந்துள்ளது. அந்த விசாரணையின் முடிவுக்குப் பிறகு நடந்த சம்பவங்கள் அனைத்தும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதனுடைய தொடர்ச்சியாக, மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாவனாவினுடைய முன்னாள் ஓட்டுனர் ஒருவரும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கிறோம். 

பாவனாவைக் கடத்தியது பணத்திற்காகவா அல்லது முன்விரோதம் காரணமாகவா அல்லது பழிவாங்கும் நடவடிக்கையா? கைதானவர்கள் இந்தப் பின்னணியில் மட்டும்தான் உள்ளார்களா அல்லது வேறு யாரும் இதன் பின்னால் உள்ளார்களா? என்றும், அப்படி வேறு யாராவது இருந்தால் அவர்கள் சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும், பாரபட்சம் இல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இந்த சம்பவத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கதின் சார்பில் மிகப்பெயரிய அளவில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்!" என்றார். 

இந்த சந்திப்பின்போது, நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles