ஆவணப்படம் கல்வெட்டுக்கு இணையானது! இயக்குனர் ரமேஷ் யந்த்ரா 

Thursday, February 16, 2017

“மத்திய அரசைப் பொறுத்தவரை ஆவணப்படங்களுக்கென்று ஒரு தனி வரவேற்பு இருக்கிறது. அரசை சாராமல், இண்டிபெண்டண்ட் பிலிம் மேக்கர்களை ஊக்குவித்து, அவர்களுக்குத் தேவையான நிதியுதவியையும் செய்றாங்க. இப்படி ஒரு விஷயம் எத்தனை பேருக்கு தெரியும்னு எனக்குத் தெரியல. ஆனால், மாநில அரசோ ஆவணப்படத்துக்கென்று எந்த விதமான சலுகைகளையும் கொடுக்குறது இல்லை.

இது கொஞ்சம் வருத்தத்தை அளிக்கிறது” என்று ஆவணப் படத்தின் முக்கியத்துவம் குறித்துத் தெளிவாக விளக்குகிறார் இயக்குனர் ரமேஷ் யந்த்ரா. இவரது  ‘குடியம் கேவ்ஸ்' என்ற ஆவணப்படம், சர்வதேச கான்ஸ் திரைப்பட விழாவில் விருதைப் பெற்ற ஒரு படைப்பு. 

 

இந்தியாவில் ஏன் அதிக அளவில் ஆவணப்படங்கள் வெளிவருவதில்லை?

“குறும்படங்களுக்கோ அல்லது திரைப்படங்களுக்கோ கிடைக்குற நிதி அல்லது மரியாதை, ஆவணப் படங்களுக்கு கிடைக்கிறது இல்லை. அரசாங்கம் கூட சிறந்த திரைப்படங்கள், சிறந்த நெடுந்தொடருக்கான விருதுகளைத்தான் கொடுத்து ஊக்குவிக்கறாங்க. சில பத்திரிகைகள் கூட சிறந்த தொகுப்பாளர்களுக்கான விருதுகளைக் கொடுக்கறாங்க. அவங்க கூட ஆவணப்படங்களை கண்டுக்கிறது இல்லை. ஆவணப்படங்கள் எடுக்கிறவங்களும் சர்வதேசத் தரத்துக்கு தங்களோட படம் இருக்கான்னு பார்த்துக்கறது இல்லை. சர்வதேசத் தரம் அப்படீன்னா, இசை கூட சொந்தமாக அமைத்திருக்க வேண்டும்.”

 

ஆவணப்படம் எடுப்பதில் உங்களுடைய ரோல் மாடல் யார்?

“நான் படித்த ஓவியக் கல்லூரிதான். முன்காலத்துல எல்லாம் நம்மளோட கலாச்சாரத்தை கல்வெட்டுகள்ல பதிவு செய்தாங்க, அதற்குப் பிறகு ஓவியங்கள் மூலமாக பதிவு செய்தாங்க. ஒரு விஷயத்தை ஒவியமாகப் பதிவு செய்யுறதை விட, ஆவணப்படமாக பதிவு செய்வது கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும்; அதோட, எல்லோருக்கும் எளிதாகப் புரியும்.”

 

நம்மைச் சுற்றி எத்தனையோ விஷயங்கள் இருக்க, குடியம் குகைகள் பற்றிய ஆவணப்படத்தை எடுக்கக் காரணம் என்ன?

“இப்படி ஒரு எண்ணம் தோன்றியதற்குக் காரணம், நான் படித்த ஓவியக் கல்லூரிதான். அங்கே படிக்கும் காலத்திலே, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கக்கூடிய வரலாற்றுப் பதிவுகளை, ஓவியத்தின் மூலம் நாங்க எல்லோரும் பதிவு செய்வோம். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், செல்லமுடியாத சில இடங்களுக்கு என் நண்பர்களோட உதவியுடன் போயிருந்தேன். அப்பொழுதுதான், சென்னைக்கு 60 கிலோமீட்டர் தொலைவில், ஒரு லட்சம் வருடத்திற்கு முன்னால் தோன்றிய குகை, அதாவது ‘குடியம் கேவ்ஸ்’ பார்த்து வியந்தேன்.

அந்தக் குகையைப் பற்றி இணையத்தில் தேடும்பொழுது, எந்த விதமான குறிப்பும் எனக்குக் கிடைக்கவில்லை. பிறகு தொல்பொருள் ஆராய்ச்சித்துறையில் இருந்த புத்தகங்களைப் பார்த்து உறுதி செய்தேன். அதாவது, ஆதி மனிதன் வாழ்ந்த குகை நம் இந்தியாவில், அதாவது தமிழகத்தில் இருக்கிறது என்று. எனவே, இதனை ஆவணப்படமாக்கி எல்லா மக்களிடையேவும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற எண்ணம் எழுந்ததால் ஆவணப் படத்தையும் எடுத்தேன். அதைப்பற்றி ஆராய்ந்து விக்கிபீடியாவில் பதிவு செய்ததும் நான் தான்.”

 

‘குடியம் கேவ்ஸ்' ஆவணப்படத்துக்கான தகவல்களை எப்படி தேர்வு செய்தீர்கள்?

“ஏற்கனவே குறிப்பிட்டிருந்த மாதிரி, இணையத்துல எந்தவிதமான செய்திகளும் இல்லை. இது சம்பந்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கிட்ட தான், நான் கேட்டு தெரிஞ்சுகிட்டேன். இதனை ஒரு ஆவணப்படமாக எடுக்கிறதால, அவங்க சொல்றதையெல்லாம் அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், சில பேர் வேற மாதிரி கருத்துக்களைச் சொல்லுவாங்க. எல்லாவற்றுக்கும் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களைச் சேகரிக்கணும். 

அப்போதான் எனக்கு பூண்டியில இருக்குற ப்ரீ ஹிஸ்டாரிக் அருங்காட்சியகத்துல சில துப்புகள் கிடைச்சது. குடியம் கேவ்ஸ் பற்றி ராபர்ட் ப்ரூஸ் சில விஷயங்களை ஆவணப்படுத்திருக்காரு. அதுல இந்தக் குகை இரண்டு லட்சம் வருட பழமையானதுன்னு தெரியவருது. இந்தியா சுதந்திரம் அடைந்ததும், அவருக்குப் பிறகு தொல்லியலாளர்கள் சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பாதி செஞ்சிருக்காங்க. அது பெரும்பான்மையான மக்களுக்கு போய்ச்சேரலை. ஏன்னா, அந்தக் குகை பற்றிய விபரங்களை ரொம்ப டெக்னிகலாக பதிவு செஞ்சிருக்காங்க. அதை எளிமையாகச் சொல்லி இருந்தால் எல்லோரையும் சென்றடைந்திருக்கும்.”

 

உலகத் திரைப்படங்களோட போட்டியிட்டு, உங்கள் படம் கான்ஸ் விருதை பெற்றிருக்கிறதே?!

“குடியம் கேவ்ஸ்' படத்தை எடுக்கும்பொழுது, எந்த விதமான விருதுகள்லயும்  பங்கெடுத்துக்கணும் என்ற எண்ணத்துல நாங்க எடுக்கலே. இதைப் பற்றிய தகவல்களை மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கணும்னுதான் எடுத்தோம். எதேச்சையா இணையத்தளத்துல கான்ஸ் விருதுக்கான அழைப்பினைப் பார்த்து, எங்கள் ஆவணப்படத்தை அனுப்பினோம். 2015ம் ஆண்டு நடந்த கான்ஸ் விருது விழாவில், ஷார்ட் பிலிம் கார்னர் என்ற பகுதியில் தேர்வானது இந்தப் படைப்பு. இதில் கலந்துகொள்ளும் எல்லாப் படைப்புகளும் தேர்வாவது இல்லை. அதாவது, ‘உங்களின் படைப்பு விருது பெறவில்லையெனில், நீங்கள் செலுத்திய நுழைவுக்கட்டணம் திருப்பி  அனுப்பப்படும்’ என்கிறார்கள். உங்கள் படைப்பு தரமானதாக இருந்தால், அவர்கள் அங்கீகரிக்கிறார்கள்.”

 

வருங்காலத் திட்டம் குறித்து..?

“ஆவணப் படம் என்றாலே நிகழ்கால அரசியல் நிகழ்வுகளைத்தான் பதிவு செய்றாங்க. அதனால் வரலாற்று ஆவணப்படங்களை உருவாக்கவும், அதனைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குக் கொண்டு சேர்க்கவும் திட்டமிட்டுள்ளேன். அதாவது, வரலாற்றுப் பதிவுகளை கல்வெட்டுக்கு இணையாகவோ அல்லது ஓவியங்களுக்கு இணையாவோ, ஆவணப்படமாக எடுத்து நமக்குப் பிறகு வரும் சந்ததிகளுக்கு நல்ல பதிவுகளை விட்டுச் செல்ல வேண்டும் என்று எண்ணுகிறேன்.

ஆவணப்படங்களைப் பொறுத்தவரை, பெருசா நாம லாபம் எதிர்பார்க்க முடியாது. ‘குடியம் கேவ்ஸ்' படத்தை தயாரிச்சிட்டு, பிரபல நாளிதழ்கள்ல போஸ்ட் புரொடக்‌ஷனுக்காக நிதி உதவி கேட்டிருந்தேன். அதற்கு உதவ, யாருமே முன்வரலை. ஏனெனில், வெறும் விருதுகள் போன்ற சர்வதேச அங்கீகாரம் மட்டுமே கிடைப்பதால் தான். மாநில அரசு முனைந்தால், எங்களுக்கும் நிதி உதவி கிடைக்கும். அதன் வழியாகப் பல அறிய பொக்கிஷங்களை ஆவணப்படுத்தி, பின்வரும் சந்ததியினருக்கு நம் பாரம்பரியத்தை எளிதாகக் கொண்டு சேர்க்கலாம்” என்று சொல்லி விடைபெறுகிறார் ரமேஷ் யந்த்ரா.

ஆவணப்படுத்துதல் என்றொரு அற்புத வழக்கத்தை விட்டொழித்ததன் மூலமாக, பல அற்புதங்களை இழந்து தவிக்கிறோம் நாம். இனிவரும் காலத்திலாவது அதனைத் தவிர்க்க வேண்டும்; ரமேஷின் வேண்டுகோள் மாநில அரசின் காதுகளுக்குச் சென்று சேர வேண்டும்!

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles