நீர் ஆதாரத்தை பாதுகாப்பதே இன்றைய அத்தியாவசியத் தேவை! -  - எழுத்தாளர் விநாயக முருகன்

Friday, April 28, 2017

நவீன இலக்கியத்திலும், சமூக வலைதளங்களிலும் மிகவும் பிரபலமான பெயர் எழுத்தாளர் விநாயகமுருகன். அடிப்படையில் ஐ.டி. ஊழியர். ஆனால், சமூகம், பண்பாடு, அரசியல் என அத்தனை பிரச்னைகள் குறித்தும் தெளிவான பார்வையாடு தன் கருத்தை முன்வைக்கிறார். அண்மையில், அமெரிக்கா சென்று, திரும்பியிருந்தவரை சந்தித்துப் பேசினோம்.

“நீர் ஆதாரங்கள் அதிகம் இருந்த நாடு நம் தமிழ்நாடு தான். நீர் மேலாண்மையில அந்த காலத்து தமிழர்கள் சிறந்து விளங்கி இருந்தாங்க. குளங்கள்,  ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்கள் பலவற்றை அவர்கள் வெட்டி வைத்திருந்தார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தை ஆயிரம் ஏரி மாவட்டம்னு சொல்லுவாங்க. அதாவது, செங்கல்பட்டுல ஆயிரம் ஏரிகள் இருந்ததாக சொல்லப்படுது. ஆனால் இன்றைக்கு அதற்கான சுவடுகள் கூட இல்லை. 'பொன்னியின் செல்வன்' நாவல்ல, கூட வீராணம் ஏரியில  64 மதகுகள் இருக்கிறதா குறிப்புகள் வரும். ஆனால்  இப்போ அங்கே பத்து மதகுகள் இருந்தாலே அது பெரிய விஷயம். 

ஆங்கிலேயர் காலத்துல, சென்னையைச் சுற்றி நான்கு ஆறுகள் ஓடிட்டு இருந்தது. அடையாரையும், கூவம் ஆற்றையும் இணைக்க பக்கிங்கம் கெனால் கட்டினாங்க. ராமநாதபுரம் மாவட்டம் எல்லாம் இயற்கையிலேயே வறட்சியாகத்தான் இருந்தது. தஞ்சைப் பகுதியை இந்தியாவோட நெற்களஞ்சியம்னு சொல்லுவாங்க. அந்த சமயத்துல  அண்டை மாநிலங்கள் இடையே நீர் அடிப்படையில் எந்த சண்டையும் இல்லை. ஆனால் இப்போ நிலைமையே தலை கீழாக மாறிப்போச்சு. தமிழ்நாட்டு அரசியலில் சமீபத்தில் நீரை வைத்து நடந்த சம்பவம் ஊரறிந்த கேலிக்கூத்தாகி விட்டது.

வெளிநாடுகளில், நீரை சேமிக்க அவர்கள் சில வழியை கடை பிடிப்பார்கள். அதாவது, நீர் நிலைகளில் ரப்பர்கள் வைத்து தண்ணீர், ஆவியாகாமல் பாதுகாக்கின்றனர். தெர்மாகோல், போன்றவற்றை நீரை மேல் வைத்தால், அந்நீர்நிலைகளில் உள்ள மீன்கள் இறக்க நேரிடும் சாத்தியம் அதிகம். அதைத்தான் தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வலியுறுத்தி  கூறி வருகின்றனர். இது போன்ற கேலிகூத்துக்களை தவிர்த்து, அண்டை மாநிலங்களோடு நடக்கும், சச்சரவை போக்குவதற்கு, நம்மூர் நீர் நிலைகளில் தூர் வாரி அதனை செப்பனிட வேண்டும். சிங்கப்பூர்ல நம்ம ஊர்ல உள்ள கூவம் நதி போலவே கழிவு பொருள் கலந்த ஆறு ஓடிட்டு இருந்தது. அங்கே அரசாங்கம், ஊரில் உள்ள கழிவுகள் ஆற்றில் கலக்காமல், அதனை திசை திருப்பி விட்டனர். தற்பொழுது, அது குடிநீர் பயன்பாட்டுக்கு உபயோகிக்கின்றனர். அதேபோல் நம் நாட்டிலும், அரசாங்கம், இதற்கு ஒரு தீர்வை இப்பொழுதே செய்தால் வரும் காலங்களில், நம் குடிநீர் திண்டாட்டங்கள் உடனடியாக குறையும். மழைநீருக்கென்று ஒரு கால்வாயும், கழிவுநீருக்கென்று மற்றொரு கால்வாயை ஏற்படுத்தினால், தீர்வு எளிதாக கிடைக்கும்.” என்று சமுதாய அக்கறையுடன் முடித்தார்.

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles