வெட்டி எறியுங்கள் கருவேல மரங்களை! சமூக ஆர்வலர் கார்த்திகேயன் 

Thursday, April 13, 2017

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாட ஆரம்பித்துவிட்டது. சென்னையில் சொல்லவே தேவையில்லை. நகரத்தின் வீதிகளில் காலிக்குடங்களுடன் தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நதி நீரை விவசாயத்துக்காக பங்கிட்டு கொள்வதில் அண்டை மாநிலங்களுடனான பிரச்சினையும் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.

இப்படியான சூழலில்தான், 'நிலத்தடி நீரை உறிஞ்சி, விவசாயத்தின் குரல் வளையை நெறிக்கும் கருவேல மரங்களை வெட்டி எறியுங்கள்..' என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் திடீர் உத்தரவு பலரின் புருவங்களையும் உயர்த்தியது. 

சோஷியல் மீடியாக்களில் இது குறித்த விவாதங்கள் பட்டையைக் கிளப்பின. அரசு அலுவலர்களை நம்பிக்கொண்டிருக்காமல் பல கிராமங்களில் இளைஞர்களோடு கைக்கோர்த்துக்கொண்டு பொதுமக்களும் களத்தில் இறங்கினர். கருவேல மரங்களை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமூகப் பணியில் மென்பொருள் வல்லுநர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் நம் கவனம் ஈர்த்தவர் கார்த்திகேயன். வேலூர் மாவட்டத்தில் தன் நண்பர்களுடன் இணைந்து கருவேல மரங்களை அகற்றி வருகிறார்.  'தண்ணீர் தட்டுப்பாடு நம் எதிர்காலச் சந்ததிகளை பாதிக்காமல் இருக்க, கருவேல மரங்களை வேரோடு அகற்றுவது ஒன்றே தீர்வு"என்கிறார் தீர்க்கமாக. தொடர்ந்து அவரிடம் பேசினோம்!

 

தொழில்நுட்பவாதியான நீங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலராக மாறியதன் பின்னணி என்ன?

“இன்றைய சூழல்ல நான் மட்டும் இல்ல, என்னைப்போல நிறைய இளைஞர்களும், மென்பொருள் வல்லுநர்களும் சுற்றுப்புறச் சூழல் மீது ஆர்வத்தோடு இருக்காங்க. மனிதனுடைய வாழ்வாதாரமான தண்ணீரை அழிக்கிறது இந்தக் கருவேல மரங்கள். இதனைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் தெரிய வேண்டும். அதனால்தான், கருவேல மரங்களை அகற்றுவது மட்டுமில்லாம, பயனுள்ள மரங்களை நடுவது, பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்துவது என்று சுற்றுச்சூழல் சார்ந்த வேலைகளைகளையும் செஞ்சிட்டு இருக்கோம். இன்று, நாம கஷ்டப்பட்டாலும், நம்மளோட எதிர்கால சந்ததிகள், நல்லா இருக்கணும் இல்லையா?. இது நம்ம எதிர்காலத்துக்கு மட்டுமில்லீங்க; நாட்டுக்கும் செய்யுற நல்ல விஷயம்! ”

 

கருவேல மரங்களை அகற்றும் பணியில் இளைஞர்களின் ஆதரவு கிடைத்ததா?

“இளைஞர்கள் தான் முழு ஆதரவு கொடுக்குறாங்க” என்று அழுத்தமாக கூறுகிறார். நிறைய பேர் தன்னார்வத்தோட எங்க கூட சேர்ந்து கருவேல மரங்களை அப்புறப் படுத்துறதுல முனைப்போடு இருக்காங்க. எங்களை மாதிரி ஆட்களுக்கு அலுவலகப் பணிகள் இருக்கு. இன்றைய இளைய சமுதாயத்துக்கு எதிர்காலத்தைப் பற்றிய விழிப்புணர்வு இருக்கு. அதேபோல உற்சாகமாக, சமூகப் பணிகளிலும் அவர்கள் ஈடுபடுவது வரவேற்கத்தக்க விஷயம்!”

 

மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த திட்டம் ஏதும் உள்ளதா?

“மக்களுக்கு கருவேல மரம் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்கனவே இருக்கு. அதை செயல்படுத்தத் தான் கொஞ்சம் சிரமப்படுறாங்க. உதாரணத்துக்கு, ஒரு மாதத்திற்கு முன்னாடி, இங்கே (வேலூரில்) சிவன் கோயில் குளத்தின் அருகே இருக்கும் கருவேல மரங்களை அகற்றினோம். அதோட அந்தக் குளத்தையும் தூர்வாரினோம். அதை நாங்க 'சேஞ்ச் வேலூர்' என்கிற பெயரின் கீழ் செஞ்சோம். அப்போ, நிறைய பொதுமக்கள், எங்க கூட ஆர்வமா வந்து பங்கெடுத்தாங்க. இப்படி தன்னார்வத்தோட எல்லோரும் செயல்படணும்ங்கிற நிலை வரணும். அப்படி வந்தால், எல்லாம் இங்கே சாத்தியம்!".

 

கருவேல மரங்களை அகற்ற சவால்களை எதிர்கொண்டீர்களா?

"கருவேல மரங்களை அகற்றுவது கொஞ்சம் சிரமம் தான். அந்த மரங்களை நீக்கும்போது நாம தான் பாதுகாப்போடு இருக்கணும். சவால் என்னன்னா, மரங்களை வெட்டுவதற்கு நாங்கள் ஒரு குழுவாக சேர வேண்டும். இப்போ இருக்குற, நேரமின்மையால் அது ரொம்ப சிரமமா இருந்தது. நாங்க திட்டமிட்டது போல, எல்லோரும் ஒன்றுசேர்ந்து, பிறகு  மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுவோம். அது எங்க குழுவுக்கே பெரிய சவாலாகத்தான் இருந்தது!".

 

கருவேல மரங்களை அகற்றுவதற்கு அரசிடமிருந்து அனுமதி பெற வேண்டியிருந்ததா? அதற்கான வழிமுறை ஏதேனும் உண்டா?

"அரசிடமிருந்து நாங்க, எந்த விதமான அனுமதியும் வாங்கல. 'அரசு கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும்' என்று நீதிமன்ற உத்தரவே இருக்கு. நல்ல விஷயங்களை பொதுமக்கள் தானே ஏற்று, செய்தாலே அரசு அதனை வரவேற்குது. இதுவரைக்கும் எங்களை நிறைய பேர் ஊக்குவித்தார்களோ தவிர, யாரும் தடுக்கவில்லை!"

 

எதிர்கால திட்டம்?

"சாலையோரம் மரங்களை நடவும், சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக்கை அகற்றும் பணியிலும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் திட்டமும் இருக்கு!" - நம்பிக்கையோடு முடிக்கிறார் கார்த்திகேயன். 

- பவித்ரா

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles