கவிதைகள் சொல்லவா! - எழுத்தாளர் ஜெயராணி

Friday, March 31, 2017

'ஜாதியற்றவளின் குரல்' கட்டுரை தொகுப்பின் வழியே பரவலாக கவனிக்கப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயராணி. தலித் மக்களின் வலிகளையும், அவர்கள் மீதான வன்முறைகளையும் அழுத்தமாக தன்னுடைய எழுத்தில் பதிவு செய்தவர். 'ஜாதியற்றவளின் குரல்' நூலூக்காக அவருக்கு 'பெரியார் விருது', 'விகடன் விருது' கிடைத்துள்ளன. மேலும், தொடர்ச்சியாக விவாதிக்கப்படும் நூலாகவும் அது இருந்து வருகிறது.

தொடர்ந்து கவிதைகளும் எழுதிவரும் ஜெயராணி, விரைவில் அவற்றை வெளியிட உள்ளார். தற்போது மலம் அள்ளும் தொழிலாளர்களின் நலனுக்காக களத்தில் நின்று போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!                                                

ஆண்டையின் ரோஜா தோட்டம்

ஆண்டையின் ரோஜா தோட்டத்தை
அம்மாவின் கைபிடித்துக் கடக்கும் போதெல்லாம்
ஓயாமல் கேட்டிருக்கிறேன்
அம்மா எனக்கொரு ரோஜா பறித்துக் கொடு...
அம்மா எனக்கொரு ரோஜா பறித்துக் கொடு...  
வேண்டாம்  முட்கள் குத்திக் காயமாகிவிடும், மகளே

எண்ணெய் பார்க்காமல் சிக்கேறிய அம்மாவின்  கூந்தல்                          
பூக்கள் சூடி நான் பார்த்ததேயில்லை.  
அவ்வூர் முழுக்க
சாமந்தியும், செவ்வந்தியும், முல்லையும் , கனகாம்பரமும்
பூத்துக் குலுங்கினாலும்
ஒரு பூவிதழ் கூட அவளது சேரிக் கூந்தலில் ஏறியதில்லை.

காட்டு மல்லிப் பூக்களை
தொடுத்தெடுத்து
அவள் தலையில் சூட்டப் போனேன்,
சட்டெனத் தட்டிவிட்டாள்.

அவளின் பூ அணியா போராட்டமே
என்னை பூக்கள் மேல் பித்துகொள்ள செய்தது .

ஊரெல்லாம் வண்ண வண்ணமாக  பூத்திருந்தாலும்
ரோஜாக்கள் மீதே நான் கிறங்கிக் கிடந்தேன்.  
நேர்த்தியாக நடப்பட்டு;
இலைகளெல்லாம் சேவகர்களை போல
அடக்கமாக வளர்ந்து நிற்க...
ஒரு பேரரசியைப் போல
மலர்ந்து நிற்கும் ரோஜாவின் கம்பீரமே
என்னை பித்துகொள்ளச் செய்தது!

சேரிகளுக்கான இரவொன்றில்
என் நொடிந்த குடிசை வீட்டு வாசலில்
நூற்றாண்டுகளாய் நொந்து  உருவழிந்துப்போன
பாயில் படுத்தபடி
நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டே
என்னை ரோஜா என்றழைக்குமாறு
அம்மாவிடம் கூறினேன்.

அசைவற்றுக் கிடந்தவள்
சலனமற்ற குரலில் சொன்னாள்...

நாம் பூக்களல்ல மகளே...
நாம் ஒருபோதும் பூக்களாக முடியாது.
இலைகளாக முடியாது.
ஏன் முட்களாகக் கூட ஆக முடியாது. 

போம்மா ....கோபித்து
அந்தப் பக்கமாய் திரும்பிப் படுத்துக் கொண்டேன்.
கண்களுக்குள் ரோஜாத் தோட்டம் அசைந்தாடியது.

பின்னொரு நாள்
விடிந்தும் விடியாத காலைப் பொழுதில்
நீரெடுக்க கிணற்றடிக்கு நடந்த போது
புன்சிரிப்போடு  வா...வாவென்றழைத்த
ரோஜாக்களைத் தேடி தோட்டத்திற்குள் நுழைந்தேன். 
 
அதுவொரு பெருங்குற்றமென அறிவிக்கப்பட்டது. 

சேரிமுடியை கொத்தாகப் பிடித்து
அம்மா இழுத்து வரப்பட்டாள்.
உனக்கெல்லாம் ரோசா...ப்பூ கேக்குதாவென
அம்மாவின் அடிவயிற்றில் ஓங்கி விழுந்த மிதியில்
என் மனதிலிருந்த ரோஜாத் தோட்டம்
தீப்பற்றி எரிந்து
நொடிப்பொழுதில் கருகி
சட்டென சாம்பலானது.  

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles