கஷ்டப்படாம எதுவுமே கிடைக்காது, நிலைக்காது! ஓவியர் ’சின்ன தம்பி' மார்த்தாண்டம்.

Friday, September 30, 2016

"இப்போ உலகமே டிஜிட்டல் மயமாகிடுச்சு. ஓவியங்களைத் தத்ரூபமா கணினியிலேயே வரைஞ்சிடுறாங்க. இதை ஒரு ஆரோக்கியமான விஷயமாத்தான் பார்க்குறேன். என்னை மாதிரி ஆளுக்கு, அதைப் பயன்படுத்த ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கு. அதனாலதான், பேப்பர்ல வரையறதை விடாப்பிடியா பிடிச்சுட்டு இருக்கோம்” என்கிறார் ஓவியர் மார்த்தாண்டம். சின்னத்தம்பி படத்தில் ’எனக்கு கல்யாணம்.. எனக்கு கல்யாணம்..’ என்கிற ஒரு வசனத்தையே பேசி, இன்றுவரை எல்லோராலும்  ’சின்னத்தம்பி' மார்த்தாண்டம் என்று அழைக்கப்படுபவர். ஒரு மாலைப்பொழுதில், அவருடன் உரையாடினோம். 

“திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற ஏறாந்தைங்கிற கிராமத்துல பிறந்தேன். எங்க குடும்பம் விவசாயக் குடும்பம். சின்னச்சின்ன பனை ஓலைகளை வெச்சு எங்கப்பா கிளி செய்வாரு. இதையெல்லாம் சின்ன வயசுலருந்து பார்த்துப் பார்த்து வளர்ந்ததால, எனக்குள்ள கலை ஆர்வம் ஏற்பட்டுச்சு. எஸ்.எஸ்.எல்.சி முடிச்சதும், ’என்னை ட்ராயிங் சேர்த்துவிடுங்க. எனக்குப் படம் வரையறதுலதான் ஆர்வம் இருக்கு’ன்னு சொல்லிட்டேன். அவங்களும் அதைப் புரிஞ்சிகிட்டு நாகர்கோவில்ல இருக்குற ‘சித்ரா டிராயிங் ஸ்கூல்’ல சேர்த்துவிட்டாங்க. அங்கதான் ஓவியம் எப்படி வரையறதுன்னு பழக ஆரம்பிச்சேன். 

 

அதுக்கப்புறம், அங்கிருந்து பம்பாய்க்குப் போனேன். அங்கே சி.மோகன்னு மிகப்பெரிய ஓவியர். நாம பிரஷ் இல்லேன்னா, பேனா வச்சு வரைவோம். ஆனால், அவரு கத்தி வச்சு ஓவியம் வரைவாரு. கத்தி வச்சு வரையுற ஸ்டைலை, அங்கதான் கத்துக்கிட்டேன். அதை ‘நைஃப் பெயின்டிங்’னு சொல்வாங்க.

 

அதுக்குப்பிறகு, சென்னை வந்து உபால்டுகிட்ட உதவியாளராகச் சேர்ந்தேன். அப்போ ‘மழலைப்பட்டாளம்’ங்கிற படத்துக்கு, சினிமா போஸ்டர் வரையற வேலை எனக்கு. அதுமூலமா, கே.பாலச்சந்தர் சார்கிட்டே அறிமுகம் கிடைச்சது. கே.பி சார், பி. வாசு மற்றும் ராம.நாராயணன் போன்றவர்களைத் தொடர்ந்து  சினிமா சான்சுக்காக பாலோ பண்ணேன். அப்போதான், எனக்கு 'சின்னத்தம்பி' படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த ரோல் எல்லாராலும் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து ‘பாளையத்தம்மன்', அப்புறம் எல்லா ராம.நாராயணன் படங்கள், அதோட அம்மன் படங்கள் எல்லாத்துலயும் நான் நடிச்சிருக்கேன்.

 

பெயிண்டிங்கை விட, எனக்கு முகங்கள் வரையத்தான் ஆர்வம் அதிகம். சும்மா எல்லாத்தையும் வண்ணம் தீட்டிடலாம். ஆனால் முகங்கள் வரையறதுங்கிறது ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான ஒரு வேலை. விதவிதமான பல முகங்களை வரைஞ்சாத்தான், நம்மளால எளிமையாக வரைய முடியும். ஒவ்வொரு முகம் வரையரதும் ஒரு பிராக்டிஸ் தான்” என்றவரிடம், ’அப்படியொரு மறக்க முடியாத அனுபவம் ஏதாவது இருக்கிறதா?’ என்றோம். 

 

“கோபிச்செட்டிபாளையம்னு நினைக்கிறேன், அங்கே படப்பிடிப்புல இருந்தபோது, படக்குழுவினருக்கு சரியான லொகேஷன் அமையலை. அவங்க என்னடா பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தாங்க. அப்போ நான் அவங்களோட தேவைகள் என்னன்னு கேட்டுட்டு, உடனே ஒரு பேப்பர் எடுத்து  வரைஞ்சேன். அந்த டிராயிங் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுப்போய், அந்த டிசைனை அப்படியே செட் போட்டு ஷூட் பண்ணாங்க. இதை என்னால மறக்கவே முடியாது. இன்னும் சொல்லப்போனால், அந்தப் படத்துல நான் ஆர்ட் டைரக்டரா வேலை பார்க்கலை. ஒரு நடிகராத்தான் கமிட் ஆகி இருந்தேன். இப்படி திடீர்னு ஒரு சவாலான வேலை வந்து, அதைச் சிறப்பாக செய்ததுல எனக்குப் பெருமைதான். 

 

அதே மாதிரி, நான் இங்க வேறொரு சம்பவத்தைப் பதிவு செய்ய ஆசைப்படுறேன். கிராமத்துல ஒருத்தர் இறந்துட்டாரு. அவரோட  போட்டோ. அவங்க குடும்பத்தார்கிட்ட இல்லை. அவங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியல. என்னைக் கூப்பிட்டு கேட்டாங்க. நான் இறந்தவரைப் பார்த்ததில்லை. இறந்தவரோட தங்கச்சி ஒருத்தங்க அந்த துக்கத்துக்கு வந்திருந்தாங்க. அந்த முகத்தை மாடலா வச்சு, அவங்களே ஆணாக இருந்தால் எப்படி இருப்பாங்களோ அதே மாதிரி வரைஞ்சேன். அந்தக் குடும்பத்துல இருக்குற எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். இறந்து போனவரோட முகம், அப்படியே தத்ரூபமா இருந்துதுன்னா சொன்னாங்க. இது எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது” என்று நமது ஆச்சர்யத்தை அதிகமாக்கினார். சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, வி.ஐ.பி.களும் இவரது கைவண்ணத்திலிருந்து தப்பவில்லை. 

 

”சொன்னா நம்ப மாட்டீங்க. குள்ளமணி ஆரம்பிச்சு ரஜினிகாந்த் வரைக்கும், இதுவரை 300 செலிபிரிட்டி படங்களை வரைஞ்சிருக்கேன். டைரக்டர், நடிகர், நடிகைகள் இப்படி பல முகங்களை ஓவியமா தீட்டியிருக்கேன். சூப்பர்ஸ்டார் கூட, என்னைப் பாராட்டியிருக்காரு. 

 

என்னைப் பொறுத்தவரை, எந்த ஒரு தொழிலுக்கும் நாம இஷ்டப்பட்டுதான் வர்றோம். அதுல சில கஷ்டங்களும் இருக்கத்தான் செய்யும். கஷ்டப்படாம எதுவுமே கிடைக்காது, நிலைக்காது. ரஜினி கமல்ன்னு இப்படி உச்சத்துல இருக்குற நடிகர்கள் கூட, ரொம்ப கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்திருக்காங்க. அதனால நாம எதிர்கொள்ளுற இன்னல்களைக் கண்டு துவண்டு போகக்கூடாது” என்று தனது அனுபவங்களை அழகாக எடுத்துக் கூறியவரிடம், ’ஓவியத்துக்கேற்ற முகங்களைக் கண்டுகொள்வது எப்படி’ என்று கேட்டோம். 

 

“இதுவரைக்கும் ஆயிரம் முகங்களை வரைஞ்சிருக்கேன். ஒவ்வொரு முகம் வரையும்போதும், எனக்கு புதுவிதமான அனுபவமாகத்தான் இருக்கும். எல்லார் முகமும் ஒருவிதத்துல அழகாகத்தான் இருக்கும். சில முகங்கள் நேர் கோணத்துல அழகாக இருக்கும். சில முகங்களோடு பெர்ஸ்பெக்டிவா அழகா இருக்கும். இது ஓவியர்களுக்கு நல்லா தெரியும். எந்த ஆங்கிள்ல அழகா இருக்காங்களோ, அதுக்கேற்ற மாதிரி நாங்க வரைவோம். அதனால, ஒரு ஓவியருக்கு சிக்கலான முகம்னு ஒண்ணும் இல்லை. இது ஒரு கலை, கலையை ரசிச்சு செஞ்சோம்னா எந்த விதமான சிக்கல்களும் வராது. எதுவுமே எளிதாகத்தான் நமக்குத் தெரியும். 

 

கொண்டை ராஜ் அவர்களோட ஓவியங்கள், எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு காலத்துல எல்லார் வீட்லயும் ரவிவர்மாவோட ஓவியங்களைத்தான் பெரும்பாலும் பூஜையறையில் வச்சிருப்பாங்க. அதேபோல, இப்போவெல்லாம் கொண்டை ராஜோட  ஓவியங்கள்தான் எல்லார் வீட்டு பூஜையறையிலும் இருக்குன்னு சொல்லுவேன்” என்றார் மார்த்தாண்டம்.

 

’உங்களது வருங்கால திட்டத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்’ என்றதும், “ஒரு ஓவியப்பள்ளி ஆரம்பிக்கனும்னு நினைக்கிறேன். அதுக்கான இடத்தையும் பார்த்திருக்கேன். நடிகர் விவேக் மாதிரி பெரிய மனசு படைச்சவங்களெல்லாம் உதவறேன்னு சொல்லி இருக்காங்க. ஆண்டவன் புண்ணியத்துல அது சீக்கிரமா நடந்துடுச்சுன்னா, எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.” என்று விடை கொடுத்தார்.

-பவித்ரா 

மேலும் படிக்க:
சிம்பு என் அண்ணா! உணர்ச்சிவசப்படும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!
சாத்தான் ‘சைத்தான்’ ஆன கதை! - இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ‘ஓபன் டாக்’!!
நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க ஆசை! நடிகர் பரணி

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles