உயிரே உன் விலை என்ன?  விக்னேஷ் எழுப்பியிருக்கும் கேள்வி!

Friday, September 16, 2016

எந்த ஒரு உயிருக்கும், யாராலும் விலை நிர்ணயிக்க முடியாது. ஆனால், கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழக நலனுக்காக நிகழும் மரணங்களை நோக்கும்போது, உயிருக்கு எந்த மதிப்பும் இல்லையோ என்று தோன்றுகிறது.  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் நடந்த ’காவிரி உரிமை மீட்பு பேரணி’ என்ற ஊர்வலத்தின்போது, தீக்குளித்து தன்னை மாய்த்திருக்கிறார் விக்னேஷ் என்ற வாலிபர்.

முத்துக்குமார், செங்கொடி வரிசையில், இப்போது இந்த மன்னார்குடி வாலிபரும் தன் உயிரைத் தந்திருக்கிறார். இதனைக் கேள்விப்படும் அனைவரது மனதிலும், கோபமும் எழுச்சியும் அனுதாபமும் ஒருசேர மேலோங்குகிறது. 

 

காவிரி நதிநீரைப் பங்கிட்டுக் கொள்ளும் பிரச்சனை, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இரண்டு மாநிலங்களும் நீரைப் பங்கிட்டுக் கொள்வது குறித்து, காவிரி நதிநீர் நடுவண் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதன்பிறகு உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகும் கூட, இன்றுவரை சுமூகமான சூழல் உண்டாகவில்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலத்தையே நம்பியிருக்கும் நிலையில் இருந்து வருகிறது தமிழகம். இந்த நிலையில்தான், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்திற்கு நீர் அளிக்க முடியாது என்றது கர்நாடக மாநில அரசு. தங்களது அணைகளில் குறைவான நீரே இருப்பில் இருப்பதாகவும் தெரிவித்தது.

 

இதனையடுத்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியதும் அதன்பிறகு நிகழ்ந்த களேபரங்களும் நாம் அறிந்ததுதான். காவிரி பிரச்சனை தலைதூக்கும் போதெல்லாம், தமிழர்கள் மீதான தாக்குதல் அரங்கேறுவது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதனால், வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டுச் சேர்ந்த்த சவுகர்யத்தை ஒரேநாளில் தொலைக்கின்றனர் தமிழ் உழைப்பாளிகள். இதன் தொடர்ச்சியாகவே இருக்கின்றன, கடந்த இரண்டு வாரங்களாக கர்நாடகத்தில் நிலவிவரும் அசாதாரணமான சூழ்நிலை.

 

அங்கு நிகழ்ந்த தமிழர்கள் மீதான தாக்குதல்கள், நம் ஊடகங்களை நிறைத்தன. பதிலடி என்ற பெயரில், தமிழகத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் அசிங்கங்களும் அரங்கேறவில்லை. இந்தச் சூழலில்தான், சீமான் தலைமையில் நடந்த ஊர்வலத்தில் தீக்குளித்திருக்கிறார் விக்னேஷ். சில நிமிடங்களில் பற்றிய தீ, அவரது உயிரை முற்றிலுமாகத் தின்றுவிட்டது. விக்னேஷ் மரணத்திற்குப்பிறகு, அவர் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் தற்போது வெளியாகியிருக்கிறது. இதைப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் அவமானத்தில் கூனிக்குறுகுவது உறுதி. 

 

கோடிக்கைகள் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டியவற்றை, தன் வேண்டுகோளாகச் சொல்லியிருக்கின்றன விக்னேஷின் கைகள். இதனையடுத்து, அவர் வாழ்ந்து தீர்த்திருக்க வேண்டிய வாழ்க்கை பற்றியும், அவரைச் சார்ந்தவர்கள் பற்றியும் இன்று பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. 

 

காவிரிப் பிரச்சனையின் தாக்கத்தை உணர்த்த விக்னேஷ் தேர்ந்தெடுத்த வழிமுறை சரியானதா என்றொரு விவாதம், இப்போது எல்லா வகை ஊடகங்களிலும் விவாதப் பொருளாகியிருக்கிறது. எந்தவொரு கேள்விக்கும், விக்னேஷின் சார்பில் பதில்சொல்லா எவராலும் இயலாது என்பதே உண்மை. 

 

விக்னேஷ் என்ற மனிதனின் உயிர் பறிபோயிருக்கிறது. அவரது இருப்பு தொலைத்துத் தவிக்கின்றன சில மனங்கள். ’உயிரே உன் விலை என்ன’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் விக்னேஷ். இதற்குப் பின்னும் இன்னும் எத்தனை ஆண்டுகள், காவிரி பிரச்சனை உயிருடன் இருக்கப்போகிறது? 

- பா.உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles