காவிரி விவகாரத்தில் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்! - தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள்!

Monday, September 12, 2016

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, கர்நாடகாவில் தொடர்ச்சியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக வன்முறைகள் அரங்கேறியிருக்கின்றன. தமிழர்களின் வாகனங்களை தீவைத்து கொளுத்துதல், கடைகளை அடித்து உடைத்தல், மாணவர் மீதான தாக்குதல் என பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில், ’சட்டம் ஒழுங்கை யாரும் கையில் எடுக்கக்கூடாது’ எனவும் உச்சநீதிமன்றம் கர்நாடக அரசை எச்சரித்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு பற்றி, கர்நாடகாவிலுள்ள கலைஞர்களும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து தங்களது நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர். 

 

அவர்கள் வெளியிட்டு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

 

"உலகில் உள்ள நதிகள் அனைத்தும் எங்கே உற்பத்தியாக வேண்டும், எங்கு சென்று சேர வேண்டும் என்று பல கோடி வருடங்களுக்கு முன்பே இயற்கை தீர்மானித்தது. காட்டு விலங்குகளை உணவாகத் தின்று திரிந்த மனிதன், விவசாயத்தைக் கண்டறிந்த பின் அதற்காக நதியை ஒட்டிய இடங்களில் வந்து குடியேறினான். நதிக்கரை நாகரீகம் வளர்ந்தபின், மனிதர்கள் நதியைத் தாயாகவும் கடவுளாகவும் போற்றி வந்திருக்கிறார்கள்.

அன்றிலிருந்து இரண்டாம் உலகப் போருக்கு பின் நாட்டின் எல்லைகள் வகுக்கப்படும் வரை, நதி பொதுவானதாகவே கருதப்பட்டது. அதன்பின் நதி நீர் கொள்கைகள் வகுக்கப்பட்டு, உலக நாடுகள் அதைப் பின்பற்றியும் வருகின்றன. உலக நாடுகளுக்கு பொருந்தும் விதி, இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்திற்கு பொருந்தாமல் போனதுதான் வருத்தம். நதிகள் உற்பத்தியாகும் இடத்தைவிட, அது சேரும் இடத்தைச் சார்ந்தவர்களுக்கு உரிமை அதிகம் என உலக விதி இருந்தாலும், கடந்த 100 வருடங்களாக என் மாநிலத்தில் பாயும் நதி என்னுடையது என்ற மனநிலையில் கர்நாடகா அணைகள் கட்ட ஆரம்பித்தபோது பழைய நியதிகள் உடைபட்டு பிரச்சனைகள் உருவானது. காவிரி நீர் பிரச்சனையில் நீதிமன்றம், விஞ்ஞானிகள், காவிரி நீர் நடுவன் மன்றம் ஆகியவை பல வருடங்களாக விவாதித்து தீர்ப்புகளைச் சொன்னபோதும்... அதைச் செயல்படுத்தாமல் கர்நாடக மாநிலம் தொடர்ந்து பிடிவாதம் பிடிப்பது முறையல்ல. மதம், ஜாதி, மொழி, மாநில எல்லைகளை மீறி - விவசாயத்தையும், குடிநீரையும் சார்ந்துள்ள மக்கள் எங்கிருந்தாலும் பொதுவானவர்களே!

கர்நாடக மக்களின் விவசாயத்தையும் குடிநீர் தேவைகளையும் ஒதுக்கிவிட்டு எங்களுக்குத் தண்ணீர் கேட்கவில்லை. அது போன்ற தேவை உள்ள மக்கள் தமிழ்நாட்டிலும் இருப்பதால், இருப்பதை இருவரும் பங்கிட்டுக் கொள்வோம், நல்லது கெட்டது இரண்டையும் சேர்ந்தே அனுபவிப்போம் என மனிதாபிமானத்தோடு கேட்கிறோம். அது பயனளிக்காததால் சட்டப்படி உரிமை பெற்று கேட்கிறோம்.

காவிரி நீர் பகிர்வில் கர்நாடக மாநிலம் இதுவரை பிடித்து வந்த அணுகுமுறையை மாற்றி, இருப்பதைப் பகிர்ந்து கொள்வோம் என்று புதிய சிந்தனையோடு செயல்பட்டால், எதிர்காலத் தலைமுறையினரிடையே நாங்கள் காவிரித் தாயின் பிள்ளைகள் என்ற பாசமும் நேசமும் உருவாகும். அதற்காக இன்று இருக்கும் அரசியல், கலை மற்றும் சமூகம் சார்ந்துள்ள மனிதர்கள் பங்காற்ற வேண்டியது முக்கிய கடமையாகும்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நீதியை எதிர்த்து, கர்நாடகாவில் இது சார்ந்து நடந்த எதிர்ப்பு கூட்டங்களில் கலந்து கொண்ட கன்னடத் திரை உலகை சார்ந்த பலரும் தங்களது உணர்வைப் பதிவு செய்து இருக்கிறார்கள். கலைஞர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள், மென்மையான மனதுடையோர் என்ற மரபை, மாண்பைத் தகர்த்து சிலர் எல்லைமீறி தமிழ்நாடு முதலமைச்சரை விமர்சித்ததை, உருவ பொம்மை எரித்ததை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது!

அதே கூட்டத்தில் அடுத்த தலைமுறைக்கான சிந்தனையோடு தனது கருத்தை நியாயமாகவும் நேர்மையாகவும் பதிவு செய்த எங்களின் மூத்த கலைஞர் திரு. ராஜ்குமார் அவர்களின் புதல்வர் சிவராஜ்குமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தீர ஆராய்ந்து நீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும், இயற்கை கொடுத்த வரத்தை, “கனத்த மனதோடு திறந்து விடுகிறேன்” என்று பொறுப்புள்ள ஒரு முதலமைச்சர் கூறியது மேலும் எங்கள் மனதை புண்படுத்துகிறது. கடந்த காலங்களில் தென்னிந்திய நடிகர் சங்கம் எப்போதுமே தமிழர்களுக்கும், இந்திய உணர்வுகளுக்கும் பிரச்சனை என வரும்போது, அதற்காகக் குரல்கொடுக்கத் தயங்கியதில்லை. தற்போதுள்ள நிலையில்  உச்சநீதிமன்றம் சென்று நமது உரிமையை நிலைநாட்டி வெற்றியுடன் வந்திருக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

தொடர்ந்து இதுபோன்ற உணர்வுப்பூர்வமான பிரச்சனையில் தன்னிச்சையான முடிவுகள் பல சிக்கல்களை கொண்டு வந்துவிடும் என்பதால், தமிழக மக்களின் உரிமைகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழ் திரைப்படம் சார்ந்த அமைப்புகளுடன் அனைவரிடம் கலந்தாலோசித்து தென்னிந்திய நடிகர் சங்கம் உறுதிப்பட செயல்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்" 

இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

@manam

Related Articles