கத்தியை விட்டுட்டு, புத்தகத்தை கையிலெடுங்க! 

Thursday, September 1, 2016

சமீபகாலமாகத் தொலைக்காட்சியில் எந்த சேனலைத் திருப்பினாலும், அடிதடி, வெட்டு, குத்து, கொலை என்றிருக்கிறது. செடியிலிருந்து பூவைப் பறிப்பது போல், ’அசால்டாக’ அரிவாளால் உயிரைப் பறிப்பது காட்டப்படுகிறது. நடந்த குற்றத்தையும் அதன் பின்னணியையும் விவரித்துக் காட்டுகின்றன சில ஊடகங்கள். சீரியல் காட்சிகளும் கூட, அப்படித்தான் வடிவமைக்கப்படுகிறது. ஒரு தாய், தான் பெற்று வளர்த்த குழந்தை கொலையுண்டு இருப்பதைப் பார்த்தால் எப்படி இருக்கும்? அதே போல, எதிர்முனையில் ஒரு கொலையாளியாக, தன் பிள்ளையை எப்படிச் சந்திப்பார்கள் அந்தப் பெற்றோர்கள். 

எளிதில் உணர்ச்சிவசப்படுவதுதான், இதற்கெல்லாம் காரணமாக அமைகிறது. ஆராய்ந்து பார்த்தால், உங்களுக்குப் புரியும். தற்போது நம்மைச்சுற்றி தலைவிரித்தாடும் வன்முறையின் பின்னணியாக இருப்பது காதல். “என் காதலை இந்தப் பொண்ணு ஒத்துக்கலை, அதனால போட்டேன்” என்றோ, “என்னைத்தவிர வேற எவனுக்கும் கிடைக்கக்கூடாது, அதான் வெட்டினேன்” என்றோ, “என்னோட ஆளு பின்னாடி இவன் சுத்துறான், சமயம் பார்த்து அவன் மேல அரிவாளை இறக்குனேன்” என்றோ நீள்கிறது சில வாக்குமூலங்கள்.

 

இவர்களின் வயது 15 முதல் 25க்குள் தான் இருக்கும். ஒரு ஆணின் காதலை அந்தப்பெண் நிராகரித்துவிட்டால், அதற்குக் கொலைதான் தீர்வா? உங்களுக்கு எப்படி அந்தப் பெண்ணை விரும்ப உரிமை உண்டோ, உங்களை நிராகரிக்கும் பெண்ணுக்கும் அதே போன்ற உரிமை  ஏன் இருக்கக்கூடாது. “எனக்கு இவனைப் பிடிக்கலை. நான் இவனை வெட்டப்போறேன், இவன் மேல ஆசிட் ஊத்தப் போறேன்”னு  எந்தப் பெண்ணாவது கூறியிருக்கிறாளா? ஆண்களுக்கு மட்டும், ஏன் இத்தனை உணர்ச்சி? நாம் சற்று யோசிப்போம்! 

 

நாம் பார்க்கும் தமிழ் மற்றும் ஏனைய மொழித் திரைப்படங்கள், அந்தச் சிந்தனைகளுக்கு ஒருவிதத்தில் வித்தாகின்றன. “அவளை கொல்லுடா, இவளை தூக்குடா” என்று சத்தமிடும் பாடல்கள், இளைஞர்களை உசுப்பேற்றுகின்றன. முன்பு வெளிவந்த திரைப்படங்களில் எல்லாம், காதல் தோல்வி ஏற்பட்ட கதாநாயகன் தாடி வளர்ப்பார், தற்கொலைக்கு முயல்வார். தற்கொலைக்கு முயற்சி செய்வது, எவ்ளோ பெரிய குற்றம். ஒரு காலகட்டத்தில், இப்படி தற்கொலையைத் தூண்டலாமா என்று எதிர்ப்புக்குரல்கள் வலுத்தது. அதனை மீறி, இப்போது நமது இளைஞர்கள் கொலையில் இறங்கிவிட்டார்கள். நம்மவர்களின் மனநிலையும், சுயநலமே பிரதானம் என்றிருக்கிறது. நான், நீ என்பதைத் தாண்டி, நமது என்ற வார்த்தை அரிதாகிப் போயிருக்கிறது. 

 

இதுக்கெல்லாம், என்ன தீர்வு இருக்க முடியும்? உங்களைச்சுற்றி  நல்ல விஷயங்களை மட்டுமே உலவ விடுங்க. நல்ல சினிமாக்களை பாருங்க. உங்க வாழ்க்கையோட பிரதிபலிப்பாதான் சினிமா இருக்க முடியும். சினிமாவை பார்த்து, உங்க வாழ்க்கையை வாழாதீங்க. யாரையும் பழி வாங்கணும்னு நினைக்காதீங்க. முக்கியமா, பெற்றோர்களா இருக்கிறவங்க, உங்க குழந்தைங்க முன்னாடி சண்டை போடாதீங்க. அதோட, “இன்னிக்கி நீங்க என்னை இப்படி நடத்துறீங்க. நாளைக்கு, என் கையிலதானே சிக்குவீங்க. அப்போ உங்களை பார்த்துக்கறேன்” என்பது போன்ற பழிவாங்கும் பேச்சுக்களை தவிருங்க. நல்ல எண்ணங்களும், மனசையும் உடலையும் லேசா வச்சுக்கிற புத்தகங்களும் உங்களை மேம்படுத்தும். வாசிப்பு உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும். , ஆரோக்கியமான சூழல் இருக்கும் இடங்களுக்கு, உங்க குழந்தைகளை கூட்டிட்டு போங்க. விட்டுக் கொடுத்தல், தோல்வியை ஒப்புக்கொள்ளுதல் என்பது போன்ற மனப்பான்மையை, அவங்களுக்கு கத்துக் கொடுங்க. இதுமாதிரியான விஷயங்களை செஞ்சா, உங்க குழந்தைங்க ஆரோக்கியமா வளருவாங்க. கூடவே, பாலின அதிகாரமோ, வெறுப்போ இல்லாம இருப்பாங்க!

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles