தொலைதொடர்பு சாதனம் வரப்பிரசாதமா, சாபமா?

Monday, October 24, 2016

விஞ்ஞான உலகில் தொலைதொடர்பு சாதனங்களின் பங்கு மகத்தானது. தொலைவில் இருப்பவர்களுடன் செய்திகளைப் (படங்கள், எழுத்து, பேச்சு) பகிர்ந்து கொள்ள உதவும் சாதனம் என்பதாலே, அதற்குத் தொலைதொடர்பு சாதனம் என்று பெயர். தொலைதொடர்பு சாதனங்களாக நாம் மிகவும் உபயோகிப்பது தொலைபேசி, கைபேசி, இணையம் போன்றவையே!

முற்காலத்தில் ஒரு செய்தியை, படங்களைப் பகிர்ந்துகொள்ள மிகவும் காலதாமதமாகும். ஆனால், இன்றோ செய்தி மட்டுமல்ல; காணும் காட்சிகளைக் கூட உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள முடியும். இத்தகைய பொன்னான வசதிகளை, பெரும்பாலும் நாம் பயனுள்ளதாகப் பயன்படுத்துகிறோமா? உதாரணமாக, வேண்டாத / கெட்ட / உண்மையில்லாத செய்திகளைப் பரப்புகிறோம். இல்லையென்றால், ஒரே வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ/ அருகாமையில் இருப்பவர்களிடமோ பேச / செய்திகளை அனுப்பப் பயன்படுத்துகிறோம்.

 

தொலைதொடர்பு சாதனங்கள் தொலைவில் இருப்பவர்களை அருகாமையில் கொண்டுவந்தது தொலைந்துபோய், தற்போது அருகாமையில் இருப்பவர்களைக் கூட தனிமைப்படுத்திவிட்டது. தகவல் தொடர்பின் ஒருசேவை குறுஞ்செய்திகள் அனுப்புவது, அது இப்போது பெருஞ்செய்திகளாகிவிட்டது. 

 

கண்ணில் காணும் காட்சிகள் யாவையும் புகைப்படம் எடுத்து, அந்தக் கருவிகளை டிஜிட்டல் குப்பைத் தொட்டியாகவே ஆக்கிவிட்டோம். தேவைக்கேற்ற சாதனங்கள் / சேவைகள் வாங்குவதுபோய், புதிய வரவுகள் சாதனங்களாக இருந்தாலும் சரி, சேவைகளாக இருந்தாலும் சரி, உடனடியாக வாங்கிக் கடனாளியாகிறோம். இவ்வாறு செய்வதை வாழ்க்கையின் ஒரு தரமாகவே (ஸ்டேட்டஸ்) கருதுகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டு, பேசி, மகிழ்ந்தது போய் கற்பனை உலகத்தில் வாழ்கிறோம். வாகனத்தில் பயணிக்கும்போது செல்போனோடு உறவாடி, உறவுகளை இழக்கிறோம். 

 

சமீபகாலத்தில் வந்த ஓர் ஆய்வின்படி, சராசரியாக நாற்பது விநாடிகளுக்கு ஒருமுறை நாம் கைபேசியை எடுத்து உபயோகிக்கிறோம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இது மிகப்பெரிய மனச்சிதைவை உண்டாக்கக் கூடியது. எனவே, ’அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு’ என்ற பழமொழியின்படி தேவைக்கேற்ப பயன்படுத்தி, மகிழ்வோமே!

- சோம.இராமநாதன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles