அந்த மாமனிதர் எனக்காகப் பாடினார்! பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு சிவகுமார் இரங்கல்!

Thursday, November 24, 2016

கர்னாடக இசை உலக மாமேதை பாலமுரளி கிருஷ்ணா(86), கடந்த செவ்வாய் கிழமை அன்று காலமானார். நடிகர் கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும், பாடகர் கே.ஜே.ஏசுதாஸ் உள்ளிட்ட இசைப் பிரபலங்களும் நேரில் வந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவு குறித்து, நடிகர் சிவகுமார் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். 

"பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் கர்னாடக சங்கீதத்தின் பீஷ்மர் என்று சொல்லலாம். அவர், அகில இந்திய அளவில் மத்திய அரசின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். அப்படிப்பட்ட மனிதர் சினிமாவுக்கு வருவதை, யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் அதையும் தாண்டி, அந்த மாமனிதர் அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, திருவிளையாடல் படத்தில் டி.எஸ்.பாலையா அவர்களுக்கு "ஒரு நாள் போதுமா, இன்றொரு நாள் போதுமா" என்ற பாடலைப் பாடினார். அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியதற்கு, அந்தப் பாடல் 25% சதவிகிதம் காரணமாக அமைந்தது.

அதன்பிறகு, அவர் வேறு நடிகர்களுக்கு டூயட் பாடியதாக ஞாபகம் இல்லை. ஆனால், இளையராஜா இசையில் 'கவிக்குயில்' படத்தில் எனக்காக அவர் பாடினார். அந்தப் பாடலுக்காக, அதிகாலை 3 மணியளவில் முடுகர என்னும் இடத்தில் நானும் ஸ்ரீதேவியும் கிருஷ்ணா - ராதா வேடத்தில் நடித்தோம். அந்தப் பாடல் "சின்னக் கண்ணன் அழைகிறான்" என்கிற பாடல் காட்சி எடுத்தோம். அந்தப் பாடல் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் மறக்க முடியாத பாடல். அந்த மாமனிதர் எனக்காகப் பாடினார், அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் சிவகுமார்..

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles