பொட்டல் காட்டை கிரிக்கெட் கிரவுண்டாக மாற்றினோம்! ஆர்ட் டைரக்டர் விதேஷ் பெருமிதம்!

Tuesday, November 15, 2016

ஒரு திரைப்படத்தில் ஆர்ட் டைரக்டரின் பங்கு மிகவும் அத்தியாவசியமானது. திரைக்கதையில் இல்லாத ஒரு இடமோ, பொருளோ தேவைப்பட்டால், இயக்குனரின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு, எப்பாடுபட்டாவது அதனை ஷூட்டிங்ஸ்பாட்டில் சேர்த்துவிட வேண்டியது சம்பந்தப்பட்ட ஆர்ட் டைரக்டரின் பொறுப்பு. அந்தப் புரிதல் வந்துவிட்டால், இயக்குனருக்கும் அவருக்குமான பந்தம் என்றென்றும் தொடரும்.

அந்தவகையில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் 'சென்னை 28' படம் தொடங்கி, அதனுடைய இரண்டாவது பாகத்திலும் கைகோர்த்திருப்பவர் விதேஷ். 'சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்' படத்தில் ஒரு கலை இயக்குனராகத் தன்னுடைய பங்களிப்பு பற்றி, இங்கே மனம் திறக்கிறார்!

 

" 'சென்னை 28' பார்ட் ஒண்ணுல ஈஸியா வேலை பார்த்துட்டேன். ஏன்னா, அந்தப் படத்துல நடிச்சவங்க எல்லோருமே புதுமுகம். அது குறைந்த பட்ஜெட்டுல எடுக்கப்பட்ட படம் வேற. ஆனா, செகண்ட் இன்னிங்ஸ் அதுக்கு நேர் எதிர். காரணம், அதுல நடிச்சவங்க எல்லோருமே இப்போ பெரிய ஹீரோவா ஆயிட்டாங்க. படமும் பெரிய பட்ஜெட் ஆயிடுச்சு. அதனால, இந்தப் படம் எல்லோருக்குமே ரிஸ்க்தான். ஏன்னா, கண்டிப்பா ஜெயிச்சே ஆகணும். ஆனா, ஷூட்டிங்கின்போது ஹீரோக்கள் எல்லோருமே கலகலப்பாதான் இருந்தாங்க. வெங்கட் பிரபு சார் புரொடக்‌ஷன் கம்பெனி எங்களுக்கு எல்லாம் தாய் வீடு மாதிரி. அதனால, எல்லோரும் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்தோம். 

 

பிளாக் டிக்கெட் கம்பெனியை பொறுத்தவரைக்கும், அது வி.பி.சாரோடது மட்டும் இல்லை. எங்களோட கம்பெனிதான் அது. அந்தமாதிரி நினைச்சுதான் வேலை பார்த்தோம். பெரிய செலவுகளை எல்லாம் இழுத்துவிடாமல், குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் வேலைகளை முடிச்சோம். முன்னாடியெல்லாம் ஒரு காட்சியை ஷூட் பண்ணணும்னா, முழுசா செட் போட்டு படம்பிடிப்போம். இப்போ செலவைக் குறைக்கிறதுக்காக, எந்தப் பகுதி மட்டும் தேவையோ அதை கேமிராமேனோடு விவாதித்து, அதற்கான செட்டை மட்டும் போட்டோம். அதைத் தாண்டிப் போகலை!

 

'சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்' படத்தோட மையமே கிரிக்கெட்தான்கறதால, முதல்லயே கிரவுண்டுகளை தேட ஆரம்பிச்சோம். கதைப்படி, மலைக்கு நடுவே ஒரு கிரவுண்டு தேவை. அதற்காக, தேனி மாவட்டத்துல ஒரு பொட்டல் காட்டைக் கண்டுபிடிச்சோம். அந்த இடத்தை கிரிக்கெட் கிரவுண்டாக மாத்துறதுக்குள்ள பெரும்பாடாகிப் போச்சு. ஏன்னா, மைதானத்தை ரெடி பண்றதுக்கு ஒரு டிராக்டர் கூட கிடைக்கலை. மிகுந்த சிரமத்துக்கு இடையேதான், அந்த கிரவுண்டு ரெடி பண்ணினோம். அதுதான் எங்களுக்கு சவாலாக இருந்துச்சு!

 

டைரக்டர் வெங்கட் பிரபு சாரைப் பொறுத்துவரைக்கும், கூட வேலை பார்க்கிற எல்லோரையும் முழுசா நம்புவாரு. ஆரம்பத்துலேயே சொன்ன மாதிரி, நாங்க எல்லோரும் இந்தப் படத்தை எங்களோட சொந்த புரொடக்‌ஷனாகத்தான் பார்த்தோமே தவிர, வெறும் டெக்னீஷியன்களாக மட்டும் வேலை பார்க்கலை. படப்பிடிப்பு ஆரம்பிக்கிறதுல இருந்து முடியறவரைக்கும், எல்லோரும் ஒண்ணா இருந்தோம். 

 

தினமும் படப்பிடிப்பு முடிஞ்சுட்டா, அடுத்த நாளுக்கான வேலையைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம். அவரவர்க்கான வேலைகளைப் பிரிச்சுக்கிட்டு சிறப்பா செயல்பட்டோம். 'சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்' படத்தைப் பொறுத்தவரை, நாங்க எல்லோரும் ஒரே பேமிலி. எங்களோட டீம் லீடர் வி.பி.சார்தான்!" என்று முத்தாய்ப்பாக முடித்தார் விதேஷ். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles