ரசனை!

Tuesday, November 8, 2016

ரசனை மனிதனுக்கு மட்டுமே உண்டு.  ரசிக்கத் தெரிந்தவன் தான் மனிதன், இல்லையென்றால் மிருகம். அவனை ரசனை கெட்டவன் என்றும் அழைப்போம்.

ஒரு விஷயத்தைப் பார்த்து/படித்து/பேசி/கேட்டு/நுகர்ந்து/சுவைத்து ஏன்  உணர்ந்து கூட ரசிக்கலாம். ரசிப்புத்தன்மை அதிகப்படும்பொழுது, மனிதனிடம் கலை பிறக்கின்றது. கலைஞர்களே, மற்றவர்களின் ரசிப்புத்தன்மையைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார்கள். ரசிப்பவனின் இதயம் லேசானது. பொதுவாக, அவன் அனைவரிடமும் அன்பு காட்டுவான்.

எந்தப் பணியையும் ரசித்து, செய்தால் அதன் முடிவு வெற்றியாகவே இருக்கும். சுற்றுலாச் சென்றுதான் ரசிக்க வேண்டும் என்பதில்லை. நம்மைச் சுற்றி ரசிக்க தகுந்த விஷயங்கள் ஏராளமுண்டு. நாம் அதை ஒருபோதும் செய்வதில்லை. குறிப்பாக,

 • அதிகாலையில் சூரியனைப் பார்த்துக் கொண்டே தேநீர் பருகுவது.
 • நல்ல சமையலின் வாசனையை நுகர்வது. சமைக்கும்பொழுது ஏற்படும் ஓசையை உணர்வது. பிடித்த உணவை ருசித்துச் சாப்பிடுவது. 
 • கொழுகொழு குழந்தைகளின் கன்னத்தில் கிள்ளுவது. மழலைப் பேச்சு.
 • உறக்கத்தில் அன்பானவர்களைப் பற்றிக் கொள்வது; இல்லையேல், இழுத்துப் போர்த்திக் கொள்வது. 
 • மோட்டார் சைக்கிள் பயணத்தின்போது, படாமல்படும் பிடித்தவளின் ஸ்பரிசம்.
 • மாலையில் வீட்டினுள் எட்டிப் பார்க்கும் சூரிய ஒளி.
 • செல்ல குழந்தையின் கோபம்.
 • அன்பானவர்களின் திட்டு.
 • சக பணியாளர்களின் நகைச்சுவை.
 • நெரிசல் இல்லாத நேரத்தில் வாகனத்தில் பயணிப்பது.
 • கோயில்களில் தனியாக சிறிது நேரம் அமர்ந்து இருப்பது.
 • படித்து, ரசித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்வது.
 • உடை, நடை, வடிவம், குணம், பேச்சு என்று அடுத்தவர்களிடம் பிடித்த விஷயங்களைப் பாராட்டுவது.
 • பசியால் இருக்கும் ஏழைக்கு உணவு கொடுத்து உபசரிப்பது.
 • விண்ணில் பறக்கும் விமானம். தனக்கே உரிய ஓசையுடன் பயணிக்கும் ரயில். அழகு அழகான வடிவத்தில் கண்ணைப் பறிக்கும் கார்கள்.
 • அலுவலகத்தில் தன்னை மட்டுமே பார்த்த அவளின் ஒற்றைப் பார்வை மற்றும் புன்சிரிப்பு
 • அமைதிக்கு நடுவில் அந்தக் காலணியின் ஓசை.
 • விரும்பியவனைச் சீண்டிப் பார்க்கும் பெண்கள்.
 • இரவில் மொட்டை மாடியில் வானத்தைப் பார்த்துக்கொண்டே, சிறிது நேரம் பிடித்த பாடல்களைக் கேட்பது.

என்று நமது வாழ்வில் கூட ரசிப்பதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. எனவே, அன்றாடம் செய்யும் செயல்களையும் விஷயங்களையும் ரசிக்கலாம். அது நமக்கு மன அமைதியையும், நிம்மதியையும், புதுப்புது எண்ணங்களையும், நோயில்லாத வாழ்க்கையையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. 

- சோம.இராமநாதன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles