வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களால் தான்  அந்த வலியை உணர முடியும்!  சுளீரெனப் பேசும் உமாபதி

Saturday, December 31, 2016

வெண்புள்ளி என்பது பரம்பரை நோயோ அல்லது தொற்று நோயோ அல்ல. இருந்தாலும், அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை திருமணம் செய்ய ஏன் யாரும் முன்வருவதில்லை? அந்தக் குறைபாடு பற்றிய புரிதல் உடைய எல்லோருக்குள்ளும் இருக்கும் கேள்வி இது. இந்தக் கேள்வியை முன்வைத்ததும், “அப்படியொருவரை நீங்கள் திருமணம் செய்து கொண்டிருப்பீர்களா?” என்று எதிர்க்கேள்வி கேட்டு நம்மை திகைப்புக்கு உள்ளாக்கினார் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் உமாபதி.

தன்னைப்போன்றவர்களை ஒருங்கிணைத்து, வெண்புள்ளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கிறார் இவர். வெண்புள்ளிக்கான காரணத்தில் தொடங்கி, இந்தச் சமூகம் அப்பாதிப்பு கொண்டவர்களை நடத்தும் விதம் வரை பல கேள்விகளுக்குத் தெளிவான பதிலைத் தந்தார்.

“வெண்புள்ளி என்பது நோய் தொற்று அல்ல, அது ஒரு விதமான நிறமிழப்பு தான். மனிதர்களை இரண்டு நிறங்களிலேயே பார்த்துப் பழகிவிட்டோம். அதனால், மனதளவில் இவர்களை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமான இருக்கிறது. ஆகவே, நாங்கள் ஏழு பேர் சேர்ந்து ’வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் - இந்தியா’ என்ற அமைப்பைத் தொடங்கினோம். இதுவரை, வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட 387 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறோம்” என்று சிலாகிக்கும் இவர், கடந்த 1996 ஆம் ஆண்டு வெண்புள்ளி பாதிப்பைச் சந்தித்தவர். 

“அடிப்படையில் நான் ஒரு ஹோமியோபதி மருத்துவன் என்பதால், வெண்புள்ளி பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிவிட்டேன். வெண்புள்ளி என்பது பாக்டீரியாவாலோ அல்லது வைரஸாலோ பரவக்கூடிய ஒரு நோய் அல்ல; நிறமிழப்பு தான்.  

எல்லோரது உடலிலும் சிவப்பு மற்றும் வெள்ளை அணு என்று இரண்டு வகையான ரத்த அணுக்கள் இருப்பது, நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இதில் வெள்ளை அணுக்கள், நம் உடலில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க உதவுகிறது. தோலுக்கு நிறமளிக்கக்கூடிய மெலனின் என்கிற நிறமியை உற்பத்தி செய்யக்கூடியதே மெலனோசைட். தோலில் இருக்கக்கூடிய நட்பு செல்லான மெலனோசைட் கொல்லப்படும்பொழுது வெண்புள்ளிகள் ஏற்படுகிறது. 

எனவே, வெண்புள்ளி ஏற்பட்டவர்கள் பதட்டமடையாமல், உடனடியாக தோல் மருத்துவரை அணுகுதல் நலம். ஏனெனில், பதட்டமே நோய் பரவுதலுக்குக் காரணமாக அமையும். ஒரு குச்சியைக் கொண்டு பாதிப்படைந்த இடத்தில் குத்தி பார்ப்பார் மருத்துவர். வலி ஏற்பட்டால், அது விட்டிலைகோ என்று சொல்லக் கூடிய வெண்புள்ளி (லூகோடர்மா). வலி ஏற்படவில்லை என்றால், அது தொழு நோய்க்கான குறிகுணங்கள்.

முன்பெல்லாம், வெண்புள்ளியை வெண்குஷ்டம் என்றே கூறி வந்தனர். Leuko- என்றால் வெள்ளை, Derma என்றால் தோல். அதாவது தோலில் ஏற்படக்கூடிய வெள்ளை என்பதால், இதை வெண்புள்ளி என அழைக்க வேண்டும் என்ற ஒரு அரசாணையைப் பெற்றுள்ளோம்” என்ற உமாபதி, வெண்புள்ளியினால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பாதிப்புகளைப் பற்றியும் பேசினார். 

“வெண்புள்ளி ஏற்பட்டவர்கள் அதிகளவில் உளவியல் பாதிப்புகளுக்குத்தான் உள்ளாகின்றனர். அவர்கள், வெண்புள்ளியைப் பற்றி திரட்டி வைத்த செய்திகளோடு எங்களிடம் வருகின்றனர். நாங்கள், அவர்களுக்காக சில கருத்தரங்குகள், விழிப்புணர்வு முகாம்கள், மனிதச்சங்கிலி போன்றவை நடத்துகிறோம்; வெண்புள்ளியைப் பற்றி முழுவதுமாகத் தெளிவுபடுத்துகிறோம். இதன்பிறகே, பாதிக்கப்பட்டவர்களின் நிலை வேறுமாதிரியாவதைக் காண்கிறோம்.

சொந்தங்களே நிராகரிக்கக்கூடிய அவல நிலையில், வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். எவ்வளவு பெரிய பதவி, சம்பளத்தில் இருந்தாலும் கூட அவர்களைத் திருமணம் செய்ய யாரும் முன்வருவதில்லை. இதனால் தாழ்வு மனப்பான்மை உண்டாவதால், திருமணமே வேண்டாம் என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தங்களது வாழ்க்கைத்துணை சாதாரணமாகப் பேசும் வார்த்தை கூட, தங்களைக் காயப்படுத்தக்கூடும் என்ற பயமே இதற்குக் காரணம். 

அவர்களின் மனக்குறைகளைப் போக்க, முதல்முறையாக திருச்சி தேசிய கல்லூரியில் சுயம்வரத்தை அரங்கேற்றினோம். இதில், வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தோடு பங்கெடுத்து, தங்களுக்கு ஏற்ற துணையைத் தேர்வு செய்யலாம் என்று அறிவித்தோம். 
இதற்காக, எந்தவிதமான கட்டணங்களையும் நாங்கள் வசூலிக்கவில்லை. எங்கள் இயக்கத்தால் பயனடைந்த பலர் சத்திரம், வாடகை, தண்ணீர், சாப்பாடு போன்றவைகளை வழங்குகின்றனர். நாங்கள் எந்தவிதமான ஸ்பான்சர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை. 

எங்களது முதல் சுயம்வரத்திலேயே, எட்டு ஜோடிகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. தற்போது வரை, எங்கள் இயக்கத்தின் மூலம் 387 ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளது” என்றவரிடம், இதில் உறுப்பினராக்குவதற்கான வழிமுறைகளைக் கேட்டோம். 

“வெண்புள்ளி இயக்கத்தில் உறுப்பினர் ஆகவேண்டுமெனில், அவர்கள் வெண்புள்ளியினால் பாதிக்கப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். ஏனென்றால், பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் உண்மையான மனநிலையை உணர்ந்து, அவர்களுக்கான தேவைகளைச் செய்ய முடியும்.

பாதிக்கப்பட்டவர்களைத் தேற்றுவதற்கு, நாங்கள் உலகப் புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்ஸனையே உதாரணமாகச் சொல்கிறோம். மைக்கேல் ஜாக்ஸனும் விட்டிலிகோவினால் பாதிக்கப்பட்டவர் தான். ’நீங்கள் அறுவை சிகிச்சை செய்துதான் வெள்ளையாகி இருக்கிறீர்களாமே?’ என்று அவரிடம் ஊடகங்கள் கேட்டபோது, “ நான் ஒரு கருப்பன். இதற்காக, நான் பெருமை கொள்கிறேன். எனக்கு வெண்புள்ளி வந்ததால், என்னுடைய நிறம் மாறியிருக்கிறது. என்னுடைய அடையாளம் தோல் அல்ல, என்னுடைய இசையும் நடனமும்தான்’ என்று பெருமையுடன் கூறியிருக்கிறார். இதுபோன்ற சில உதாரணங்களை நாங்கள் சுட்டிக் காட்டி, தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிக்கொணர்வோம். அதோடு,‘வெண்புள்ளிகளும் தீர்வும்' என்ற நூல் மூலம் அவர்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம்.

இந்த நேரத்தில், கொடுமையான விஷயம் ஒன்றை நினைவுகூர விரும்புறேன். அய்யப்பன் என்ற மாணவன், நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்து, ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். வெண்புள்ளியால பாதிக்கப்பட்ட அந்த மாணவனை, அந்த கல்வி நிறுவனம் வெளியேறச் சொல்லியது. அந்த மாணவனோட தாயார், சத்துணவுக் கூடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எங்கள் இயக்கத்தைப் பற்றி கேள்விப்பட்டு, எங்களிடம் வந்து நடந்ததைச் சொன்னார். எங்கள் அமைப்பைச் சார்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வாதாடி, அந்த மாணவனை மீண்டும் அதே பல்கலைக்கழகத்தில் படிக்க வச்சோம். அது ஒரு மறக்க முடியாத அனுபவம். அறியாமையை போக்கும் கல்வித்துறைன்னு சொல்றோம்; ஆனால், இதுமாதிரி ஒரு நிகழ்வு பல்கலைக்கழகத்துல நடந்திருக்கு. அவங்க மன்னிப்பு கேட்டதால, அந்த பல்கலைக்கழகத்தோட பெயரைச் சொல்ல விரும்பலை. 

நம் கண்களுக்கே புலப்படாமல், நம்ம நாட்டுல நிறைய சேவைகளை செஞ்சுட்டுதான் வர்றாங்க. அதனால விருதுகள், ஊடகங்களின் வெளிச்சம் போன்ற விஷயங்களை நாங்கள் எதிர்பார்க்குறதே இல்லை. வெண்புள்ளியால பாதிக்கப்பட்டவங்க திருமணமாகி வாழ்க்கையில நிலையான இடத்துக்கு வருவாங்க, மருந்துகள் சாப்பிட்டு வெண்புள்ளிகள் மறைஞ்சதும் கண்கள்ல ஆனந்தக் கண்ணீரோட நன்றி சொல்லுவாங்க இல்லியா, அதுதான் எங்களுக்கு உண்மையாகவே விருது வாங்கித் தர்ற தருணம்” என்றார் உமாபதி. 

பிறருக்குச் செய்வதைச் சேவையாகக் கருதாமல், சக மனிதருக்குச் செய்யும் உதவியாகவும் கடமையாகவும் நினைக்கிறார்கள் இவரும் இவரைச் சார்ந்தவர்களும். அதை மனதில் இருத்தி போற்றுவதைத் தவிர, நம்மால் வேறென்ன கைமாறு செய்ய முடியும்!?

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles