வாரிச் சுருட்டிய வர்தா புயல்! சிறப்புக் கட்டுரை

Friday, December 16, 2016

இந்தியாவின் அழகுமிகு மாநகரங்களில் சென்னைக்கு எப்போதும் முதலிடம் உண்டு. அதனால்தான், உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் எண்ணற்ற நகரங்களின் பட்டியலில் முதல் 25 இடங்களுக்குள் இடம்பெற்றிருக்கிறது சென்னை. அதற்குக் காரணமாக, நீண்ட பட்டியலையே வாசிக்க முடியும். உதாரணத்துக்கு மெரினா கடற்கரை, பர்மா, பாண்டி பஜார், மாமல்லபுர சிற்பங்கள், தெய்வீக மனம் கமிழும் கோயில்கள் என அடுக்கலாம். ஆனால், அத்தகைய சென்னையை இப்போது யாரேனும் சுற்றிப்பார்க்கும் ஆசையோடு வந்தால், நிலைமை தலைகீழ். எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் ’வர்தா’!

"யார் இந்த தாதா?" என்று கேட்கிறீர்கள். உண்மையில், வர்தா தாதாவுக்கு எல்லாம் தாதா. வேண்டுமெனில் இயற்கையே நேரடியாக அனுப்பிய டான் என வைத்துக்கொள்ளுங்கள். "அப்படியென்ன இந்த டான் செய்துவிட்டார்?" என்று நீங்கள் முனுமுனுப்பதும் காதில் விழுகிறது. சில மணி நேரங்களுக்குள்ளாக, சுமார் 8,300 கோடி (தோராய மதிப்பீடுதான்) இழப்பை சென்னை நகருக்கு ஏற்படுத்திய புயலின் பெயர்தான் வர்தா. 

கடந்த டிசம்பர் 12 அன்று பிற்பகல் ஒரு மணியில் இருந்து நான்கு மணிக்குள்ளாக, தமிழகத்தினுள் அதிரடியாய் உலாவந்தது வர்தா. சென்னையை மட்டுமல்ல; திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களையும் தனது அதிரடி தாக்குதலால் நிலைகுலையச் செய்தது. வர்தாவின் சுழலில் சிக்கி 10 ஆயிரம் மின் கம்பங்கள், 400 டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்தன. தெருக்களிலும் சாலைகளிலும் நிறுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் பழுதடைந்தன. ரயில் நிலையங்களையும் கூட, இது விட்டு வைக்கவில்லை. சில உயிர்களையும் பலி வாங்கியது. அதைவிடக் கொடூரம், சென்னைக்கு அழகு சேர்த்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்த்தும், வேரோடு பிய்த்தும் எறியப்பட்டதும்தான்!

வங்கக்கடலில் விஸ்வரூபம் எடுத்த வர்தா, தன்னுடைய அதிதீவிர பயணத்தில் (மணிக்கு 190 கி.லோ மீட்டர் வேகம்) மூன்று மாநிலங்களைக் கடந்து, இறுதியாக அரபிக்கடலில் சங்கமித்துவிட்டதாக பின்னர் வானிலை மையம் அறிவித்தது. ஆனால், அது கடந்து சென்ற பாதையைப் பார்த்தோர் மனது பதறியது. வர்தா ஆடியது சாதாரண ஆட்டமல்ல; கோரத்தாண்டவம்!
                        
ஏற்கனவே நீலம், நாடா என சின்னச்சின்ன புயலை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சென்னை மாநகர மக்கள், வர்தாவின் வரவையும் அப்படியே எண்ணினர். மிஸ்டர் பொதுஜனம் தயாராவதற்குள், வானிலை மையமும் அரசு இயந்திரமும் சுதாரித்துக்கொண்டன. தொலைக்காட்சி முன் தோன்றி, முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தன. இந்த இடத்தில், நாம் அரசு அதிகாரிகளைப் பாராட்டியே ஆக வேண்டும். முன் எச்சரிக்கையின் வழியே, தேவையான மெழுகுவர்த்திகளை வாங்கி வைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது; அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்ததோடு, தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணிகளைச் செய்ய ஆணையிட வலியுறுத்தியது. 

அது மட்டுமல்ல; ஐந்து மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் சென்னைக்கு முன்கூட்டியே அழைத்துவரப்பட்டனர். கடற்கரையோர மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்ததோடு, அவர்களுக்கு வழக்கமாக அளிக்கப்படும் டீசல் நிறுத்தப்பட்டது. 

இப்படியாகப் பல நடவடிக்கைகள் எடுத்ததாலேயே, இழப்பில் சிறிதளவேனும் குறைந்திருக்கிறது என்பதை மறுக்கலாகாது. சரியாக இரண்டு நாட்களுக்குப் பிறகு மின் விநியோகம் சீரடையும் என்று சொன்னபடியே, சென்னையில் பல பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கி ஆச்சர்யப்பட வைத்தனர் அதிகாரிகள். அனைத்துச் சாலைகளிலும் மரங்களைத் தள்ளி மூடிவிட்டுச் சென்ற வர்தாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், களத்தில் அரசுப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் இரவுபகலை கவனத்தில் கொள்ளாமல் பணியாற்றினர்; இப்போதும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதனாலேயே, சென்னை தனது பரபரப்பு இயல்பை வேகமாக மீட்டெடுத்திருக்கிறது. 

"எல்லாம் சரி, இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன?" என்ற உங்களது கேள்விக்கு பதிலுண்டு. மழையோ, புயலோ, பனியோ, வெயிலோ எல்லாமே வழக்கத்தைவிட அதிகமாகவே இப்போது நமக்குக் கிடைக்கிறது. அந்தவகையில் பின்னாலே காத்திருக்கிறது கோடை. கூடுமானவரை, கத்தரி வெயிலில் இருந்து நம்மை இதுவரை காத்து நின்ற லட்சக்கணக்கான மரங்களைத் தற்போது இழந்துள்ளோம். எனவே, வெயிலின் பாதிப்பை இந்த முறை நாம் கூடுதலாகவே அனுபவிப்போம். 

ஆகவே, சாய்ந்த மரங்களை வேரோடு பெயர்த்து எடுக்காமல், கிளைகளை மட்டும் வெட்டலாம்; அரசு ஊழியர்களோடு இணைந்து பணியாற்றலாம். ’பக்கத்து வீட்டு மரம்தானே, நமக்கென்ன வந்தது’ என்றிராமல், சில சிறிய மரங்களை தூக்கி நிறுத்தினாலே போதும்; அது மேற்கொண்டு தன் வளர்ச்சியைப் பார்த்துக்கொள்ளும். முழுவதுமாகப் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி எடுக்கும்போது, அந்த இடத்தில் புதிய மரக்கன்றுகளை நடலாம். இதையெல்லாம் தனி ஒருவராக யாராலும் செய்ய முடியாததுதான். ஆனால், கடந்த வெள்ளத்தில் எப்படி நண்பர்களோடு இணைந்து வெள்ளச் சேதங்களை துடைத்து எறிந்தோமோ, அப்படியே இப்போதும் நாம் கைகோர்க்கும் தருணம் இது!

உண்மையில் வர்தா ஏற்படுத்திய பாதிப்புகளை சரிசெய்ய, இன்னும் சில வாரங்களோ, மாதங்களோ ஆகலாம். ஆனால், அது ஏற்படுத்திய வடு மாறுவதற்கு இன்னும் சில வருடங்கள் கூட தேவைப்படும். வடுவின் ரேகைகள் எப்போதும் நம் கண்களில் அகப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். அதை மறைக்க முடியாது. மாறாக, பூமியின் அழிவுக்கு எதிரான மனிதனின் எந்த யுத்தத்தையும் தன்னால் சில மணித்துளிகளில் சரிசெய்துவிட முடியும் என்ற படிப்பினையைத் தான் வர்தா புயல் நமக்கு உணர்த்தியிருக்கிறது. 

இயற்கை சீற்றங்கள் எப்போதும் ஒன்றேயொன்றைத்தான் திரும்பத் திரும்ப நம்மிடம் வலியுறுத்துகின்றன. இந்தப் பூமியில் மனிதர்கள் இருப்பு என்பது இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கே!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles