இயற்கை விவசாயம்தான் இனி நம் வாழ்வாதாரம்! நடிகர் ஆரியின் புது அவதாரம்!

Wednesday, August 31, 2016

நாம், நம்முடைய ஆரோக்கியத்தை நாளுக்கு நாள் இழந்துகொண்டே வருகிறோம். இதற்குக் காரணம், ரசாயன உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது தான். இதன்மூலமாக, நம்முடைய பாரம்பரிய உணவுமுறை அழிந்துகொண்டே வருகிறது. ஆரோக்கியமான உணவுதான், நம்முடைய ஆரோக்கியமான வாழ்வுக்கும் வழிவகுக்கும். இதனை உணராமல், ஒரு தலைமுறையின் வாழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய உணவுமுறையை மீட்டெடுக்க வேண்டுமானால், இயற்கை வேளாண்மை உற்பத்தியை அதிகரிப்பது அவசியம். 

பாரம்பரிய உணவுமுறை மற்றும் இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுக்கும் விதமாக, கடந்த ஆண்டு ஜூன் 13ம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் களமிறங்கினார் நடிகர் ஆரி. தனது ரசிகர் மன்றம் மூலமாக, முதல் முயற்சியை மேற்கொண்டார். அங்கிருக்கிற விவசாயிகளிடம், கெமிக்கல் உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயிர்களுக்கு இடுமாறு கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்ற ரங்கநாதன் என்கிற விவசாயி, தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் சேப்பங்கிழங்கு, வாழை, செம்பருத்தி, கற்றாழை உள்ளிட்ட பயிர்களை நடுவதற்கு ஒப்புக்கொண்டார்.

 

அந்த சுற்றுவட்டாரத்தில், இதுதான் இயற்கை மாற்று விவசாயத்துக்கான முதல் விதை. இந்த முயற்சியில் வெற்றி பெறுவதற்காக, ஆரி தனது மனைவி நதியா மற்றும் ரசிகர்களுடன் சேர்ந்து, அந்த நிலத்தில் பல்வேறுபயிர்களை நடவு செய்தனர். இப்போது, அறுவடைக்கான நேரம் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. முதல் போகத்திலேயே பெரிய மகசூல் கிடைத்திருப்பதால், விவசாயி ரங்கநாதனுக்கு ஏக சந்தோஷம். இந்த விஷயம், அந்தப் பகுதியைச் சேர்ந்த  இயற்கை வேளாண்மை அதிகாரிகளின் காதுகளுக்கும் எட்டியிருக்கிறது. 

 

அடுத்த நாளே, வேளாண் அதிகாரிகள் குழு ரங்கநாதன் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகளைப் பார்வையிடப் பறந்திருக்கிறது. நிலத்தில் விளைந்த காய்கறிகளில் சிலவற்றை, அவர்கள் ஆய்வுக்காக எடுத்தும் சென்றிருக்கின்றனர். அந்த ஆய்வின் முடிவில், காய்கறிகள் ஆரோக்கியமா இருப்பதை அறிந்தவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி. இந்த விஷயத்தை மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். தற்போது, இதற்குக் காரணமான நடிகர் ஆரிக்குப் பாராட்டு விழா நடத்துவதற்கு, சென்னையில் தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

 

சரி, மாற்று விவசாயத்துக்கு முன்வந்த ரங்கநாதனுக்கு என்ன கிடைத்தது என்று கேட்கிறீர்களா? நிலத்தில் மட்டுமல்ல, அந்த விவசாயின் வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள். வேளாண் அதிகாரிகள், அவருக்கு முதல் தவணையாக 40 ஆயிரம் ரூபாய் கடன் தந்திருக்கிறார்கள். தனது நிலத்தில் விளைந்த காய்கறி மகசூல் மூலமாக, ரங்கநாதனுக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்கிறது. அதுமட்டும் இல்லாமல், முருங்கை, கீரை வகைகள், கத்திரி, வெண்டை, வாழை, செம்பருத்தி, கற்றாழை உள்ளிட்டவற்றை தன் நிலத்திலேயே விற்பனைக்கும் வைத்திருக்கிறார். அதோடு, இயற்கை மாற்று விவசாயத்தை ஊக்குவித்த ஆரி பெயரிலேயே அந்த அங்காடியைத் திறந்திருக்கிறார். இப்போது அந்த ஊரிலுள்ள விவசாயச் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் யார் தெரியுமோ? ரங்கநாதன்தான்!

 

சமீபத்தில் ரங்கநாதனுடைய பசுமை அங்காடியைத் திறந்து வைத்த நடிகர் ஆரியைத் தொடர்பு கொண்டோம். 

 

“இனிமேலும், விவசாய நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவது முட்டாள்தனமான முயற்சி. இனி இயற்கை விவசாயத்தை நோக்கிதான் நாம திரும்ப வேண்டி வரும் என்பதை, அவர்களிடம் வலியுறுத்தி பேசினேன். இனி விவசாயிகள்தான் கோடீஸ்வரர்களாக இருக்கப் போறாங்க. இந்தியாவினுடைய முதுகெலும்பு விவசாயம்தான். இடையில, நாம அதை மறந்துட்டோம். இப்போ மீண்டும் பழைய இடத்துக்கு திரும்புற நேரம் வந்திருக்கு. திருவண்ணாமலையில ஏற்பட்டிருக்கிற இந்த மாற்றம், மெல்ல மெல்ல எல்லா விவசாயிகளை நோக்கியும் செல்லணும் என்பதுதான் என்னோட விருப்பம். 

 

நமது மக்களும் இயற்கை விவசாயப் பொருட்களை நோக்கி திரும்பிட்டாங்க. அதனால, வருங்காலம் என்பது இனி விவசாயிகள் கையில்தான். ஏற்கனவே கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாயத்தின் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பியிருக்கு. இனி விவசாயிகள் தானே பயிர்செய்து, தானே விற்பனை செய்யும் சூழல்தான் உருவாகும். இடைத்தரகர்கள் இல்லாமலேயே, தன்னுடைய விவசாய பொருட்களை பெரும்பாலான மக்கள்கிட்டே கொண்டு போய் சேர்க்க முடியும். வரும் காலங்களில் இயற்கை விவசாயம்தான் நம்முடைய வாழ்வாதாரமா இருக்கும்!” என்று நம்பிக்கையோடு பேசினார். ஆரோக்கியமான உணவை நேசிக்கிறவங்க, இனி இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட பொருட்களை வாங்கலாமே!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles