புறக்கணிக்கலாம் வாங்க..! 

Friday, August 26, 2016

'வித்தியாசமாகச் செய்கிறேன் பேர்வழி' என்று வம்பை விலைக்கு வாங்குவது சிலரது குணம். நட்பு வட்டத்திலோ, உறவு மட்டத்திலோ இவ்வாறு இருக்கும்வரை, அந்தப் பிரச்சனை வெளியில் வராது. அதுவே பொதுவெளியில் நிகழ்ந்தால், நிலைமை சந்தி சிரிக்கும். ஒரு சாதாரண வார்த்தை, பேச்சு, செயல் ஏற்படுத்தும் விளைவுகள், நாம் எதிர்பாராத அனுபவங்களைத் தரும். இணைய உலகில் இப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்குவதற்கு என்றே, ஒரு வார்த்தை உண்டு. #boycott என்ற சொல்லே அது. நேற்றிலிருந்து இந்த ஹேஷ்டேக்தான், ஆன்லைன் வணிகதளமான மிந்த்ரா.காமைத் தனிமைப்படுத்தியிருக்கிறது. 

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மிந்த்ரா.காமின் புதிய விளம்பரம் நேற்று வெளியானது. துச்சாதனன் திரௌபதியை துகிலுரியும்போது, கிருஷ்ணர் வந்து ரட்சிப்பதே அதில் இடம்பெற்ற காட்சி. அதற்காக, நீளமான சேலைகளைக் கிருஷ்ணன் ஆன்லைனில் தேடுவதாக இருந்தது அந்த விளம்பரம். உடனே பற்றிக்கொண்டது பரபரப்புத்தீ. 

நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலமாகப் பரவலான கவனத்தைப் பெறுவது ஒரு கலை. இந்த வணிக உத்தியை, இதற்கு முன்னரும் பலர் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கின்றனர். இரண்டு மலைகளுக்கு இடையே கயிறைக் கட்டி, அதன் மீது ஏறி நடப்பது போன்றது இது. ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பதை விடக் கொடியது. இந்த விளம்பரம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெற்றது என்று, இனி சொல்லத் தேவையில்லை. 

இதன் காரணமாக, சில மணி நேரங்களாக #boycottmyndra என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் மேல்நோக்கி முன்னேறி வருகிறது. இந்த ஹேஷ்டேக் கூரையின் கீழ், ஏகப்பட்ட துவேஷங்கள் மலையாகக் குவிந்து வருகிறது. 'இதற்கும் மிந்த்ராவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை’ என்று அறிவித்திருக்கிறது இந்த விளம்பரத்தினை வெளியிட்ட ஸ்க்ரோல் ட்ரோல் என்ற நிறுவனம். ஆனாலும், கொதிப்பு இன்னும் மேலெழுந்தவாறுதான் இருக்கிறது. 

தொன்றுதொட்டு வரும் மரபுகளைக் கிண்டலடிக்கும்போது, மிகுந்த கவனம் வேண்டும். ’அது எந்தக் கோணத்தில் இருந்தெல்லாம் புரிந்து கொள்ளப்படும்’ என்ற தெளிவு இருக்க வேண்டும். அது யாரையும் புண்படுத்தாது என்று உணர்ந்தபின்பே, அதனைக் கையிலெடுக்க வேண்டும். ’எடுத்தேன் கவிழ்த்தேன்’ மனோபாவம் பல்கிப்பெருகும் இன்றைய தினத்தில், இதற்குத் தனிப்பயிற்சி வேண்டும். இது எதையும் மனதில் கொள்ளாததன் விளைவே, இந்த எதிர்ப்பு. 

தனிமனித நம்பிக்கைகளைத் தகர்த்தெறிய முயலும் அம்சங்களை, உலகின் எந்த மூலையில் இருந்துகொண்டும் எதிர்க்கும் வல்லமையைத் தரும் சொல் #boycott. மகாத்மா காந்தி வலியுறுத்திய, அகிம்சையின் ஒரு அம்சமாக இருந்துவரும் இந்த புறக்கணிப்பு என்ற ஆயுதத்தை எவ்வாறு பயன்படுத்தி வருகிறோம்? அல்லது எப்படிப் பயன்படுத்துவது என்று எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்?! இதற்கான பதில் தெரியும்போது, ‘புறக்கணிக்கலாம் வாங்க’ என்பதன் முழு அர்த்தம் புரியும். 

- ஜென் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles