தண்ணீரை வீணாக்காதீங்க!

Wednesday, August 24, 2016

’இந்த உலகத்துல, ஒரு மனுஷன் சோறில்லாமக் கூட வாழ்ந்துடலாம், ஆனால் தண்ணீர் இல்லாம ஒரு நாளும்  வாழமுடியாது. இந்த உலகத்துல மூன்றாவது உலகப் போர்னு ஓண்ணு நடந்தா, அது தண்ணீருக்காகத்தான் இருக்கும். இயற்கை நமக்கு அளித்த மிகப்பெரிய கொடையே, தண்ணீர்தான். ஆனால், தண்ணீர் விஷயத்துலதான் நாம தாறுமாறாக இருக்கோம். காசு கொடுத்து தண்ணீர் வாங்கினாலும், நமக்கு காசோட அருமை தெரியுதே ஒழிய, இன்னும் தண்ணீரோட அருமை தெரியலை. 

வரும் தலைமுறை தன்னோட வருமானத்துல அதிகமா செலவழிக்குறது தண்ணீருக்காகத்தான் இருக்கும். தங்கத்தை தூக்கி எறிஞ்சுட்டு, தண்ணீரைத் தேடி அலையுற நாள் வெகு தொலைவில் இல்லை!’. தண்ணீர் பற்றாக்குறை தொடர்ந்தால் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்விக்கு, நம் மனம் தரும் பதில் இதுதான்.

 

“தண்ணீரை வீணாக்காதீங்க. பிற்காலத்துல தண்ணீரை வாங்கும் நிலைமைக்கு வந்துடுவீங்க”, கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் இந்தப் பேச்சைக் கேட்டிருக்கலாம். தாத்தாக்களும் பாட்டிகளும் நம்மிடம் சொன்னது வீண் போகவில்லை. இன்று, நாம் குடிநீரை விலைக்கு வாங்கித்தான் குடிக்கிறோம்.

 

தண்ணீர் வேண்டி வருபவர்களுக்கு, நாம் கொடுக்க மறுத்தால் என்னவாகும்? இதனைச் சொல்லும் கதைகள் நம் புராணங்களிலும் உண்டு. “மகாபாரதத்தில் கொடை வள்ளலான கர்ணனிடம் கெட்ட பழக்கம் ஒன்று இருந்ததாம். அவனிடம் தண்ணீர் கேட்டால் மட்டும், எதிரே இருப்பவரை சுட்டிக்காட்டி அவரிடம் பெற்றுக்கொள்ளுமாறு கூறுவானாம். அதனாலேயே அவனுக்கு நரகம் வாய்த்தது”, இது பெரியவர்கள் சொன்ன கதை. ஆனால், நாம் எல்லோரும் எதிர்காலத்தில் கர்ண வள்ளலைப் போலத்தான் இருக்கப் போகிறோம். ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட ஒரு வீராங்கனையின் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அவல நிலையே இதற்கு உதாரணம். இதுதான் நாம் தண்ணீருக்கு அடிக்க ஆரம்பித்திருக்கும் சாவு மணி. 

 

மனித உடம்பின் முக்கால் பாகம் தண்ணீரால் ஆனது. இன்னும் சொல்லப்போனால், உலகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான தகுதியை நிர்ணயிப்பதே நீர்தான். நீரின்றி அமையாது உலகு என்பது முன்னோர்களின் வாக்கு. அதனால், வருங்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை நினைத்துப் பயம்கொள்ளாமல், இந்த நொடியே  தண்ணீரை சேமிக்க தொடங்குவோம்.

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles