மாற்றுத் திறனாளி வீரர்களைக் கொண்டாடுவோம்!

Friday, August 19, 2016

ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெல்வதைப்பற்றி, சமூக வலைதளங்களில் பல கருத்துக்கள் உலவிக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட்டுக்கு இருக்கும் விளம்பரமோ, ஆதரவோ, வேறு எந்த விளையாட்டுக்கும் இருப்பதில்லை என்பதுதான் பெரிய சோகம். தற்போது, ரியோ மாகாணத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கம் வெல்லுமா, இல்லையா என்பது போன்ற விவாதங்கள், எல்லாப் பக்கத்திலும் வெகு சுவாரசியமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எல்லா விளையாட்டுகளையும் அதில் ஈடுபடும் வீரர்களையும் இந்திய தேசம் கவனிக்கிறதா என்பது அதில் முதன்மையான கேள்வி. தீபா கர்மாகர் பதக்கத்தை தவறவிட்டதையும் சாக்‌ஷிமாலிக் வெண்கலம் வென்றதையும் பற்றி, சமூக வலைதளங்களில் பேசித் தள்ளுகிறோம். மகளிர் பாட்மிண்டனுக்கான இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பி.வி.சிந்துவைக் கொண்டாடுகிறோம். இதெல்லாம், வெற்றிக்குப் பிறகான நிலை மட்டுமே. இந்த முக்கியத்துவத்தை, நாம் எப்போதும் தந்தால் போதும். இந்தியா பதக்கங்களைக் குவிக்கும் நாள், வெகு அருகில் வரும். இந்த ஆதங்கத்திற்குப் பின்னால் இருப்பது ஒரு சம்பவம்தான்.  

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டி, கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், 177 நாடுகளில் இருந்து 6500 வீரர்கள் பங்கேற்றனர்.  இதில், இந்தியாவைச் சேர்ந்த 275 வீரர்கள் பங்குபெற்றனர். இப்போட்டியில் 47 தங்கம், 54 வெள்ளி மற்றும் 72 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றது. பட்டியலில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து, மூன்றாம் இடத்தைப் பெற்றது இந்தியா. 

இந்திய மண்ணுக்கு பெருமை சேர்த்த வீரர்களை, நாம் அணைத்துக் கொள்ளவும் ஊக்குவிக்கவும் தவறவே கூடாது. பணம், புகழ் போன்றவற்றைத் தாண்டி, அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது அன்பும் பிரியமும் மட்டுமே. இப்போதாவது சிறப்பு ஒலிம்பிக்கில் பங்கேற்று, பதக்கங்களை அள்ளியிருக்கும் மாற்றுத் திறனாளிகளை நினைவுகூர்வோம்! நடந்து கொண்டிருக்கும் ரியோ ஒலிம்பிக்கில் கூட, சில போட்டிகளில் மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பங்கேற்பைக் கொண்டாடுவோம்! இதன் வழியே, எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் ’சாம்பியன்’ ஆகும் வல்லமை நம்மவர்களை வந்து சேரட்டும்!

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles