தங்கத்தை விட உயர்ந்தது வெண்கலம் - சாக்‌ஷியைப் போற்றும் இந்தியா!

Thursday, August 18, 2016

பதக்கம் வாங்கும்போது மட்டுமே, நம்மவர்களுக்கு விளையாட்டில் பங்கேற்பவர்கள் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வருகிறது. ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலமாக, அப்படியொரு நிலையை உருவாக்கியிருக்கிறார் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாக்‌ஷி மாலிக். 

’வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்’ என்று சொன்னாலும், தோற்றவர்களின் கதை என்றுமே நம் நினைவில் நிற்பதில்லை. இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும், கடந்த 10 நாட்களாகப் பதக்கப் பட்டியலில் இந்தியா இடம்பெறாமலே இருந்து வந்தது. (அதிக வீரர்கள் பங்கேற்பதற்கும் நிறைய பதக்கங்களைக் குவிப்பதற்கும் இடையே, எந்தத் தொடர்பும் இல்லை என்பது வேறு விஷயம்) அந்தக் குறையைப் போக்கியிருப்பதன் மூலமாக, குடியரசுத்தலைவர், பிரதமர் என்று தொடங்கி பேஸ்புக், ட்விட்டர் புலிகள் வரை அனைவரது வாழ்த்துகளையும் தனதாக்கியிருக்கிறார் சாக்‌ஷி. 

 

மகளிர் மல்யுத்தத்தில் 58 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் போட்டியில் வென்று, இந்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் இவர். காலிறுதிப் போட்டியில் தோற்றபோதும், ரெபிசாஜ் சுற்று மூலம் இதனைச் சாதித்திருக்கிறார். மங்கோலியா மற்றும் கிர்கிஸ்தான் நாட்டு வீராங்கனைகளை அடுத்தடுத்து தோற்கடித்து, இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார் சாக்‌ஷி. 

 

சாக்‌ஷி மாலிக் பங்கேற்கும் முதல் ஒலிம்பிக் போட்டி இது. கடந்த மே மாதம் இஸ்தான்புல்லில் நடந்த தகுதிச்சுற்றில் சீன வீராங்கனை ஸாங் லேனைத் தோற்கடித்து, ரியோவுக்குச் செல்லும் பட்டியலில் இடம்பிடித்தார் சாக்‌ஷி. ரியோ ஒலிம்பிக்கில் அடுத்தடுத்த சுற்றுகளை அடைந்தபோதும், அவர் மீது போதிய கவனம் விழவில்லை. ஆனாலும், மறைந்திருந்து பாயும் புலி போல, தான் நினைத்த இலக்கை அடைந்திருக்கிறார் இந்த வெண்கல மங்கை. 

 

நெட்டுலகில், தற்போது சாக்‌ஷியைப் போற்றும் பாராட்டுகள் குவிகிறது. அவரது கடந்த காலத்தை அலசும் கட்டுரைகள் வேகமாக எழுதப்படுகின்றன. அவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரே ஒரு பாராட்டு இந்தத் தருணத்தில் சாக்‌ஷியைப் பற்றிய நம் மனவோட்டத்தை அப்பட்டமாகப் பதிவுசெய்யும் விதத்தில் இருக்கிறது. ‘தங்கத்தை விட வெண்கலம் உயர்ந்தது’ என்பதே அது. 

 

- பா. உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles