ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் சிந்து!

Wednesday, August 17, 2016

எதிர்பாராத தருணங்களைச் சந்திப்பது, விளையாட்டில் மிக முக்கியமானது. அது இனிமையாக இருக்கும்போது, வாழ்வு புதிய உயரங்களுக்குப் பயணிக்கும். அப்படியொரு நிலையில் இருக்கிறார், இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. 

புசார்லா வெங்கட சிந்து என்கிற பி.வி.சிந்து, தற்போது மகளிர் பாட்மிண்டன் உலகத் தரவரிசையில் 10வது இடத்தில் இருப்பவர். சாய்னா நேவால், ஜூவாலா கட்டா என்ற பெயர்கள் மட்டுமே உச்சரிக்கப்படும் காலகட்டத்தில், தனக்கான இடத்தை மெதுவாகத் தேடிக் கண்டெடுத்தவர். பெரிய வெற்றிகள் பெறாதபோதும், இந்திய பாட்மிண்டனோடு தொடர்ந்து இணைந்திருப்பவர். முக்கியமாக, சர்ச்சைகள் எதிலும் சிக்காதவர். நிதானத்திற்கும் உத்வேகத்திற்கும் இடையிலான ஒரு இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். இது அத்தனைக்கும் காரணம், பி.வி.சிந்துவின் பின்னணி. 

 

சிந்துவின் தந்தை ரமணா மற்றும் தாய் விஜயா இருவருமே, இந்திய அணியின் சார்பாக விளையாடியவர்கள். அவர்களது வழிகாட்டல்தான், இன்று சிந்துவின் மீது ரியோவில் வெளிச்சம் விழக் காரணமாகி இருக்கிறது. கால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, அரையிறுதியில் ஜப்பானைச் சேர்ந்த நோசுமி ஒகுஹாராவைச் சந்திக்க இருக்கிறார். காலிறுதியில் சீனாவைச் சேர்ந்த, உலகத்தரவரிசையில் இரண்டாம் இடம் வகிக்கும் யிஹான் வாங்கைத் தோற்கடித்திருக்கிறார். இதுதான், சிந்துவின் மீது உலகத்தின் பார்வைப் பதியக் காரணமாகி இருக்கிறது. 

 

இதற்கு முன்னர் நடந்த மோதல்களில் எல்லாம், யிஹானின் கையே ஓங்கியிருந்திருக்கிறது. அதோடு, சில ஆண்டுகளாக சிந்துவும் யிஹானும் ஒருவரையொருவர் எதிர்கொண்டு விளையாடவில்லை. இருந்தாலும், தனது வியூகத்திலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருந்தார் சிந்து. அதனைக் கொண்டு, தற்போது வெற்றியும் பெற்றிருக்கிறார். வெற்றியை நோக்கி யிஹான் சென்று கொண்டிருந்தபோது, தளராத நம்பிக்கையுடன் விடாமல் போராடினார் சிந்து. அனுபவத்திலும் தரவரிசையிலும் முன்னணியில் இருக்கும் வீராங்கனையைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார். ”இது என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. இன்னும் நிறைய காத்திருக்கின்றன”, போட்டி முடிந்ததும் சிந்து சொன்ன வார்த்தைகள் இவை.

 

இதே மாதிரியான கடினமான போட்டிகள், ரியோ ஒலிம்பிக்கில் அடுத்தடுத்துக் காத்திருக்கின்றன. காரணம், முன்வரிசையில் இருக்கும் கரோலினா மாரின் மற்றும் லீ சியுரூய் இடையேயான முதல் அரையிறுதிப் போட்டி. இது கண்டிப்பாகக் கடினமானதாகவே இருக்கும். அதேபோன்று, உலகத் தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்திருப்பவர் நோசுமி ஒகுஹாரா. இவருக்கும் சிந்துவுக்கும் இடையேயான அரையிறுதிப்போட்டியும், கண்டிப்பாக பாட்மிண்டன் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். சிந்து பெற்ற வெற்றிகள் மட்டுமே இதற்குக் காரணம் அல்ல, அவரது வார்த்தைகளும்தான். ”தற்போது விளையாட்டில் மட்டுமே எனது கவனம் இருக்கும். நன்றாக விளையாடும்போது, வெற்றியும் பதக்கமும் தன்னால் வரும்” என்றிருக்கிறார். இதன் மூலமாக, தனது குறி எதன் மீதென்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். 

 

சில வாரங்களாக, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்தியர்களில் சிலர் மீதே ஊடகங்களின் வெளிச்சம் பாய்ந்தது. பி.வி.சிந்துவின் மீது பெரிதாகக் கவனம் குவியவில்லை. அதையே ஒரு ப்ளஸ்ஸாக்கி, தற்போது நிலைமையைத் தலைகீழாக்கி இருக்கிறார். இப்போது சிந்து மீது பெரிதாகக் கவனம் குவிந்திருக்கிறது. இதையும் சமாளிக்கக் கற்றுக்கொண்டால் போதும், தங்கத்துடன் நாடு திரும்புவார் சிந்து. அவரை வரவேற்பதற்காகக் காத்திருப்போம் நாம். அது நிகழுமா..!

- உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles