வீட்டு சாப்பாட்டை உதவி இயக்குனர்கள் ‘மிஸ்’ பண்ணவே மாட்டாங்க  - ரகசியம் சொல்லும் முகமது ஜெய்லானி 

Saturday, August 13, 2016

நிறைய கனவுகளோடும் சினிமாவில் சாதிக்க வேண்டுமென்கிற வெறியோடும், ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலிருந்து கோடம்பாக்கத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சினிமாதான் வாழ்க்கை என்று ஒரு இளைஞன் சொல்வதை, பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவதில்லை என்பதே யதார்த்தம். ஆனால், அந்த ஆசையோடு வரும் இளைஞர்கள் தங்களது குறிக்கோளை அடைவதற்காகப் பெருங்கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.

ஒருவேளை சாப்பாட்டை ருசிக்கக் கூட திணறுகிறார்கள். இந்த வலியை உணர்ந்து, அவர்களுக்காக உதவ முன்வந்திருக்கிறார் முகமது ஜெய்லானி. ’கேள்விக்குறி’ என்ற படத்தை இயக்கியிருக்கும் இவர், தற்போது ‘வீட்டு சாப்பாடு’ என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். உதவி இயக்குநர்களுக்காகவே, தினமும் தள்ளுபடி விலையில் மதிய உணவு மற்றும் இரவுச் சாப்பாட்டைத் தந்து வருகிறார். 

 

“நான் சினிமா பின்னணியில் இருந்துதான் வந்திருக்கேன். அதனால, அவங்களோட வொர்க்கிங் ஸ்டைல், எனக்கு நல்லாவே தெரியும். சினிமா யூனியன்ல இருக்குற, எல்லா வேலையாட்களும் சம்பளப் பாக்கியை ஏதோ ஒரு வழியில வசூலிச்சுடுவாங்க. ஆனால், உதவி இயக்குநர்களோட நிலைமை அப்படி இல்ல. இது நம்ம படம், நாமதான் நல்லா உழைக்கணும்னு, அவங்க இரவு பகல் பார்க்காம தன்னோட உழைப்பைக் கொட்டுவாங்க. தனக்கு வர்ற வேண்டிய சம்பளத்தைக் கேட்கக்கூட யோசிப்பாங்க.  

 

என்னோட முதல் திரைப்படம் ‘கேள்விக்குறி’  வெளியானபிறகு, அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். அப்போ தினமும், ஹோட்டல்ல வாங்கித்தான் நாங்க எல்லோரும் சாப்பிடுவோம். இதனால, எங்க குழுவுல யாராவது ஒருத்தருக்கு, தினம் வயிறு கோளாறு வந்துட்டே இருக்கும். அதனால, என் வீட்டிலேயே எல்லோருக்கும் சமையல் செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சேன். இதுவே, நாளடைவில ஒரு பிசினஸ் ஆகிடுச்சு. அதுக்கு ‘வீட்டு சாப்பாடு’ ன்னும் பேரு வச்சிட்டோம். முதல்ல, எனக்குத் தெரிந்த தயாரிப்பு நிறுவனங்களுக்குதான் சப்ளை பண்ணிட்டு இருந்தேன். அப்புறம் கொஞ்சம் விரிவுப்படுத்தி , சின்ன உணவகமா மாத்திட்டேன்.

 

உதவி இயக்குநர்களோட வேதனைகள் எனக்கு நல்லா புரிஞ்சதால, இந்த ‘வீட்டு சாப்பாடு’ கடையின்  மூலமாக, அவங்களுக்கு தள்ளுபடி விலையில ‘அன்லிமிடெட் மீல்ஸ்’ கொடுக்கிறோம். இரவு சிற்றுண்டிகளுக்கும் தள்ளுபடி உண்டு. இங்க சாப்பிடறதால, தங்களோட வீட்டை அவங்க ’மிஸ்’ பண்ண மாட்டாங்க. இங்க, நாங்க உணவுகளை வீட்டுலேயே தயாரிக்கிறோம். அதனால, கண்டிப்பாக ஹோட்டல் சாப்பாடு மாதிரி இருக்காது”  என்று கூறியவரிடம், ’விலைவாசி அதிகமான காலகட்டத்தில் இது எப்படிச் சாத்தியம் ஆகிறது?’ என்றோம். 

 

“முதலீட்டுல எந்த விதமான நஷ்டமும் வர்றதில்லை. எல்லாரும் வாங்குற தரமான அரிசி, பருப்புகளைத்தான் நாங்களும் வாங்குறோம். அன்லிமிடெட் மீல்ஸை, சினிமா உதவி இயக்குநர்களுக்கு 30 ரூபாய்க்கு தர்றோம். அதாவது, நார்மல் ரேட்டை விட 50 சதவீதம் குறைவு. எங்களோட சாப்பாடு டேஸ்ட் பிடிச்சதால, உதவி இயக்குநர்கள் இல்லாம, நிறைய ரெகுலர் கஸ்டமர்கள் வர்றாங்க. அதனால, கணக்கு அட்ஜஸ்ட் ஆகிடும். அதுக்காக, நிறைய லாபம் கிடைக்குதுன்னு சொல்ல மாட்டேன். ஆனா நஷ்டம் ஏற்படுறதில்லை. வேலையாட்களும், இந்த விஷயத்தைப் புரிஞ்சுக்கிட்டு ரொம்ப பாஸிட்டிவா ஒத்துழைக்கிறாங்க” என்றார் ஜெய்லானி. 

 

‘அவரது குடும்பத்தினர், வீட்டு சாப்பாடு பற்றி என்ன சொல்கிறார்கள்’ என்ற கேள்வியை முன்வைத்தோம். ”ஏற்கனவே, ஏழு வருஷத்துக்கு முன்னாடி ‘கேள்விக்குறி’ னு ஒரு திரைப்படத்தை இயக்கி நடிச்சேன். அதுல சில பிரச்னைகளையும் சந்திச்சேன். சிக்கல்கள் வராமல், சினிமா படம் எடுக்க முடியாது. எனக்கு தெரியாத பல விஷயங்களை, ‘கேள்விக்குறி’ மூலமாதான் கத்துக்கிட்டேன். இன்னும் சொல்லப்போனா, ‘வீட்டு சாப்பாடு’ மூலமா என்னோட சினிமா வட்டாரத்தை இன்னும் விரிவுபடுத்திக்கணும்னு நினைக்கிறேன். ’சினிமா எடுக்குறதைவிட, ‘வீட்டு சாப்பாடு’ நடத்தறதுதான் பாதுகாப்பு’ன்னு என் குடும்பத்துல இருக்குறவங்க நினைக்கிறாங்க. 

 

இதை இன்னும் விரிவுபடுத்தச் சொல்லி, நிறைய பேர் என்கிட்ட கேட்கிறாங்க. சென்னையிலயே பல இடங்கள்ல, கிளைகள் ஆரம்பிக்கச் சொல்றாங்க. இப்போதைக்கு, எனக்கு எந்த ஒரு ஐடியாவும் இல்லை. பார்ப்போம்” என்று விடைபெற்றார் ஜெய்லானி. அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் முகங்களில் திருப்தி தென்பட்டதை, அப்போது கவனிக்க முடிந்தது. 

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles