206 நாடுகள்.. 28 விளையாட்டுகள்.. 306 பதக்கங்கள்..!- ஒலிம்பிக் திருவிழா ஆரம்பிச்சிடுச்சேய்..!!

Monday, August 8, 2016

ஒரு விளையாட்டில் வெற்றி பெறுவதை விட, பங்கேற்பதே சிறந்த அனுபவம் தான். ஒவ்வொரு விளையாட்டு வீரனும் தெரிந்துகொள்ள வேண்டிய இந்த அடிப்படைத் தத்துவத்தை தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கிறது ஒலிம்பிக் போட்டி. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தத் திருவிழா, இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் 21 வரை பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கிறது. அமெரிக்காவின் காலடியில் இருக்கும் தென் அமெரிக்கக் கண்டத்தில் நடைபெறும் முதல் ஒலிம்பிக் போட்டி என்ற சிறப்பும் இதற்குண்டு. 

 

கால்பந்து, டென்னிஸ், கிரிக்கெட் என்று உலகின் ஒவ்வொரு நாடுகளிலும் சில விளையாட்டுகள் பிரபலமாக இருக்கும். அந்தந்த விளையாட்டுகளில் உலக சாம்பியன் யார் என்பதைத் தெரிந்துகொள்ள, சில போட்டிகள் நடத்தப்படும். அவை எல்லாவற்றையும் தாண்டி, தனக்கான தனித்த இடத்தை பெற்றிருக்கிறது ஒலிம்பிக் போட்டிகள். தடகளம், நீச்சல், ஜிம்னாஸ்டிக் மற்றும் பொதுவெளியில் அதிகம் கவனத்தை ஈர்த்திராத சில விளையாட்டுகளில் பங்கேற்பவர்களுக்கு, நல்மதிப்பையும் அங்கீகாரத்தையும் ஒருசேரப் பெற்றுத் தருவது ஒலிம்பிக் வெற்றிகள் தான். 

 

கடந்த ஆகஸ்ட் 5 அன்று, ரியோடி ஜெனிரோவில் தொடக்க விழா கோலாகலங்கள் களைகட்ட, அதனைத் தொடர்ந்து பதக்க வேட்டை வேகமெடுத்திருக்கிறது. இன்று என்னென்ன போட்டிகள் நடக்கின்றன, அவற்றில் எத்தனை போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது? என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் இந்திய விளையாட்டு ரசிகர்கள். அவர்களின் விருப்பத்திற்கேற்ப, இண்டர்நெட்டில் ஒலிம்பிக் 2016 பற்றிய தகவல்களும் மலையாகக் குவிகின்றன. 

 

ஒரு விளையாட்டில் ஈடுபடும் வீரர் அல்லது வீராங்கனையின் திறமை உலகத்தரத்தில் இருக்கிறதா என்பதை, சாதாரண மனிதன் அளவிட உதவும் கருவியாகவும் ஒலிம்பிக் பதக்கங்கள் இருந்து வந்திருக்கிறது. அப்படியொரு கோணத்தில் பார்த்தால், இந்தியாவின் விளையாட்டுத் திறமை தொடர்ந்து உலகத்தரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கிறது. கடந்த 2012 ஒலிம்பிக்கில் கண்ட வெற்றிகளை விட அதிகமாகவோ, இரட்டிப்பாகவோ பதக்கம் வெல்லும் முனைப்பில் ரியோவில் காத்திருக்கின்றனர் இந்திய விளையாட்டுக் குழுவினர். 

 

அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில், பெயர் தெரியாத விளையாட்டுகளையும் அதில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்பவர்களையும் உற்றுநோக்கும் ‘ட்ரெண்ட்’  பரவத் தொடங்கியிருக்கிறது. 

 

இந்த கவன ஈர்ப்பைத் தக்கவைப்பது, இந்திய விளையாட்டு வீரர்களின் கடமை. அவர்கள் பெறும் வெற்றிகளை விட, அவர்களது சிறப்பான பங்கேற்பைக் காண, வரவேற்கக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஆகஸ்ட் 21ம் தேதி ஒலிம்பிக் நிறைவடையும்போது, அவர்களின் எதிர்பார்ப்பு கண்டிப்பாகப் பூர்த்தி ஆகியிருக்கும் என்று நம்பலாம்!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles