கலாம் ஒரு சுத்தமான ஆத்மா - நடிகர் விவேக்

Saturday, July 30, 2016

‘ஜனங்களின் கலைஞன்’ என ஏ.பி.ஜெ.அப்துல் கலாமால் கொண்டாடப்பட்டவர் நடிகர் விவேக். ‘கிரீன் கலாம்’ திட்டத்தின் மூலமாக, தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு, எதிர்கால சந்ததிகளுக்கு உயிர்மூச்சை விதைக்கும் விழிப்புணர்வைத் தந்து வருகிறார். கலாமின் நினைவை மீட்டெடுக்கும் விதமாக, அவரைச் சந்தித்தோம்.

“ ‘கலாமை நினைவுகூர்வோம்’ என்கிற சொற்றொடரில் இருந்து, நான் முரண்படுறேன். அவர் இன்னமும் நம்மோடு வாழ்ந்துக்கிட்டு இருக்கிறதா, எல்லோரும் நினைச்சிக்கிட்டு இருக்கிறாங்க. சமீபத்துல கல்லூரி மாணவர்களைத் திரட்டி, ‘கிரீன் கலாம்’ பேரணி நடத்தினேன். தமிழக அரசின் ஒத்துழைப்போடும் காவல்துறையின் உதவியோடும், அது நடத்தப்பட்டது. அந்தப் பேரணியில், சுமார் ரெண்டாயிரம் பேர் கலந்துப்பாங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா, ஒரு ஆனந்த அதிர்ச்சியா, ஏழாயிரம் மாணவர்கள் கூடினாங்க. இதுதான் கலாம் என்கிற மந்திர சக்தி. கலாம் அய்யா மேல மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இருக்கிற  நம்பிக்கையும் பற்றும்தான் எல்லாத்துக்கும் காரணம். அவர் எப்பவும் நம்மோட  நினைவுகள்ல இருந்துக்கிட்டே இருப்பார் என்பதுதான் உண்மை! 

 

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை, இந்தியாவின் இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடுறோம். அது எவ்வளவு பொருத்தமானதோ, அதேபோல இளைஞர்களின்  எழுச்சி தினமாக அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவது சிறப்பு. தமிழக அரசு அரசாணையாக அதைப் பிறப்பித்திருப்பது ரொம்ப  மகிழ்ச்சிகரமான விஷயம். கலாம் அய்யா இஸ்லாமிய மதத்தில் பிறந்திருந்தாலும், சர்வ மதத்தில் உள்ளவர்களும் அவர் மேல் அன்பு செலுத்தினாங்க. அதற்குக் காரணம், அவர் சர்வ மதங்களையும் அணைத்துக் கொண்டவர் என்பதுதான்!

 

ஒரு விழாவில் கலந்துகொண்டபோது, அதனைக் குத்துவிளக்கேற்றித் தொடங்கினார் அப்துல் கலாம். அப்போது, ‘இந்த விளக்கு இந்து மதத்தைக் குறிக்கிறது. நான்  கையில் வைத்திருக்கும் மெழுகுவத்தி கிறிஸ்தவ மதத்தை அடையாளப்படுத்துகிறது. விளக்கை ஏற்றுகிற நானோ இஸ்லாமியர். இந்த மூன்று மதங்களுக்குமான ஒற்றுமையாக, இங்கே தீபம் ஏற்றப்படுகிறது. அப்படியாக, மனிதர்கள் யாவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்றார். மிகப்பெரிய தத்துவஞானிக்கும் கவிஞனுக்கும் தோன்றுகிற விஷயம், ஒரு விஞ்ஞானிக்குத்  தோன்றியிருக்கிறது. சமூகத்தை, எந்தளவுக்கு அவர் நேசித்திருக்கிறார்
 என்பது அவருடைய வார்த்தையில் தெரிய வருகிறது. ஆக, அவர் பேசியவை எல்லாம் தெய்வ வாக்குதான். 

 

அப்துல் கலாம் அய்யாவை எப்போதுமே ஒரு ஞான குருவாக,  ஆசிரியராக, வழிகாட்டியாகத்தான் நான் பார்க்கிறேன்!

 

எப்போது கலாம் அய்யா பேசினாலும், ‘விவேக் சார் என்னோட நண்பர். அதனால் என்னைப் பற்றி அதிகம் சொல்லிவிட்டார்’ என்று கூறுவார். அது அவரோட பெருந்தன்மை. எனக்கும் அவருக்குமான உறவு என்பது, நானாக  ஏற்படுத்திக் கொண்டது. அவர் விஞ்ஞானியாக இருந்து மாணவர்களுக்கு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தபோதுதான், அவரை எனக்குப் பிடித்தது. பிறகு, அவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில்  பேராசிரியராக இருந்ததைத் தெரிந்து கொண்டேன். பின்னர், அவர் எப்போது அண்ணா பல்கலைக்கு வருவார் என்பதை அங்குள்ள அலுவலகத்தில் விசாரித்து, அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டு வந்தேன். 

 

அப்போது ‘ரன்’ படத்துக்கான படப்பிடிப்பு நடந்துக்கிட்டு இருந்துச்சு. படத்தில், கூவத்துல நான் குதிக்கிற மாதிரியான ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சியில குதிச்சது டூப்புன்னாலும், கூவத்துக்குள்ளே இருந்து வெளியே வர்றது, உண்மையில் நான்தாங்க. அப்படி, அந்தக் காட்சியில கூவத்துல இருந்து மூழ்கி எழுந்தபோது, குடலைப் புடுங்கிக்கிட்டு வர்ற மாதிரி என் மேல நாற்றம் எடுத்தது. அந்தச் சூழலில்தான் அண்ணா பல்கலைக்கழகத்துல இருந்து ‘அப்துல் கலாம் சார், உங்களை பார்க்க விரும்புறாங்க’ன்னு போன் வந்தது. அவசரம் அவசரமா குளிச்சுட்டுப் போனேன்! 

 

அப்போதும், அவரைச் சுத்தி மாணவர்கள்தான் இருந்தாங்க. என்னைப் பார்த்ததும், ‘உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும் சார். நான் சினிமாவே பார்த்ததில்ல. என்னைப்போய் விரும்புறீங்களே சார்...’னு சொன்னார். ‘அதனால என்ன சார், நான்கூட ராக்கெட் விட்டதில்ல. ஆனா, உங்களை ரொம்பப் பிடிக்கும்’னு சொன்னேன். இருந்தாலும், ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பாய் இருந்தோம். 

 

அவர் ஒரு சுத்தமான ஆத்மா. அவரால்,  உண்மையிலேயே அன்பு செலுத்துகிற மற்றொரு ஆத்மாவை கண்டுகொள்ள முடியும். 

 

அப்படி அவருக்கும் எனக்குமான சந்திப்புகள் நடந்து கொண்டிருந்தபோதுதான்,  ஒருநாள் மரம் நடுவது பற்றிச் சொன்னார். அதுதான், என் வாழ்க்கையின் திசையை  மாற்றியமைத்த தருணம். அதேபோல, என்னோட மகனும் அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எல்லாம் எடுத்திருக்கான். அப்போது எனக்குத் தெரியாது. கலாம் சார் மறைந்த இரண்டு மாதங்களில், அவனும் என்னைவிட்டு போய்விடுவான்னு(வார்த்தைகளை முடிக்கும் முன்பே, அவர் பேச்சில் துயரம் படிகிறது).

 

ரெண்டு பேருமே சுத்தமான ஆத்மாக்கள். வயோதிகராக இருந்தபோதும், ஒரு குழந்தையின் மனதோடு வாழ்ந்தவர் கலாம் அய்யா. இருவருமே தூய பிரம்மச்சர்ய நிலையிலேயே இருந்தவர்கள். ‘சாய்பிரசன்னா ஃபவுண்டேஷன்’ மூலமாக, தற்போதுவரை 27 லட்சத்து 35 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டிருக்கோம். இதுல நிறைய பேரு  இருக்காங்க. அவங்களைப் பத்தி பெரிய பட்டியலே போடலாம். விவேக் என்கிற தனி
மனிதன் இதைச் சாதிக்கிறது கஷ்டம். கலாம் என்கிற மகானுபவரின் கீழ் இதைச் செய்கிறேன் என்பதால்தான், பலரும் எனக்கு உதவுறாங்க. ‘கிரீன் கலாம்’ என்பதே அப்துல் கலாம் அய்யா வைச்ச பேருதான். இந்த ஃபவுண்டேஷன் மூலமாக இன்னும் நிறையத் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்” என்ற விவேக், சமூகத்துக்கு தான் ஆற்ற நினைக்கும் சேவைகளை, அது பற்றிய தன் கனவுகளைப் பகிர்ந்துகொண்டார். 

 

உதவும் எண்ணமுள்ள இதயம், எல்லோருக்கும் வாய்க்காது. அதனை உடைத்து, எல்லா மக்களையும் தொண்டாற்ற வைப்பதே இவரது நோக்கம்!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles