தியாகத்தை நினைவுகூர்வோம்!

Monday, September 12, 2016

நபிகள் நாயகத்தின் தியாகத்தினை நினைவுகூறும் தினமாக, உலகத்திலுள்ள அனைத்து இஸ்லாமியர்களும் கொண்டாடும் பண்டிகை பக்ரீத். இப்பண்டிகையின்போது, இஸ்லாமியர்கள் மசூதியில் சிறப்புத் தொழுகை செய்து, ஏழை மக்களுக்கு குர்பானி கொடுத்து தங்களுடைய வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார்கள்.

குர்பானி கொடுப்பதன் காரணம் 

நபிகள் நாயகத்தின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை, பக்ரீத் அன்று நினைவுகூர்கின்றனர் இஸ்லாமியர்கள். இறைதூதரான இப்ராஹீம் நபிகளுக்கு இரண்டு மனைவிகள். ஆனால், அவர்கள் இருவருக்குமே குழந்தைப்பேறு இல்லை. இதனால், நபிகள் மிகவும் மனம் வருந்தி அல்லாஹ்வை வேண்டினார். நபிகள் நம்பிக்கையோடு செய்த பிரார்த்தனையை ஏற்றார் அல்லாஹ். அவரின் இரண்டாவது மனைவியான ஹாஜாரா அம்மையாருக்கு நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் பிறந்தார். இறைபற்றைத் தவிர வேறெதுவும் தெரியாத நபிகள் நாயகத்துக்கு அளவில்லா சந்தோஷம்.

 

ஒரு நாள் நள்ளிரவு, உறக்கத்தில் பயங்கரமான கனாவைக் கண்டார் நபிகள். அக்கனவில், தன்னுடைய மகனைத் தானே இறைவனுக்கு பலி கொடுப்பது போல் கண்டதை நினைத்து கவலையுற்றார். இதனை வருத்தத்துடன் தனது மனைவியருக்கு தெரியப்படுத்தினார். இதனைக் கேட்ட அவரது மகன் நபி இஸ்மாயீல், இறைவனின் கட்டளையை நிறைவேற்றுமாறு தனது தந்தையிடம் வேண்டினார். பெற்ற பாசத்தினால் தன்னுடைய முடிவிருந்து மாறிவிடுவார் என்று எண்ணிய அலைஹிஸ்ஸலாம், தன்னுடைய தந்தையை கண்களைக் கட்டிக்கொண்டு பலி கொடுக்கப் பணித்தார். 

 

இப்ராஹிம் நபிகளும், இறைவனின் வரமாக பெற்ற ஒரே மகனை வெட்டத் துணிந்தார். அப்போது ஒலித்தது ஒரு அசரீரி. நரபலியைத் தடுத்து, அதற்கு பதிலாக ஒரு ஆட்டைப் பலிகொடுத்து, அதனை இல்லாதவருக்குப் பங்கிட்டுக் கொடுத்து புசிக்குமாறு இறைவன் பணித்தார். அதன்படி, நபிகளின் தியாகத்தைப் போற்றுவதற்கே குர்பானி கொடுத்துக் கொண்டாடி மகிழ்கின்றனர் இஸ்லாமிய மக்கள். தங்களின் வசதிக்கேற்ப ஒட்டகம், ஆடு, மாடு இப்படி ஏதாவது ஒரு மிருகத்தைப் பலியிட்டு, ஏழைகளுக்கு குர்பானி கொடுத்து மகிழ்வர்.

 

எல்லா மதங்களுமே, மக்களிடம் வலியுறுத்துவது ஒன்றுதான். இருப்பவர்கள் இல்லாதவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தால், அது அனைவருக்குமே நன்மையை அளிக்கும். நபிகளின் தியாகச் செயல் மூலம், கொடுத்து உதவுவது எவ்வளவு சிறந்தது என்பதை உணர்த்தியிருக்கிறார் இறைவன். அதைப் போற்றி, இன்றளவும் குர்பானியைத்  தவறாது கொடுத்து வருவது பெருமையே.

- பவித்ரா 
 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles