வெற்றி விநாயகா!

Monday, September 5, 2016

இந்தியாவில் இந்து மக்கள் கடைபிடிக்கும் பண்டிகைகளில் விநாயக சதுர்த்தியும் ஒன்று. ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகின்றது. பயபக்தியோடு விநாயகரை வணங்கி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து விநாயகர் சதுர்த்தியை  இந்து மக்கள் கொண்டாடுவர். விநாயகர்’ என்றால் ‘மேலான தலைவர்’ என பொருள் கொள்ளலாம். யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர்தான் விநாயகப் பெருமான்.
 

எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து வணங்கி ஆரம்பித்தால் வெற்றியில் முடியும் என்பதும், அதேபோன்று பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களும் விநாயகரின் அருளால் தடையின்றி நடந்து முடிந்துவிடும் என்பதும் நம்பிக்கை!

விநாயகர் சதுர்த்தி அன்று காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளிக்க வேண்டும். பிறகு, வீட்டையும் சுத்தமாக்கி வாசலில் மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும். அதன்பிறகு, இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைத்து, பூஜை அறையில் சுத்தமான ஒரு மனையை வைக்க வேண்டும். அதன்மேல் ஒரு கோலம் போட வேண்டும், பிறகு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும் அதில் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும். பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.

மேலும், பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம் புல், சாமந்தி, மல்லி மற்றும் சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ள வேண்டும். அதேபோன்று, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டையை அவசியம் செய்து கொள்ள வேண்டும். தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது இந்த கொழுக்கட்டை ஆகும். இதில் ஒரு தத்துவம் இருக்கிறது. அதாவது மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும். களிமண் பிள்ளையாரை பூக்களால் அலங்கரித்து, மேற்கண்ட பொருட்களை அவர் முன் படையலிட்டு, கற்பூரம் காட்டி வணங்க வேண்டும்!

பிள்ளையாருக்கு  பிரமாண்ட கோவில் அவசியமில்லை; நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில், மஞ்சள் பொடி, களிமண் என எதில் பிடித்து வைத்தாலும், அவர், நமக்கு அருள்பாலிப்பார். விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள். விநாயகப் பெருமானின் அருளைப் பெறுங்கள்!

 - டி.ராஜசேகர்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles