பழமொழி இன்பம் - 24

Monday, May 15, 2017

நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்    இருக்கின்றபோது அதன் அருமை எப்போதுமே நமக்குத் தெரிவதில்லை. மழைக்காலத்தில் இங்கே வீணான தண்ணீர் கொஞ்சமா நஞ்சமா ? நிலப்பரப்பு மொத்தத்தையும் நீர் மூடி நின்றது அப்போது. பெய்த மழைத்தண்ணீர் முழுதும் அப்படியே போய்க் கடலில் சேர்ந்தது.

கல்லகழ்ந்த பாறைக்குழிகள் அங்கங்கே இருந்தன. வெள்ள நீரை அந்தப் பாறைக்குழிகளில் சென்று தேங்கும்படி ஒரு சிறிய இணைப்பு வேலையைச் செய்திருந்தால் போதும். பாறைக்குழிகள் செலவில்லாத நீர்த்தேக்கங்களாய் மாறி நீரைச் சேர்த்து வைத்திருக்கும். இப்போது அந்நீரைக் குடிப்பதற்கு இல்லையென்றாலும் எத்தனையோ பயன்பாடுகளுக்குக் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை நாம். 

முற்காலத்தில் சாலையோரங்களில் சாரைசாரையாய்ப் புளியமரங்களை நட்டார்கள். அந்த மரங்கள் பெருமரங்களாய் வளர்ந்து நிற்கின்றன. எந்தக் காலத்திலும் நீங்கள் சாலைவழியாய்ச் சென்றால் புளியமர நிழலிலேயே செல்வீர்கள். தரையின்மீது சூரியவெளிச்சம் படாமல் இருந்தாலே போதும். அங்கே குளிர்ச்சி தோன்றிவிடும். அந்த மரங்களை வைத்தவன் என்ன நினைத்து வைத்தான் ? நாளைக்கே இவை வளர்ந்து பலன் தந்துவிடும், புளியம்பழங்களைக் கொய்து தின்னலாம் என்று நினைத்தானா ? இல்லை. நமக்குப் பின்னால் வரும் தலைமுறை புளியம்பழங்களைத் தின்று வாழட்டும் என்று நினைத்தான். இச்சாலையில் செல்லும் வழிப்போக்கன் வெய்யிலில் வாடி மயங்காமல் நிழலடியில் குளிர்ச்சி பெறட்டும் என்றே எண்ணினான். அந்த அறப்பண்புதான் சாலையோரங்களில் புளியமரங்களை வைத்துப் பேணியது. வளர்த்துத் தந்தது. அம்மரங்களின் விளைச்சலை நாம் இன்று கண்டோம். அதன் நிழலில் மனங்குளிர்ந்தோம். 

இன்றைக்குப் புளிகள் வளர்ந்த சாலையில் செல்லும்போது பூங்காற்றாய் நம்மீது படுங்காற்று வெற்று வெளியில் செல்கையில் வெங்காற்றாய்ப் பொசுக்குகிறது. அன்றைக்கு நம்மக்கள் எல்லாரும் செருப்பணிந்தார்களா என்ன ? இல்லை, செருப்பு என்பதே கல்லும் முள்ளும் கால்களைக் கீறாதபடி பாதுகாக்கத்தான் தோன்றியது. தரை வெப்பத்திடமிருந்து அடிக்கால்களைப் பாதுகாப்பதற்காகத் தோன்றவில்லை. இன்றைக்குக் கல்லும் முள்ளும் இல்லாமல் வழித்தெடுக்கப்பட்ட தார்ச்சாலைகள் இருக்கின்றன. ஆனால் செருப்பில்லாமல் தார்ச்சாலைமீது ஒரு நொடிகூட நிற்கமுடியாது. 

வெப்பத்தால் தார்ச்சாலை அம்மன்கோவில் தீக்குழியாய்த் தகிக்கிறது. இதே தார்ச்சாலை புளியமரத்தடியில் பூவிரிப்பாய்க் குளிர்கிறது. வெய்யிலில் பன்மடங்கு வெப்பத்தை உறிஞ்சி வைத்துக்கொள்கிறது. இடையில் என்ன நடந்தது ? சாலையோரத்தில் வளர்ந்து நிழலூற்றிய தருக்களையெல்லாம் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் வேரோடு பெயர்த்தெறிந்தோம். இப்போது அதுதான் நிலைமை. சாலைகளில் கால்வைத்தால் பொசுங்கிவிடும். 

சாலைகளில் நிழற்குடை அமைக்கிறேன் என்று ஆங்காங்கே கட்டடக்கூடங்களைக் கட்டிவைத்திருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் நிதி, திட்ட மதிப்பீடு ஒன்றரை இலட்சம் என்று அதில் பொறித்தும் வைத்திருக்கிறார்கள். எண்ணிப் பாருங்கள்.. எவ்வளவு பெரிய மடத்தனம் இது ! நிழற்கூடம் அமைப்பதற்கு மாற்றாக இரண்டு நிழல்மரங்களை வைத்தால் அங்கே பணம் மிச்சம், கனிமப்பொருள்கள் மிச்சம், இயற்கைக்கும் பாதுகாப்பு. ஆனால், அதைச் செய்யாமல் நிழற்குடை கட்டி வைத்திருக்கிறார்கள். அந்நிழற்குடை நாறிப்போய்க் கிடக்கும். நாய்தான் படுத்திருக்கும். நிழற்குடையில் பக்கவாட்டு நிழலில் மக்கள் நின்றுகொண்டிருப்பார்கள். 

நாம் செய்த எல்லா மடத்தனங்களின் விளைவுகளையும்  இக்கோடையில் பட்டுணர்கிறோம். பழமொழியும் அதைத்தான் சொல்கிறது,  நிழலின் அருமையை வெய்யிலில் தெரிந்துகொள்கிறோம். ஆனால், தெரிந்துதான் கொண்டோமே தவிர மீண்டும் தொடர்ந்து ஆக்கவழியில் செயலாற்றுவோமா என்றால் தெரியாது. இனியும் நிழல்மரங்களை வளர்க்காவிடில் கட்டட நிழலும் கொதிப்பாகத்தான் இருக்கும். உயிர்வளியைப்போல உயிர்நீரைப்போல மரநிழல் என்பது உயிர்களின் உறைவிடம் என்பதை மறந்துவிட்டோம். எப்படியும் நாம் மறப்போம் என்றுதானோ என்னவோ, நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்று சொல்லிச்சென்றார்கள். 

- கவிஞர் மகுடேசுவரன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles