பழமொழி இன்பம் 20

Wednesday, March 15, 2017

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்..

மழை பெய்கையில் பார்த்திருக்கிறீர்களா? ஒரு மழைக்கு வாய்ப்பிருக்கையில், அது அவ்வாறே அளவாய்ப் பொழிந்துவிட்டுச் செல்லாது, அளவோடு பெய்யாமல் அடித்து நிமிர்த்துவிட்டுத்தான் போகும். இன்றோடு மழை தீர்ந்தது என்று இருக்கமுடியாது. மறுநாள் மாலையில் இன்னொரு பொழிவு இருக்கும். 

வெள்ளமும் அப்படித்தான். பொங்கிப் பெருகி வடியத் தொடங்கிவிட்டது என்று நினைக்குங்கால் மற்றொரு வெள்ளம் வரும். அது முன்பைவிடவும் பெரிதாகக்கூட இருக்கலாம். வாய்ப்புகளைப் பற்றிய விதிகளில் இது மிகவும் நுட்பமானது. வாய்ப்பின்மையைப் பற்றிய அறிவும் இதில்தான் அடங்கியிருக்கிறது. 

பொருளாதார விலையளவுகளில் இதைச் சோதித்துப் பார்க்கலாம். பத்து உரூபாய்க்கு விற்ற வெங்காயம் இருபது உரூபாய்க்கு விற்கத் தொடங்கும். மக்கள் அங்கலாய்ப்பார்கள். ‘கிலோ பத்துக்கு வித்தது இப்ப இருபது ரூபாயாம்... விலைவாசி இப்படி ஏறினால் எப்படித்தான் பிழைக்கறது?’ என்று அவர்கள் பதறுவார்கள். இருபது முப்பதாகி, முப்பது நாற்பதாகி, அறுபது உரூபாய்க்கும் அதே வெங்காயம் விற்கும். இப்போது அவர்கள் புலம்பி ஓய்ந்திருப்பார்கள். வெங்காயம் பயன்படுத்தப்படும் உண்பொருள்களைக் கைவிட்டு வேற்றுணவுகளைச் சமைக்கத் தொடங்குவார்கள். வெங்காயம் கிலோ நூற்றுக்கும் விற்கும். வெங்காயத்திற்குக் கிடைத்த விலையேற்றம் வேளாண்மையாளர்களிடம் ஆர்வத்தைத் தூண்டிவிட, எல்லாரும் பேரளவில் வெங்காயம் பயிரிடுவார்கள். விற்க விற்கத் தீராத அளவுக்கு வெங்காய மூட்டைகள் சந்தைக்கு வரத்து. மக்களும் கைவிட்டநிலையில் வெங்காயத்தின் சந்தைப்பாடு மிகுந்துவிட, அதன் விலை குறையத் தொடங்கும். நூற்றிலிருந்து எண்பதாகி, எண்பது அறுபதாகி மீண்டும் பத்து உரூபாய்க்கு வந்து நிற்கும். இது இப்படித்தான். 

ஒன்றின் தொடக்கம் - அது எழுச்சியோ வீழ்ச்சியோ - ஒற்றை அலையோடு தொடர்புடையதன்று. அது அலையலையாய் அடித்து, அலைவலு குன்றும்வரைக்கும் தொடர்வது. அதன்பிறகு, அலைகள் ஓயத்தொடங்கித் தணிவதும் தரைமட்டம் வரைக்கும் வருவதும் தவறமாட்டா. 

விலையலைகளைப் பற்றிய பொருளாதாரக் கொள்கை விளக்குநர்கள் இவற்றை ஐந்து அலைகளாகப் பகுக்கிறார்கள். முதல் அலை அடிக்கத் தொடங்கியபோதே நீங்கள் வாங்கி வைத்துக்கொள்ளலாம். இரண்டாம் அலை மிகச்சிறிதாக இருக்கும். ஆனால், மூன்றாம் அலை யாரும் எதிர்பாராத விலையுயர்ச்சியோடு இருக்கும். நான்காம் ஐந்தாம் அலைகள் அவ்வளவு வலுவானதாக இருக்க மாட்டா. ஆனாலும் விலையுயர்வு சற்றேனும் இருக்கும். அவ்வாறு ஐந்து அலைகள் அடித்து முடித்தால்தான் அவ்விலையில் எதிர்த்திசை மாற்றம் ஏற்படும். எதிர்த்திசையிலும் இதே ஐந்து அலைகள்தாம். இதை ‘எலியட் வேட் தியரி’ என்பார்கள்.  

இதேதான் வாழ்வின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் பொருந்தும். ஒரு குடி கெடுகிறது என்றால் அந்தக் குடிக்கே அடுத்தடுத்த தீமைகளும் வரக்கூடும், அதில் நிலைகுலைந்தால் அவ்வளவுதான். அந்த அடிகள் பொறுத்துக்கொள்ள முடியாதபடியே இருக்கும். நேரம் சரியில்லை என்றால் மூர்க்கமாக முயலக் கூடாது. கீழே விழும் கத்தியை கையைக் குறுக்காட்டி நிறுத்தக் கூடாது. முடிந்தவரை விலகி நிற்க வேண்டும். 

காலில் ஒரு காயம் என்றால் ஆறுவதில்லை. ஏன்? காலானது உடல் எடை மொத்தத்தையும் தாங்கி நிற்கிறது. அதுவுமின்றி எந்நேரமும் நிலத்தோடு உராய்கிறது, நடக்கிறது. காயமற்ற பொழுதில் ஏதேனும் காலில் பட்டால் எந்தப் பாதிப்பும் இல்லை. அதே படுதல்கள்தாம் காயத்தின்போதும் காலில் படுகின்றன. ஆனால், உயிர்போவதுபோல் வலிக்கிறது. பட்ட காலிலேயே படுகிறது. இதற்கு முன்பு பட்டதில்லையா? இதற்கு முன்பும் இப்படித்தான் பட்டது. ஆனால், இப்போது பட்டதைத் தாங்கும் ஆற்றல் கெட்டுவிட்டது. உடனே வலியுணர்த்துகிறது. 

ஒரு குடும்பம் நன்றாக வாழ்கிறது என்றால் பெரிய தீமையைக் கூட எளிதில் கடந்துவிடும். ஆனால், அக்குடும்பம் கெட்டுக் கிடக்கையில் சிறு தீங்கும் தாங்கமுடியாத பெருங்கொடுமையாய்த்தான் முடியும். இப்பொழுது காற்றடிக்கிறது என்றால் தூற்றிக்கொள்ளவும் தெரியவேண்டும். காலில் காயம்பட்டிருக்கிறது என்றால் நடையைக் குறைத்துக்கொள்ளவும் வேண்டும். கெட்டிருக்கிறோம் என்றால் இன்னொரு கேட்டுக்கு வழிவகுக்கும் எதையும் நினைத்தே பார்க்கக்கூடாது. ஏனென்றால், “பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்.”   

- கவிஞர் மகுடேசுவரன் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles