அழகுதமிழ்பழகு - 24

Wednesday, March 15, 2017

ஐகாரக் குறுக்கம்

ஐகாரக் குறுக்கம் என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். ஐ என்ற எழுத்து இருக்கிறது. இது நெடிலெழுத்து. நெடில் என்னும் வகைப்பாடு, ஓரெழுத்தின் ஒலிப்பளவு இரண்டு மாத்திரைகள் என்னும் தன்மையால் தோன்றுவது. ஐ என்னும் எழுத்து இரண்டு மாத்திரைகள் ஒலிப்பளவுள்ள உயிர் நெடில் எழுத்து என்பது நமக்குத் தெரியும்.

ஐகாரம் என்றால் ஐ என்ற உயிரெழுத்து வரிசையில் தோன்றுகின்ற உயிரெழுத்தையும் (ஐ) உயிர்மெய்யெழுத்துகளையும் (கை, ஙை, சை, ஞை, டை… னை) குறிக்கும். ஒரு விளக்கத்திற்காக, ஐ என்ற உயிர் நெடிலை மட்டுமே எடுத்துக்காட்டுக்கு எடுத்துக்கொண்டு இப்பகுதிக்குள் செல்வோம்.  
 
ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம் ஆகிய வழக்குகள் ஏன் வருகின்றன என்று ஆராய்ந்ததில் எனக்கு முதலில் துலங்கியது ஒன்று. ஆ என்ற நெடில் அ என்ற குறிலோடு இருக்கிறது. அவ்வாறே ஒவ்வொரு உயிர்நெடில் எழுத்துகளும் தமக்குரிய உயிர்க்குறில்களோடு இருக்கின்றன. அ, ஆ / இ, ஈ / உ, ஊ / எ, ஏ / ஒ, ஓ  என இவ்வெழுத்துகள் குறில் நெடில் இணைகளாய் நன்கு அமைந்திருக்கின்றன. ஆனால், ஐ என்ற நெடில் எழுத்துக்குக் அவ்வொலிப்பில் ஒரு குறில் இல்லை. ஔ என்ற நெடில் எழுத்துக்கும் அவ்வொலிப்பில் குறில் இல்லை.
 
ஏன் குறில் இல்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அதற்குக் கிடைக்கின்ற விடையில்தான் இவ்வெழுத்தின் செம்மாந்த தனித்தன்மை விளங்கும். ஐ என்று ஒலித்துப் பாருங்கள். ‘அய்’ என்ற ஓசைதான் வரும். இலக்கணப்படி அய் என்று ஒலிப்பதும்கூட தவறுதான். ‘அஇ’ என்றுதான் ஒலிக்க வேண்டும். அ என்ற ஒலிப்பில் தொடங்கி இ என்ற ஒலிப்பில் முடிக்கும் எழுத்துத்தான் ஐ. அ என்பதை முழுமையாக ஒலித்து இ என்ற ஒலிப்பைப் பாதியிலேயே நிறுத்த வேண்டும். ஆக, ஐ என்ற எழுத்தின் ஒலிப்பே இரண்டு எழுத்துகளின் சேர்க்கை என்றாகிறது.  
 
இவ்விடத்தில் இன்னொரு இலக்கணச் செய்தியையும் கூறிவிடுகிறேன். உயிர்மெய் எழுத்துகளில் அரையுயிர் எழுத்துகள் என்ற வகைப்பாடு ஆங்கில இலக்கணத்தில் இருக்கிறது. அவற்றை “Semi Vowels” என்பார்கள். உயிரெழுத்தைப் போலவே ஒலிக்கும் உயிர்மெய்யெழுத்துகள் அரையுயிர் எழுத்துகள் எனப்படும். தமிழில் அவ்வாறு நாம் வகைப்படுத்திக் கொள்ளவில்லையே தவிர, நம் மொழியிலும் அரையுயிர் எழுத்துகள் உள்ளன. அவை எவை தெரியுமா ? யி, யீ என்ற இரண்டு எழுத்துகளையும் சொல்லிப் பாருங்கள். இ, ஈ என்பனவற்றைப் போன்றே ஒலிப்பதைக் காண்பீர்கள். வு, வூ என்னும் எழுத்துகளை ஒலித்துப் பாருங்கள். உ, ஊ என்பனவற்றைப் போன்றே ஒலிக்கக் காண்பீர்கள். ஆக, யியீயும் வுவூவும் தமிழ் உயிர்மெய்களில் அரையுயிர் எழுத்துகளாக (Semi Vowels) கருதத்தக்கவை.
 
இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது என்ன? இ என்ற உயிரெழுத்தும் உ என்ற உயிரெழுத்தும், ஒலிப்பின் பிற்சேர்க்கையாய் மாறி அவ்வெழுத்தின் உயிர்த்தன்மையை மிகுவித்துக்கொண்டே இருக்கும் என்பதுதான். அதனால் அ என்ற உயிரெழுத்தின் ஒலிப்போடு இ சேர்ந்து அஇ – ஐ என்று ஒலிக்கிறது. ஐகார உயிர்மெய்யெழுத்துகளுக்கும் இதே ஒலிப்புத்தன்மைதான். க என்ற உயிர்மெய்யோடு இ சேர்ந்து கஇ = கை என்று ஒலிக்கிறது.
 
அ என்னும் குறிலோடு இ என்ற குறிலைப் பாதியாய் ஒலித்து நிறுத்தினால் ஐ என்ற ஒலிப்பு கிடைக்கும். இதுதான் ஐ என்னும் உயிர்நெடில் தனிவரிசையாய்த் தோன்றிமைக்கான காரணம்.
 
இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள், அ என்ற குறிலுக்கு ஒரு மாத்திரை ஒலிப்பளவு. இ என்ற குறிலுக்கு ஒரு மாத்திரை ஒலிப்பளவு. அஇ = ஐ . 1+1 = 2. ஐ என்ற உயிர் நெடிலுக்கு இரண்டு மாத்திரைகள் ஒலிப்பளவு.
 
இதுவரைக்கும் கணக்கு சரியாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒரு சொல்லில் ஐ என்ற எழுத்து, ஐ என்ற ஒலிப்பு இடம்பெறும்போது அது அவ்வாறே இரண்டு மாத்திரை அளவில் ஒலிப்பதில்லை. ஐகார எழுத்துகளான கை, சை, ஞை.. னை வரை இங்கே சேர்த்துக்கொள்ளுங்கள்.
 
ஐ என்கின்ற எழுத்தைத் தனியாகச் சொன்னீர்கள் எனில் அங்கே அவ்வெழுத்துக்கு இரண்டு மாத்திரைகள்தாம். ஆனால், ஒரு சொல்லோடு ஐ என்ற எழுத்தோ, பிற ஐகார எழுத்துகளோ சேர்ந்து வரும்போது இரண்டு மாத்திரைகள் என்னும் அளவில் நெடிலாய் ஒலிப்பதில்லை. அங்கே இரண்டு மாத்திரைகளிலிருந்து குறைந்து ஒலிக்கிறது. இதைத்தான் ஐகாரக் குறுக்கம் என்கிறார்கள். ஐகார எழுத்துகள் ஒரு சொல்லின் முதலிலோ இடையிலோ கடையிலோ தோன்றி வழங்கும்போது, நெடில் எழுத்துக்கேயுரிய இரண்டு மாத்திரைகள் என்னும் ஒலிப்பளவிலிருந்து குறுகி ஒலிப்பதே ஐகாரக் குறுக்கம் எனப்படுகிறது.
 
ஐ, கை, மை, பை என்று அவ்வெழுத்துகளைத் தனியாகச் சொன்னால் இரண்டு மாத்திரைகள்தாம். சொற்களில் சொன்னால் இரண்டு மாத்திரையளவில் ஒலிக்க முடியவில்லை. அங்கே மாத்திரையளவில் குறுக்கம்தான். ஐகாரங்கள் சொல்லில் எங்கெங்கே தோன்றும்? இதற்காகத்தான், மொழி முதலெழுத்துகள், மொழியிடையெழுத்துகள், மொழியீற்றெழுத்துகள் என முற்பகுதியில் பார்த்தோம். எழுத்துகள் சொற்களில் இடம்பெறும் முதல், நடு, கடைசி என்னும் இடத்தைப் பொறுத்து இவ்வகைப்பாடு கூறப்படும். வல்லின மெய்கள் மொழியீறாகத் தோன்றமாட்டா. டணறன ஆகிய எழுத்துகள் சொல் முதலில் தோன்றமாட்டா. தனி உயிரெழுத்துகள் சொல்நடுவில் தோன்றமாட்டா. இப்படி எண்ணற்ற விதிகள் இருக்கின்றன.
 
‘ஐகாரங்களில் பல எழுத்துகள்’ சொல் முதலில் தோன்றும். ஐகார உயிர்மெய்யெழுத்துகள் (கை, சை, தை, மை, னை, பை) சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் தோன்றும். ஓரெழுத்து ஒருமொழியாகவும் தோன்றும். ஓரெழுத்து ஒருமொழி என்றால் ஒரே எழுத்தில் அமைந்த சொற்கள். சரி. இப்போது ஐகாரக் குறுக்கத்தின் ஒலிப்புக் குறுக்கம் எப்படி அமைகின்றன என்பதைப் பார்க்கலாம்.
 
ஐகார எழுத்துகளைத் தனித்து ஒலித்தால் அவற்றுக்கு இரண்டு மாத்திரைகள்தாம். ஐ என்னும் நெடில் எழுத்து என்று கூறுகிறோம். இவ்வாறு சொல்லும்பொழுது ஐ-க்கு இரண்டு மாத்திரைகள்தாம். அடுத்து ஓரெழுத்து ஒருமொழி என்ற வகைப்பாடும் இருக்கிறதே, ஐ என்றால் அழகு என்னும் திரைப்பாடல்கூட வந்துவிட்டதே. ஐ என்பதற்கு என்னென்ன பொருள்கள் வழங்கப்படுகின்றன, தெரியுமா? அழகு, கோழை, இருமல், தலைவன், கணவன், ஆசான், அரசன், தந்தை, கடவுள், அம்பு, நுண்மை, ஐந்து, ஐயம், கடுகு, சர்க்கரை. ஐ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்கு இத்தனை பொருள்கள் உள்ளன. இப்பொருளில் இச்சொல் பயிலும்போது ஐ என்ற எழுத்துக்கு இரண்டு மாத்திரைகள்தாம். அவ்வாறே கை, தை, பை, மை வை ஆகிய ஐகார ஓரெழுத்து ஒருமொழிச் சொற்களுக்கும் இரண்டு மாத்திரைகள்தாம்.
 
அதே வேளையில், ஐ என்ற எழுத்து மொழி முதலாய் இடம்பெற்று வரும் சொற்கள் உள்ளன. ஐந்து, ஐப்பசி, கைத்தலம், மைப்புட்டி, தையல், பைஞ்சுதை என இச்சொற்களில் ஐகார எழுத்துகள் பயிலும்போது அவற்றுக்கு இரண்டு மாத்திரைகள் இல்லை. ஒன்றரை மாத்திரைதான். ஏன்? ஐ என்ற ஒலிப்புக்கு அங்கே ‘அய்’ என்ற ஒலிப்பளவுதான் சொல் முதலில் வழங்கப்படுகிறது. இந்த ஒருமைப்பாட்டைக் கருதித்தான் சிலர், ஐ என்ற எழுத்தையே ஒழிக்கலாம் என்று பரிந்துரைத்தனர். மொழிமுதலாகத் தோன்றும் ஐ என்ற எழுத்துக்கு ஒன்றரை மாத்திரையளவுதான் ஒலிப்பளவு என்னும்போது அதை ‘அய்’ என்று அதே ஒன்றரை மாத்திரையளவில் வழங்கிவிட்டுச் செல்லலாமே, தமிழுக்கு எழுத்துச் சுமை குறையுமே என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம். அவ்வாறெல்லாம் எளிமைப்படுத்திச் செல்லுமளவுக்கு மொழியியற்கை தாழ்ந்த மொழியன்று நம் தமிழ் என்பதே என் கொள்கை.
 
மொழி முதல் ஐகாரங்களுக்கு ஒன்றரை மாத்திரை ஒலிப்பளவு என்றால், மொழியிடையிலும் மொழியிறுதியிலும் தோன்றும் ஐகார எழுத்துகளுக்கு ஒரு மாத்திரைதான். வியப்பாக இருக்கிறது? ஐகாரம் என்பது நெடிலாக இருக்கையில் அவ்வெழுத்துகள் சொல் நடுவிலோ சொல் இறுதியிலோ தோன்றினால் குறிலைப்போல ஒரு மாத்திரைதான். இதுதான் ஐகாரக் குறுக்கத்தின் சிறப்பு. ஐகார நெடில் எழுத்துகளுக்கு குறிலைப்போல் ஒரு மாத்திரை. ஏனென்றால் ஒரு சொல்லில் முன்னும் பின்னும் வரும் எழுத்துகள் மொழி நடுவில் இடம்பெறும் உயிரோசையை ஈர்த்துக்கொள்கின்றன. மொழி நடுவில் இடம்பெறும் ஐகாரக் குறுக்கத்துக்கு இது இயற்கை என்றால், மொழி ஈற்றில் இடம்பெறும் ஐகாரக் குறுக்கத்துக்கு என்ன நியாயம் கற்பிப்பது? அதற்கும் வழியுண்டு. ஒரு சொல்லைச் சொல்லி முடிக்கையில் நமது உச்சரிப்பு ஆற்றலில் தணிவு ஏற்படும். அங்கே நெடிலைச் சொல்லும் திறன் மழுங்கி நிற்கும். அவ்வாறு மழுங்குவதற்குரிய இயற்கையோடு இகர உகர எழுத்துகள் ஈற்றோசைகள் அமைந்திருக்கின்றன. மொழியீற்றோசையை அடுத்து வரும் சொல்லும் குலைக்கும். இவையெல்லாம்தான் ஐகாரங்கள் மொழியிடை, ஈற்றில் குறுகக் காரணம். பழையவை, படைகள், குறைவு, புனைவு போன்ற சொற்களில் மொழியிடை ஐகாரக் குறுக்கங்கள். திணை, பனை, உண்மை, யாக்கை, வையை ஆகியன மொழியீற்று ஐகாரக் குறுக்கங்கள்.
 
சிவஞான முனிவர் என்பவர் மொழிமுதலில் ஐகாரங்கள் குறுகமாட்டா என்னும் கொள்கையுடையவர். மொழி முதலெழுத்தாக வருகின்ற ஐகாரங்கள் நெடிலாகவே இருக்கின்றன என்பது அவர் கொள்கை. அவர் கூறுவதிலும் உண்மை உண்டு என்று ஏற்கும் தமிழறிஞர்கள் உள்ளனர்.

- கவிஞர் மகுடேசுவரன்   

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles