நடிப்பு பயிற்சியால் மட்டும் தான் வளரும்! நடிகை லட்சுமி ப்ரியா சந்திரமௌலி 

Wednesday, March 15, 2017

“நடிக்க வர்றேன்னு சொல்லிட்டு, எல்லாருமே சுலபமா வந்துட முடியாது. ஆர்வம் இருக்குன்னு நடிக்க வர்றது தப்பு. நடிப்புக்கலைக்குன்னு ஒரு தனி மரியாதை இருக்கு. நடிப்புங்கிறது ஒரு தனித்திறமை. அந்த திறமை பயிற்சியால் மட்டும்தான் வளரும். அப்படி திறமையை வளர்த்துக்கிட்டு வர்ற கலைஞர்களுக்கு, இங்க தகுந்த மரியாதை தரப்படுறது இல்லை.

அதாவது, அழகாக இருக்குறவங்கதான் நடிக்கலாம்கிற பார்வை என்னிக்கி மாறுதோ, அன்னிக்கிதான் தரமான நடிகர்கள் சினிமாவுக்கு வருவாங்க” என்று  சாட்டையைச் சொடுக்கிப் பேசத் தொடங்குகிறார் நடிகை லட்சுமி ப்ரியா சந்திரமௌலி. 

மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக இருந்த நீங்கள் நடிக்க வந்தது எப்படி?

“கலைகள் மீதான காதல் பள்ளி நாட்கள்லருந்தே இருந்துச்சு. கல்லூரியில் படிக்கும்பொழுது கூட, கலை நிகழ்ச்சிகள்ல பங்கெடுத்துப்பேன். அந்த ஆர்வம்தான் என்னை மனிதவள பிரிவுல முதுகலை படிப்பை முடிச்சதும், ‘ஏவம் குழு’வில வேலைக்கு சேர வச்சது. அங்க நான் நடிக்கவே போகலை. டிக்கெட் விக்கறதுல இருந்து, புரொடக்‌ஷன் வேலைகள்ல உதவி செய்றதுன்னு எல்லா வேலைகளையும் செய்வேன். 

அங்கே இருக்குற டைரக்டர்ஸ் நடிப்பு சொல்லிக் கொடுத்துட்டு இருப்பாங்க. அதைப் பார்த்து தான், நான் நடிக்க கத்துக்கிட்டேன். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து தான் நடிப்புல இறங்கினேன். ஒரு சமயம் டிக்கெட் விற்கும்பொழுது, படத்துல நடிக்க விருப்பம் இருக்கான்னு ஒரு திரைப்பட இயக்குனர் கேட்டாரு. எனக்கு நடிக்கணும்னு ஆசை இருந்தது. சரி அதையும் ட்ரை பண்ணலாமேன்னு சினிமாவுல குதிச்சிட்டேன்.”

 

தமிழ் நாடகத்துக்கும்  ஆங்கில நாடகத்துக்கும் என்ன வேறுபாடு? 

“தமிழ் நாடகத்துக்கும் ஆங்கில நாடகத்துக்கும் உள்ள ரசிகர்களே வேற. தமிழ் நாடகம் என்றாலே, உடனே நினைவுக்கு வருவது சபா. கூத்துப்பட்டறை போன்ற ஆழமான கருத்துள்ள நாடகங்கள் போடும் குழுக்களுக்கு வர்ற ரசிகர்கள் வேற. பொதுமக்கள் அதிக அளவுல விரும்பிப் பார்க்குறது எஸ்.வி.சேகர் மற்றும் கிரேஸி மோகன் டிராமாக்கள்தான்.

ஆங்கில நாடகங்களுக்கு கல்லூரி மாணவர்கள்தான் ஆடியன்ஸ்னு இருந்த காலம் மாறிடுச்சு. ஆங்கில நாடகங்கள் பார்க்க வர்ற ரசிகர்களை ‘பாப் கல்ச்சர் சொஸைட்டி’ ன்னு சொல்லுவாங்க. பத்திரிகைகள்ல ஆங்கில நாடகங்கள் பற்றி எழுத ஆரம்பிச்சதும், அதைப் பற்றிய விழிப்புணர்வு நிறைய மக்களுக்கு போய் சேர்ந்துச்சு. இரண்டாயிரம் பார்வையாளர்கள்தான் என்கிற காலம் மாறி, இப்போ நிறைய ஆடியன்ஸ் எங்களுக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு நாடகத்தை மேடையேத்துறதுக்கு, நாங்க எவ்ளோ மெனக்கெடறோம்னு தெரிஞ்சிக்கிட்டாங்க.

ஒரு தடவை நாடகத்தை மேடையேற்ற, 2 மாதங்கள் வரை ஒத்திகை பார்த்துதான் ஆகணும். சினிமா மாதிரி இங்கே ரீடேக் எல்லாம் கிடையாது. கடின உழைப்பை போட்டுதான் நாடகத்தை நடத்தறோம்னு பல பேருக்கு தெரியறது இல்லை.”

 

இன்றைய சினிமாவை நாடகத்துடன் ஒப்பிட முடியுமா?

“ரெண்டுமே வெவ்வேறு மீடியம்! திரைப்படத்தைப் பொறுத்தவரைக்கும், ஒரு டயலாக் சரியா வரலைன்னா எத்தனை டேக் வேணுமானாலும் எடுக்கலாம். ஆனால் மேடை நாடகம் அப்படியில்லை. அந்த நேரத்துல என்ன பேசுறீங்களோ அதான். ஒரு படத்துல எங்களை மாதிரி மேடை நாடக நடிகர்கள் நடிச்சாங்கன்னா, இயக்குனர்களுக்கு கையாளுறது ரொம்ப சுலபம். இதை நான் பிராக்டிகலாகவும் பார்த்து தான் சொல்லுறேன். டயலாக் பேப்பரை எங்ககிட்டே கொடுத்தா, நாங்க அதை மனப்பாடம் செஞ்சு எப்படி பெர்பார்ம் பண்ணனும்னு புரிஞ்சுக்கிட்டுதான் வருவோம். இயக்குனர் கூட உட்கார்ந்துகிட்டு, அவங்க சொல்லுறதையும் நல்லா உள்வாங்கிட்டு, சுலபமாக எங்களால நடிக்கவும் முடியுது. பாலிவுட்ல பார்த்தீங்கன்னா, நஸ்ருதீன்ஷா போன்ற மேடை நாடக கலைஞர்களுக்கு ஏற்ற மாதிரி ஸ்க்ரிப்ட் எழுதுவாங்க. இதுநாள் வரைக்கும் தமிழ் சினிமா அப்படியில்லை. இப்போ அந்த போக்கு கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வருது.”

 

கார்ப்பரேட் தியேட்டர் செய்யும் எண்ணம் இருக்கிறதா?

“என்னது இருக்காவா? நான் ஏற்கனவே ‘ஏவம்' குழு மூலமாக அதை செஞ்சிட்டு இருக்கேன். இப்போ எல்லோருக்கும், பவர் பாயிண்ட் பிரசென்டேஷன் ரொம்ப அலுத்துடுச்சு. கொஞ்சம் வெரைட்டி எதிர்பார்க்குறாங்க. கம்பெனியைப் பற்றி நாடகமா நடிச்சு காண்பிச்சா, அவங்களுக்கும் சுவாரசியமா இருக்கும்.”

 

நாடக நடிகர்களுக்கு திரைப்படங்களில் முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்ற கருத்து இருக்கிறதே? 

“இதே கேள்வியை, நாங்களும் கேட்டுட்டு தான் இருக்கோம். நாடக நடிகர்கள் சப்போர்டிங் ரோல் நல்லா செய்வாங்கன்னு சொல்றாங்க. ஆண் மேடை நடிகர்கள் நிலைமையாவது கொஞ்சம் பரவாயில்லை, ஆனால், பெண் கலைஞர்களின் பாடு தான் கொஞ்சம் சிரமம். 

ஒரு கதை அவங்களை சுத்தி நடக்கிற மாதிரி, தைரியமா படம் எடுக்க வரமாட்டேங்கிறாங்க. இங்க, பெண்களுக்கான ஆழமான அழுத்தமான ரோல் ரொம்பவே குறைவுதான். அதோட, நாடகக் கலைஞர்கள்னா ஜிப்பா மாட்டிகிட்டு, ஜோல்னா பை வச்சுக்கிட்டு, பரட்டை தலையோட இருக்கணும்னு அவசியம் இல்லை. சமீபத்துல வந்த ‘ஜோக்கர்' திரைப்படத்துல நடிச்ச குரு சோமசுந்தரத்தோட நடிப்பே நாடக கலைஞர்களோட திறமைக்கு ஒரு சான்று” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார் லட்சுமி ப்ரியா. 

இறுதியாக, இன்றைய நவீன யுவதிகளுக்கென்று ஒரு தகவலைப் பகிர்ந்தார். “சினிமாவுல நடிக்கிற ஹீரோயின்ஸ் எவ்ளோ வெள்ளையா இருக்காங்க, நான் அப்படியில்லையேன்னு தயவுசெய்து வருத்தப்படாதீங்க. யதார்த்தத்தைப் புரிஞ்சுக்கோங்க. நாம புழங்குற இந்த ஊர்ல, பொது வெளியில் நிறையா அழுக்கு புழுதி இருக்கும். அதைக் கடந்து தான், நாம தினமும் போயிட்டு இருக்கோம். தன்னுடைய அழகைக் கட்டிக் காக்க, ஒவ்வொரு நடிகைகளும் எவ்வளவு சிரமப்படுறாங்கன்னு புரிஞ்சுக்கோங்க. நான் ஒரு ஹோம்மேக்கரா நடிக்கறேன்னா, கிச்சன்ல சமைக்கிற மாதிரி மூஞ்சியில எண்ணெய் வழிஞ்சிட்டு தான் இருப்பேன். வெள்ளையா மேக்கப் போட்டு, தலைமுடியை பறக்கவிட்டு வந்தேன்னா யதார்த்தத்தோடு ஒட்டாது. சினிமா வேற இயல்பு வேறன்னு புரிஞ்சுக்கோங்க” என்ற வேண்டுகோளுடன் விடைபெற்றார்.

இயல்பே அழகென்பவர்களுக்கு, கண்டிப்பாக லட்சுமி ப்ரியா தேவதை தான்.. 

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles