மேடை நாடகத்துக்கு அழிவே கிடையாது!  நாடக நடிகர் ஸ்ரீதர்

Wednesday, March 1, 2017

“என்னோட பூர்வீகம் கோயம்புத்தூர். கல்லூரி காலத்துல, கனியூரான் என்ற ஒரு நாடக இயக்குனர் சிறை அரங்கத்துல நாடகம் ஏற்பாடு செஞ்சிருந்தாரு. நடிகர் சிவகுமார் தலைமையில, ஏ.சி., டி.எஸ்.பி. இப்படி எல்லாரும் கலந்துக்கிறதா இருந்தது. அதுல நடிக்கவிருந்த கதாநாயகனுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமப் போச்சு.

கடைசி நேரத்துல அவங்களுக்கு ஆள் கிடைக்கல. நான் கல்லூரி நாடகங்கள்ல நடிப்பேன்னு கேள்விப்பட்டு, என்கிட்ட முப்பது பக்கம் கொண்ட வசனத்தை கொடுத்து, இரண்டு நாட்களுக்குள் இதை எப்படியாவது படிச்சி தயாராகிடுங்கன்னு ரொம்ப கெஞ்சிக் கேட்டுக்கிட்டாரு கனியூரான். 

ஒரு வித தயக்கத்தோட அதை வாங்கி நல்லா படிச்சு, எந்த ரிகர்சலும் இல்லாம மேடையில நடிச்சேன். நடிகர் சிவகுமார்கிட்ட பாராட்டு வாங்கினேன். இந்தச் சம்பவமே நான் நடிக்க வரக் காரணம்” என்று தன்னுடைய நடிப்புப்பிரவேசத்தை உணர்ச்சிப்பூர்வமாக நினைவு கூர்கிறார் மேடை நாடக நடிகர் ஸ்ரீதர்.

 

உங்களது நாடக அனுபவம் எதனைத் தந்ததாக நினைக்கிறீர்கள்?

“மேடை நாடக அனுபவத்தினாலதான், என்னால தொலைக்காட்சி நாடகங்கள்ல நடிக்க முடிந்தது. ‘கோலங்கள்’, ‘ஆனந்தம்’, ‘கலசம்’ இப்படி இருபது நாடகங்கள்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. சினிமா வந்ததும் டிராமா அழிஞ்சுடுச்சுன்னு என்கிட்ட சொல்லுவாங்க. என்னைப் பொறுத்தவரை கலைத்துறையின் இரு கண்கள்தான் சினிமாவும் மேடை நாடகங்களும். சினிமாவுல நடிக்க மேடை நாடக அனுபவமே போதும். 

ஒரு சம்பவத்தை இங்கே நினைவுகூர விரும்புறேன். இயக்குனர் ஷங்கரோட ‘நண்பன்’ படத்துல, எனக்கு முதலமைச்சர் வேடம் கொடுத்திருந்தாங்க. அவரோட உதவியாளர்கள், நான் பேச வேண்டிய வசனத்தையே சொல்லலை. திடீர்னு கேமரா செட் பண்ணி, நீங்க பேசுங்கன்னு சொன்னாங்க. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல. ஆனாலும், நானே ஒரு பக்கத்துக்கு சொந்தமா வசனம் பேசிட்டேன். எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போயிட்டாங்க; அதோட பாராட்டவும் செஞ்சாங்க. மேடை நாடக அனுபவம் தான், எனக்கு அந்தச் சூழ்நிலையில கைகொடுத்துச்சு.”

 

மேடை நாடக நடிப்புக்கும், தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பதற்கும் இடையே வேறுபாடு இருக்கிறதா?

“நிறையவே இருக்குங்க! மேடை நாடகங்கள்ல நடிக்கும்பொழுது, பக்கம் பக்கமா டயலாக் கொடுப்பாங்க. அதை நல்லா மனப்பாடம் பண்ணிட்டு நடிக்கணும்; பாடி லாங்குவேஜ், எக்ஸ்பிரஷன்ஸ் எல்லாத்தையும் ஒருங்கிணைச்சு நடிக்கணும். தொலைக்காட்சியில் அப்படியில்லை. நிறைய க்ளோஸ் அப் வைப்பாங்க. நாமளே நல்ல நடிச்சாலும், கூட நடிக்குறவங்க டேக் வாங்கலாம். அதனால திருப்பியும் பெர்பார்ம் செய்ய வேண்டிவரும். ஆனாலும், மேடையில நடிக்குறதைவிட தொலைக்காட்சியில நடிப்பது கொஞ்சம் சுலபம்தான்.”

 

மேடை நாடகங்களில் நீங்கள் எந்தெந்த ஜாம்பவான்களுடன் பணியாற்றியிருக்கிறீர்கள்?

“நடிகர் மனோகரோட குழுவிலேதான் நடிச்சிட்டு இருந்தேன். முதன்முதலா என்னைப் பார்த்த மனோகர், “இளமைக்காலங்கள்ல என்னைப் பார்க்குற மாதிரியே இருக்கு”ன்னு சொன்னாரு. அவருகிட்டதான், நடிப்பை நல்லா கத்துக்கிட்டேன். செட்ல ரொம்ப கலகலப்பா இருப்பேன், இறுக்கமா இருக்கிறதை கூடுமானவரை தவிர்த்திடுவேன். அதனால, எல்லோரும் என்னோட விரும்பிப் பணியாற்றுவாங்க. நான் தூர்தர்ஷன் ஆர்ட்டிஸ்ட். அதனால, தூர்தர்ஷன் டிராமாக்கள் எல்லாத்துலயும் நடிப்பேன். எனக்குன்னு ஒரு குழு இல்லாமல், மத்தவங்க டிராமாவுல  நடிச்சேன். 

மௌலி ட்ரூப்ல நடிச்ச அனுபவம் இருக்கு. அவரோட வேலை செய்றது, ரொம்பவே ஜாலியா இருக்கும். ‘ஸ்ரீதர் இருந்தாலே அந்த இடம் கலகலப்பா இருக்கும்’ன்னு வெண்ணிற ஆடை மூர்த்தி எப்போதும் சொல்லுவாரு.  சிரிப்பு, கலாட்டான்னு கொஞ்சமும் கஷ்டமே தெரியாம வேலை பார்ப்போம்.”

 

மக்களின் வரவேற்பு மேடை  நாடகங்களுக்கு எப்படி இருக்கிறது?  

“இன்னைக்கும் எஸ்.வி. சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் நாடகங்களுக்கு கூட்டம் வந்திட்டு தான் இருக்கு. எத்தனை சினிமா வந்தாலும், மேடை நாடகம் அழியல. சிவாஜி கணேசன், மனோகர் போன்றவர்களெல்லாம், மேடை நாடகத்துல இருந்துதான் திரைப்படத்துறைக்கு வந்தாங்க. மேடை நாடகத்துல நடிக்கும்பொழுது, உங்களோட ஒவ்வொரு அசைவையும் ஆடியன்ஸ் உத்து பார்த்துட்டு இருப்பாங்க. தப்பா செஞ்சீங்கன்னா, உடனே கத்தி கூச்சல் போட்டுடுவாங்க. தொலைக்காட்சி நாடகங்கள்ல அப்படி இல்லை, அதோட பார்மேட் வேற. எத்தனை கலைகள் வந்தாலும், தாய் கலையான மேடை நாடகத்துக்கு அழிவே கிடையாது.”

திறமைகள் இருந்தும், செலவு செய்ய முடியாமல் நாடகத்தை விட்டுச்சென்றவர்கள் அதிகம். இந்நிலை மாறுமா? 
“ஒரு உண்மையைச் சொல்லணும்னு நினைக்குறேன். எல்லாத் துறையிலேயும் அரசியல் இருக்கத்தான் செய்யுது. நாடக நடிகர் ஓடையப்பன் வந்திருந்தாருன்னா, நமக்கு சிவாஜி கணேசனை தெரிஞ்சிருக்காது. இன்னைக்கும் ஓடையப்பன் அப்படீன்னா எழுந்து நிக்கறவங்க இருந்துட்டுதான் இருக்காங்க. இப்படி திறமையானவங்க நிறைய பேர் காணாமல் போயிருக்காங்க. 

சோ மாதிரியானவங்க நடத்துற பெரிய நாடக குழுக்கள் எப்போதுமே, செட்டா ஆட்களை வச்சிருப்பாங்க. அதாவது, ராஜா வேஷத்துக்கு இவங்க, டாக்டர்னா இவருன்னு அவங்களுக்குள்ளேயே தேர்ந்தெடுத்துப்பாங்க. இதனால, வேற வேலையாட்களுக்கு சான்ஸ் கிடைக்காமப் போகுது. நாடகமும் வேண்டாம், சினிமாவும் வேண்டாம்னு பல திறமையாளர்கள் ஓடிப் போயிருக்காங்க. எஸ்.வி சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் நாடகங்கள் கூட கொஞ்சம் தொய்வடைஞ்சது. அதாவது மக்களோட வரவு கம்மியாச்சு. அதனால, நாடகக்கலையை காப்பாற்றுவதற்கு அரசுகிட்ட யாராவது தைரியமா எடுத்துச் சொல்லணும். அதுதான் என்னோட ஒரு வேண்டுகோள்.”

 

மறக்க முடியாத பாராட்டு ?

“நிறைய இருக்கு. முதன்முதலா நடிகர் சிவகுமார் தலைமை தாங்கிய ஒரு நாடகத்துல நடிச்சேன்னு சொன்னே இல்லையா! அந்த மேடையில சிவகுமார் என்னைப் பாராட்டி, நீங்க கட்டாயம் சினிமாவுக்கு வரணும்னு  சொன்னாரு. அதுதான் நான் சினிமாவுக்குள்ள வர உந்துதலா இருந்துச்சு. நான் டயலாக் பேசுற விதத்தைப் பார்த்து, இயக்குனர் ஷங்கர் என்னைப் பாராட்டினார். “சிவாஜி கணேசனுக்கு அப்புறம் நீங்கதான் நல்லா டயலாக் பேசுறீங்க”ன்னு என்கிட்ட நிறைய பேர் சொல்லியிருக்காங்க. இந்த மாதிரியான அங்கீகாரம் விருதுக்கும் மேல.." என்று தனது நாடக அனுபவத்தின் ஒரு துளியை நாம் சுவைக்கத் தந்தார் நடிகர் ஸ்ரீதர்.

நடிகனுக்கு நல்ல உடற்கட்டு மிகவும் முக்கியம் என்று சக நடிகர்களை வலியுறுத்துவது மட்டுமல்லாமல், அதைத் தானும் கடைபிடித்து வருபவர் ஸ்ரீதர். அதனால் தான், சிவகுமார் தொடங்கி சிங்கம் 3 சூர்யா வரை தொடர்கிறது இவரது நடிப்புப் பயணம்.

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles