பழமொழி இன்பம் 19

Wednesday, March 1, 2017

கூத்தாடி கிழக்கே பார்ப்பான் கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்..

தெற்றென விளங்கும் சொல்லழகுடையவை பழமொழிகள் என்றாலும், விளங்கிக்கொள்ளவே முடியாத மறைபொருள்களோடும் அவை இருக்கின்றன. ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. கூத்தாடி கிழக்கே பார்ப்பான், கூலிக்காரன் மேற்கே பார்ப்பான் என்னும் பழமொழியை எடுத்த எடுப்பில் விளங்கிக் கொள்ள முடியாது. 

அஃதென்ன இருவரும் வெவ்வேறு திசைகளைப் பார்ப்பது? ஏன் அவ்வாறு பார்க்கிறார்கள்? இது நமக்கு எடுத்த எடுப்பில் விளங்கவில்லை. கூத்தாடி கிழக்கே ஏன் பார்க்கிறான்? சிந்தித்துப் பார்ப்போம். 

கூத்தாடி என்பவன் கூத்து கட்டுபவன். கூத்துக் கலைஞன். கூத்துகள் எங்கே எப்படி நடக்கும்? தற்காலத்தில் கூத்துக்கலை நலிவுற்றுக் கிடக்கிறதே. அந்நலிவோடும் நசிவோடும் கூத்துகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டுதாம் இருக்கின்றன. கோவில் திருவிழாக்கள், நாட்டுப்புறக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் இன்றும் கூத்துவிடுவது ஒரு மரபாக இருக்கின்றது. 

என்னிடம் ஊர்த்திருவிழாவுக்குப் பெரிய தொகையொன்றை நன்கொடையாகக் கேட்டார்கள். “கூத்து போடுவதானால் சொல்லுங்க… கேட்ட தொகையை இப்போதே தருகிறேன்…” என்று கூறினேன். அவ்வாறே விழாக்குழுவினர் ஒரு நல்ல கூத்து ஒன்றைத் திருவிழாவுக்கு அரங்கேற்றினர். அந்தக் கூத்துகள் எப்படி நிகழ்கின்றன? முன்னிரவின் நடமாட்டங்கள் முடிந்த நிலையில் கூத்துகள் தொடங்குகின்றன. எட்டு அல்லது ஒன்பது மணிக்கு மேல் தொடங்குகிறார்கள். தொடங்கியபின் ஒரு நொடிகூட அவர்கள் இடைவேளை விடுவதில்லை. அடுத்தடுத்த கதாபாத்திரங்கள் கூத்து மேடை வெளிச்சத்தில் தோன்றியபடியே இருக்கின்றன. கதை நிகழ்கின்றது. 

தொடக்கத்தில் ஆர்வமாகப் பார்க்கத் தொடங்கிய கூட்டம் நேரம் ஆக ஆக அப்படியே சாய்ந்தாற்போல் கண்டுகளிக்கிறது. பிறகு பலரும் படுத்தேவிடுகிறார்கள். கூத்தில் நடிகர்கள் ஐவரும் வாத்தியக் கருவியினர் பாடகர் ஆறேழ்வரும் என அந்தப் பதின்மருக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து இசைத்தும் ஆடியும் பாடியும் நடித்தும் பணியாற்றிக்கொண்டிருக்க, பார்வையாளர்களாகிய மக்கள் அரைமயக்க நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். 

பார்ப்போர் சொக்கினால் ஏதேனும் தாழுத்திகளைப் பயன்படுத்தி மக்களை எழுப்பப் பார்க்கிறார்கள். ஆனாலும் பின்னிரவு ஆக ஆக கூத்துக்காரர்களுக்கும் ஒருவகைக் களைப்பு ஏற்படத்தான் செய்கிறது. அவர்கள் தாம் ஒப்புக்கொண்ட வேலையை முடித்துக்கொடுத்துவிட்டு ஆட்டத்தொகையைப் பெற்றுக்கொண்டு ஊர்போய்ச் சேரவேண்டும் என்று எண்ணுகிறார்கள். அதற்குக் கூத்தை முடிக்க வேண்டும். எப்போது கூத்தை முடிக்க முடியும்? பொழுது தோன்ற வேண்டும். கிழக்கே வெளுக்க வேண்டும். 

அந்தக் காலங்களில் கடிகாரம் போன்ற கருவிகள் இல்லை. அதனால் விடிகாலையைக் கிழக்கே பார்த்துத்தான் அறிந்தார்கள். ‘விடியப் போகிறதா? விடிந்ததும் கூத்தை முடித்துக்கொண்டு கூலி பெற்றுக்கொண்டு கிளம்பலாம்” என்ற எண்ணத்தில்தான் கூத்தாடி கிழக்கே பார்த்தான். 

அதேதான் கூலிக்காரனுக்கும். கூலிக்காரன் காலை எட்டு மணிக்கு வேலை செய்யத் தொடங்கி மாலையில் சூரியன் மறையும் வரைக்கும் வேலை செய்வான். அந்த வேலையை முடித்ததும் காசு பெற்றுக்கொண்டு வீடு போய்ச் சேரவேண்டும் என்ற வேட்கையில் “பொழுதாகிவிட்டதா? சூரியன் மேற்கில் இறங்குகின்றானா?” என்பதை அறிய கூலிக்காரன் மேற்கே பார்க்கிறான். ஒவ்வொருவர்க்கும் அவரவர் வினை முடித்தோமா, வெகுமானம் பெற்றோமா, நடையைக் கட்டினோமா என்பதே நோக்கமாக இருக்கும். அதற்கும் மேலான ஒன்றைக் காண்பது அரிது என்பதை உணர்த்தும் பழமொழிதான் “கூத்தாடி கிழக்கே பார்ப்பான்… கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்…!”

- கவிஞர் மகுடேசுவரன்
 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles