கவிதைகள் சொல்லவா! கவிஞர் நரன்

Wednesday, March 1, 2017

பெண் உடல்

விருதுநகரில் பிறந்தவர் கவிஞர் நரன். 361 டிகிரி என்ற சிற்றிதழைத் துவங்கி, அதன் ஆசிரியராகs செயல்பட்டவர். 'உப்பு நீர் முதலை' (2010), 'ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்' (2014), 'லாகிரி'(2016) என்று இவரது கவிதைத் தொகுதிகள் அனைத்தும் இலக்கிய வட்டாரத்தில் பெருவரவேற்பைப் பெற்றுள்ளன. 'சால்ட்' பதிப்பகம் மற்றும் 'சால்ட்' இதழை நடத்தி வருவதோடு, ஊடகத்துறையிலும் பணியாற்றி வருகிறார் நரன்.

குழந்தையைப் போல் பரிசுத்தமாய் கழுவப்பட்டு
வெள்ளைத்துணியால் சுற்றப்பட்டு
தேவாலய வெண் உடுப்பைப் போல் வெளுக்கப்பட்டு
சுருக்கங்கள் அகற்றப்பட்டு
காப்பர் பாத்திரங்களைப் போல் நன்றாய் துலக்கப்பட்டு

பின்
அந்த மூன்று எழுத்தும் நன்றாய் நக்கப்பட்டு
...என்பதொரு பூச்சி குதிகாலால் நசுக்கப்பட்டு
மலிவு விலைக்கு விற்கப்பட்டு
ஆள் துளை கிணறு உறிஞ்சப்பட்டு
தரை விரிப்பு, உங்கள் பாதங்களால் அதன் முகம்.
துடைக்கப்பட்டு

எளிய விவசாயியின் நிலத்தில் ஊன்றப்பட்ட அடையாளக்கல்.
பிடுங்கி எறியப்பட்டு,
பிரபஞ்சத்தில் முதலில் சுவைக்கப்பட்ட ஆப்பிள் கனி...
விலக்கப்பட்டு
ஆலைக்கு கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனம். உருவப்பட்டு
கூட்டல்குறி வடிவ மரச்சட்டத்தில் விரிக்கப்பட்ட கரம்.
அறையப்பட்டு

பூர்வீக பழங்குடி. துரத்தப்பட்டு
நள்ளிரவு உண்டியல். உடைக்கப்பட்டு
குடி மேஜையின் சதைப்பற்றுள்ள இளங்கன்று. உண்ணப்பட்டு,
ஆஸாதி... ஆஸாதி... னுன ஓடிவரும் காஷ்மீரி சிறுவன்.
துளைக்கப்பட்டு
எளியவனின் தலை மயிர். அதிகாரத்தில் மழிக்கப்பட்டு,
சபையில் குடிகார அரசனின் கையிலிருக்கும் துகில்.
அவிழ்க்கப்பட்டு
... கடிக்கப்பட்டு, உண்ணப்பட்டு, துப்பப்பட்டு,
புகைக்கப்பட்டு, அருந்தப்பட்டு, 
கசக்கப்பட்டு, உடைக்கப்பட்டு...
மீண்டும் ஒரு முறை.
குழந்தையைப் போல் பரிசுத்தமாய் கழுவப்பட்டு...
வெள்ளைத்துணியால் சுற்றப்பட்டு...
... புதைக்கப்பட்டு. இல்லையேல் சிதையூட்டப்பட்டு.
...
எத்தனை ஆண்டுகள் ஆவியாகிவிட்டன. இப்படியாய்

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles