பழமொழி இன்பம் - 26

Thursday, June 15, 2017

வினை விதைத்தவன் வினை அறுப்பான் 
தினை விதைத்தவன் தினை அறுப்பான் 

நாம் என்ன செய்கின்றோமோ அதற்கான பலன் அந்தச் செய்கைக்கு நேர்மறைத் தொடர்புடையதாய் விளையும். அந்த நேர்விளைவு எப்போதுமே மாறி அமைந்ததில்லை.

‘எதுவுமே வீண் போகாது’ என்று நான் சோர்வுற்று இருக்கும்போதெல்லாம் கூறிக்கொள்வேன். 
 
நாம் ஒன்றைச் செய்திருப்போம். நாம் நினைத்தபடி அச்செயல் உரிய விளைவைத் தரவேண்டும் என்பது நம் விருப்பமாக இருக்கும். ஆனால், அவ்வாறு விளையாமல் போகலாம். இப்போது நாம் விளைவைக் கண்டு ஆராய்கிறோம். அது ஏன் நாம் நினைத்தபடி விளைவுறவில்லை ? அங்கே நாம் செய்த செயலை ஆராய வேண்டும். விளையாமைக்கான விடை அங்கேதான் இருக்கிறது. செயல் எவ்வாறு இருந்ததோ அதற்கேற்ற பலன் இருந்தது.  
 
ஒன்றை எவ்வளவு அழுத்தந்திருத்தமாக முயன்றாலும் உரிய பலனைத் தராமல் போவதுண்டு. அங்கே நாம் அவசரப்பட்டிருப்போம். ஏதோ ஒன்றில் முந்திக் கெடுத்திருப்போம். விளைவுக்கென்று ஒரு காலம் இருக்கிறது. வண்டியை எடுத்துக்கொண்டு ஓரிடத்திற்குச் செல்வீர்களானால் அதற்குரிய நேரம் கட்டாயம் தேவைப்படும். வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு வந்து சேர முப்பது மணித்துளிகள் ஆகின்றன என்றால் அச்செயலுக்கு அந்நேரத்தை நாம் தந்தே ஆகவேண்டும். ஐந்து நிமிடத்தை மிச்சம் பிடிக்கும்படியாய் விரைந்து முடுக்கினால் நாம் ஒருபோதும்  அலுவலகத்துக்கு வர முடியாமலே போகலாம். வண்டியைச் சீராகச் செலுத்தி வந்தால் இரண்டு நிமிடங்கள் முன்கூட்டியே கூட வந்து சேரலாம். ஆனால், அதற்குரிய நேரத்தைத் தரத் தவறினால் ஒட்டுமொத்தச் செயலே பாழ்படும். 
 
முயற்சிக்கென்றும் செயலுக்கென்றும் சில வரையறைகள் இருக்கின்றன. நம் முயற்சியிலும் செயலிலும் அதைப் பற்றி நிற்க வேண்டும். அதிலிருந்து பிசகினால் எல்லாம் கெட்டுப் போய்விடும். ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம் என்றால் அதைப் பழுதில்லாமல் மனம் செலுத்தி அறிய வேண்டும். அதில் அசட்டையாக இருந்தால் நாம் எதையுமே கற்றுக்கொள்ள மாட்டோம். நாம் நம்மைத் தராமல் நமக்கென்று ஒன்றைப் பெற முடியாது.  
 
தோல்வியுற்றவர்கள் எல்லாருமே பிற்காலத்தில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள். ஒவ்வொரு தோல்வியும் இன்னும் அறியப்படாத அச்செயலின் ஒரு பகுதியைக் காட்டிக்கொடுக்கிறது. அச்செயலில் மேலும் ஒரு நிபுணத்துவத்தைச் சேர்க்கிறது. தோல்வியிலிருந்துதான் கற்றுக்கொள்ள முடியும். தோல்வி தரும் படிப்பனையின் சிறப்பே அதில் நாம் நேரடியாக ஈடுபட்டிருப்பதுதான். பிறரின் தோல்விக்கதைகளோ வெற்றிக்கதைகளோ நம்மை உணர்வுத்தளத்தில் பாதிக்கச் செய்யாதவை. ஆனால், நாமே அடையும் தோல்விதான் நமக்கு நேரடியாய் உணர்த்துகிறது. நாமே அடையும் வெற்றிதான் நமக்குத் தெளிவைக் கொடுக்கிறது. அதனால் எதுவுமே வீண்போவதில்லை என்னும் கருத்தை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். 
 
நாம் செய்யும் செயலுக்கென்று ஒரு விளைவு இருந்தே தீரும். நாம் விதைத்தது விளைந்தே தீரும். அதன் தன்மைகளில் முன்பின் இருக்கலாம். அதை மேலும் சீர்செய்து நாம் அடையவேண்டியதை அடைந்தே தீருவோம். ஏனென்றால் வினை என்னும் செயலை விதைக்கின்றோம். அது விளைவு என்ற பலனை உருவாக்கிவிடும். தினையை விதைத்துத் தினையறுப்பதுபோல வினையை விதைத்து அவ்வினைக்கு நேராய்ப் பிறந்த விளைவை அடைகிறோம்.  

- கவிஞர் மகுடேசுவரன் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles