அழகு தமிழ் பழகு 29

Thursday, June 15, 2017

ஒற்றளபெடை

சார்பெழுத்துகளில் நாம் ஏறத்தாழ அனைத்தையும் கற்றுவிட்டோம். கடந்த பகுதியில் உயிரளபெடையைப் பற்றிப் பார்த்தோம். இப்போது அளபெடைகளில் மீதமுள்ள இன்னொரு வகைமையான ஒற்றளபெடையைப் பற்றிக் கற்கப் போகிறோம்.

அளபு எடுப்பது என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். ஓர் எழுத்து தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து நீட்டித்துக்கொண்டு ஒலிப்பது. ஒலிப்பளவு எடுப்பாய் ஒலிப்பது. அதுதான் அளபெடுப்பது. உயிரெழுத்துகளின் அளபோசைகளையும் அவற்றின் வகைமைகளையும் உயிரளபெடையில் பார்த்தோம். இப்போது ஒற்றளபெடையைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். அதென்ன ஒற்றளபெடை ?
 
பெயரிலேயே விளக்கம் இருக்கிறது. நம் தமிழ் இலக்கணப் பெயர்கள் பலவும் தம்மளவிலேயே விரித்து விளக்கம் பெற்றுக்கொள்ளும்படியே அமைந்திருக்கின்றன. ஒற்றளபெடை. ஒற்று அளபு எடை. ஒற்று எழுத்துகள் தமக்குரிய மாத்திரை அளவிலிருந்து எடை கூடி ஒலிப்பது. ஒற்று எழுத்துகள் எனப்படுபவை மெய்யெழுத்துகள். மெய்யெழுத்துகள் தமக்குரிய ஒலியளவில் கூடி ஒலிக்கின்றன.
 
எப்படி ஒற்றெழுத்து ஒலிப்பு கூடி ஒலிக்கிறது ? பேசுகையில் அவ்வாறு எங்கேனும் ஆள்கின்றோமா ? பிறந்தவுடனேயே நாம் ஒற்றளபெடையைப் பயன்படுத்தினோம் என்றால் நம்புவீர்களா ? ஆம். குழந்தை பிறந்தவுடன் பேசிய முதல் சொல்லிலேயே ஒற்றளபெடை அமைந்திருந்தது.
 
குழந்தை பிறந்ததும் என்ன சொல்லைப் பேசத் தொடங்கியது ? அம்மா என்ற சொல்லைக் கூறத் தொடங்கியது. அம்ம்மா என்று சொன்னது. நாம் அதை அம்மா என்று சொல்வதாக விளங்கிக்கொள்கிறோம். நன்றாகக் கூர்ந்து கவனியுங்கள். குழந்தை எழுப்பிய முதல் ஒலிப்பு உயிரெழுத்தில் தொடங்கி வழமைக்குக் கூடுதலாக மெய்யெழுத்தில் நின்று ஒலித்து முடிந்தது. அம்ம்மா என்று ஆகிறது. இங்கே ம் என்ற ஒற்றெழுத்து ஒருமுறைதான் வருகிறது. அம்மா என்ற சொல்லுக்கு நடுவெழுத்து ம் என்னும் ஒரே மெய்தான். ஆனால், குழந்தை அம்ம்மா என்று இரண்டு மெய்யெழுத்துகளுக்குரிய ஒலிப்பைச் சொல்லிவிடுகிறது. அஃதாவது ம் என்ற ஒற்றெழுத்தின் ஒலிப்பளவைக் கூட்டி ஒலிக்கிறது. இதுதான் ஒற்றளபெடை. சொல்லிடையிலும் கடைசியிலும் இடம்பெறும் ஒற்றெழுத்துகள் தமக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து கூடுதலாய் ஒரு மாத்திரையளவில் ஒலிப்பது.
 
பொதுவாக, நாம் பேசுகையில் ஏதேனும் ஓர் உணர்ச்சி மேலீட்டால் ஒற்று ஓசைகளை அழுத்தி அளபெடுத்துத்தான் கூறுகிறோம். “உனக்கு எம்ம்மேல அன்ன்பே இல்ல்ல தெரியுமா…?” என்றுதான் காதலி கைப்பேசியில் கொஞ்சுகிறாள். “விட்டுடு… எல்ல்லாத்தையும் விட்டுடு…” என்றுதான் திரைப்பட நாயகன் கத்துகிறான். ஆக, நம் அன்றாடப் பேச்சுகளில் ஒற்றெழுத்து ஒலிகளை உணர்ச்சிக்கேற்பக் கூட்டியே கூறுகிறோம் என்பது தெளிவு.
 
பேசுவதற்கே இத்தனை கூட்டல்கள் இருக்கையில் இசையொழுங்குடைய செய்யுள்களில் கேட்கவா வேண்டும் ? இசையளவு கருதி ஒற்றெழுத்துகள் செய்யுள்களில் அளபெடுத்து வருகின்றன. ஒற்றளபெடை என்னும் நம் மொழி இலக்கணச் செப்பம் செய்யுள்களுக்கு மட்டுமே உரித்தானவை அல்ல என்பதை உணர்த்தத்தான் நம் பயன்பாட்டில் இருக்கும் பேச்சு வகைகளை எடுத்துக்காட்டுகளாய்க் கூறினேன். ஆனால், இலக்கணத்தில் இக்கூறுகள் செய்யுள்களை மேற்கோள் காட்டியே விளக்குகின்றன. அதனால் இவையெல்லாம் செய்யுள்களுக்கே உரிய அழகுகள் என்று ஒதுக்கிவிடாமல் நம் பேச்சு வழக்கிலும் பயன்பாட்டிலும் நம்மையே அறியாமல் வழங்கி வருகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
ஒற்றெழுத்து அளபெடுக்கும் என்றால் எங்கெங்கே அளபெடுக்கும் ? என்னென்ன எழுத்துகள் அவ்வாறு அளபெடுக்கும் ? இதிலும் தெளிவான இலக்கணக் கூற்றுகள் இருக்கின்றன.
 
சொல்லுக்கு முதலெழுத்துகளாக மெய்யெழுத்துகள் தோன்ற மாட்டா என்பதை அறிவோம். அதனால் சொல்லுக்கு முதலெழுத்தாக ஒற்றெழுத்துகள் அளபெடுத்து வரமாட்டா. சொல்லுக்கு நடுவிலும் சொல்லுக்குக் கடைசியிலும் மெய்யெழுத்துகள் வருகின்றன. அதனால் சொல்லுக்கு நடுவிலும் சொல்லுக்குக் கடைசியிலும் மெய்யெழுத்துகள் அளபெடுத்துத் தோன்றும். எல்லா ஒற்றெழுத்துகளும் அளபெடுத்துத் தோன்றுமா ? பதினெட்டு மெய்யெழுத்துகளும் அளபெடுக்க வல்லனவா ? இல்லை. வல்லின எழுத்துகளை இழுத்துக் கூற இயலாது. ம்ம்ம்ம்ம்ம் என்று வெகுநேரம் சொல்லிக்கொண்டிருக்கலாம். க்க்க்க்க்க் என்று சொல்லவே முடியாது. க் என்று முதல் எழுத்தைச் சொல்கையிலேயே ஒலிப்பு அடங்கிவிடும். அவ்வாறிருக்கையில் வல்லின மெய்கள் அளபெடுக்க வழியேயில்லை. அவற்றின் ஒலிப்பு இயற்கை அழுத்திச் சொல்லி நிறுத்துவதோடு தொடர்புடையதாய் இருப்பதால் வல்லின மெய்கள் அளபெடுப்பதில்லை.
 
அவற்றைத் தவிர ர் என்ற மெய்யும் அளபெடுப்பதில்லை. ர்ர்ர் என்று சொல்வது விலங்கின் உறுமல்போல் இருப்பதுபோலோ என்னவோ தெரியவில்லை, ர் என்ற மெய்யின் அளபை நம் இலக்கணம் ஏற்கவில்லை. அளபெடுக்க வலித்து ஒலிக்கும்போது வல்லின ‘ற’கர ஓசை ஆகிவிடுவதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். அடுத்து தமிழின் தனிச்சிறப்பான ‘ழ’கர மெய்யும் அளபெடுப்பதில்லை. ழ் என்று தொடர்ந்து சொல்வது இயற்கையான தன்மையாய் இல்லை. வாய்கொப்பளிப்பது போன்ற தெளிவில்லாத ஓசையே கிடைக்கிறது. ழ் என்ற மெய்யை ஒலிப்பதே எழுத்திலா இசையாய் முடிவதையும் காணலாம். இக்காரணங்களால் இவ்விரு மெய்யெழுத்துகளும் அளபெடுப்பதில்லை. ஆக, மெய்யெழுத்துகள் பதினெட்டில் வல்லின மெய்கள் ஆறும் ரகர ழகர மெய்கள் இரண்டும் கழிய மீதமுள்ள பத்து மெய்யெழுத்துகளும் அளபெடுத்துத் தோன்றும் என்பதை விளங்கிக்கொள்கிறோம். இவற்றோடு ஆய்த எழுத்தான ஃ என்ற எழுத்தும் அளபெடுத்துத் தோன்றும். ஒற்றளபெடையாய்த் தோன்ற வல்ல மெய்யெழுத்துகள் “ஙஞண நமன வயலள” ஆகியவற்றின் மெய்யெழுத்துகளும் ஆய்தமுமே.
 
சொல்லின் எல்லா நிலைமைகளிலும் இவை அளபெடுத்துத் தோன்றுமா ? குறிலை எடுத்தும் குறிலிணை எழுத்துகளை அடுத்தும் ஒற்றளபெடுக்கும். நெடிலை அடுத்து ஒற்றளபெடை இல்லை. நெடிலை அடுத்து வரும் ஒற்றெழுத்தை அளபெடுத்துக் கூறுவது மிகவும் கடினம். எடுத்துக்காட்டாக, நாள் என்ற சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். நெடிலை அடுத்து ள் என்ற ஒற்றெழுத்து வந்திருக்கிறது. இதை நாள்ள் என்று சொல்ல முடியுமா ? முடியவில்லை. அளபெடுத்துச் சொல்ல முயன்றால் நெடிலில் உயிரளபெடையைத்தான் கூற முடிகிறது. நாஅள் என்பதுதான் இயல்கிறது. நாள்ள் என்று கூற முயல்வது நாஇள் என்பதைப்போல் தனித்து ஒலிக்கிறது. அதனால் நெடிலை அடுத்து வரும் மெய்க்கு ஒற்றளபெடை இல்லை என்பதைக் கருத்தில் கொள்வோம்.
 
“கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு
பொன்ன் பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ
மின்ன் னுழைமருங்குன் மேதகு சாயலாள்
என்ன் பிறமகளா மாறு”  
 
மேற்கண்ட செய்யுளில் மொழியீற்றில் குறிற்கீழ் ஒற்றெழுத்துகள் அளபெடுத்துத் தோன்றியுள்ளன. ஒற்றெழுத்து ஓசை கூடி ஒலிக்கிறது என்பதை அவ்வொற்றெழுத்தை இருமுறை எழுதுவதன் வழியாக உணர்த்துகிறோம்.
 
ஒற்றளபெடையை விளக்கும் நன்னூலின் தொண்ணூற்றிரண்டாம் வாய்பாடு இஃது :
 
ஙஞண நமன வயலள வாய்தம்
அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடை
மிகலே அவற்றின் குறியாம் வேறே.
 
இதன் பொருளைத்தான் நாம் இதுவரை விரிந்த கட்டுரையாகப் படித்தோம். “ஙஞண நமன் வயலள ஆய்தம் ஆகியன அளபாகும். குறிலிணையிலோ குறிலை அடுத்தோ சொல்லின் இடையிலும் கடையிலும் ஓசை மிகும். அவற்றை வேறொரு ஒற்றெழுத்தைக் கொண்டு எழுதிக் குறிக்க வேண்டும்.”

-   கவிஞர் மகுடேசுவரன்   

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles