பழமொழி இன்பம் 25

Wednesday, May 31, 2017

ஏழுமலை தாண்டலாம், ஓர் ஆறு தாண்ட முடியாது!

எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய வல்லமை உடையவர்கள் எளிய செயலைச் செய்ய முடியாமல் தயங்குவார்கள். அது அப்படித்தான் அமையும். அவர்கள் ஆற்றலெல்லாம் அவர்கள் மேதைமை பெற்ற துறையில்தானே தவிர, பிற பணிகளிலும் அதே மேன்மையோடு இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. 
 
 

என் நண்பர்களில் ஒருவர் புகழ்பெற்ற எழுத்தாளர். அன்றாடம் ஒரு சிறுகதையை எழுதும்படி பணித்தாலும் எழுதிவிடுவார். ஆனால், அவர்க்கு ஈருருளி ஓட்டத் தெரியாது. ஈருருளி ஓட்டுவது என்ன அருஞ்செயலா? இல்லைதான். இப்போது கூடப் பழகினால் ஓட்டிவிடலாம் தான். அவர்க்கு விருப்பமே இல்லை. ஒருமுறை பழக முயன்று வண்டியைக் கொண்டுபோய் சாக்கடையில் விட்டுவிட்டார். வண்டிக்கும் பலத்த அடி. அவர்க்கும் சிராய்ப்புகளும் சுளுக்குகளும் ஏற்பட்டுவிட்டன. அத்தோடு ஈருருளி ஓட்டும் கனவை முடித்துக் கொண்டார். 
 
அதுவரை யார் வேண்டுமானாலும் ஈருருளி வண்டிகளை ஓட்டிவிட இயலுமே என்றுதான் நானும் எண்ணியிருந்தேன். அப்படிக் கற்றுவிட முடியாது என்பதை அன்னாரைப் பார்த்த பிறகு உணர்ந்து கொண்டேன். 
 
இன்னொரு நண்பர் பெருங்கவிஞர். அவரால் தானாகவே ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் சென்று சேரத் தெரியாது. இங்கே யாராவது ஒருவர் அவரை வண்டியேற்றிவிட வேண்டும். அவர் சேருமிடத்தில் யாரேனும் ஒருவர் அவரை அழைத்துக்கொள்ள நிற்கவேண்டும். இல்லையேல் தாம் தொலைந்து போய்விடுவோமோ என்ற அச்சத்திலேயே பயணம் செய்வார். தம்மை ஏற்றியனுப்பவும் வரவேற்கவுமான ஏற்பாடுகள் இல்லாத புதிய பயணங்களை அவர் முற்றாகத் தவிர்க்கவும் செய்வார். பலவற்றையும் கற்பனையால் விரித்து எழுத வல்லவர் தம் பயணத்தைத் தானாக நிகழ்த்துவதில் பேரச்சம் கொண்டிருக்கிறார். 
 
எம்மூரில் எண்ணற்ற ஏற்றுமதியாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் வெளிநாட்டுக் கடைகளில் விற்பதற்காக இடம் பெறும் அருமையான துணிகளை ஆக்கி அனுப்புகின்றவர்கள். ஆனால், அதே ஏற்றுமதியாளர்கள் துணைத் தொழிலாக உள்ளூரிலேயே கடைகளைத் தொடங்கினார்கள். அவர்களால் உள்ளூர்க் கடையை நடத்தவே முடியவில்லை. தொடங்கிய விரைவோடு இழுத்து மூடிவிட்டார்கள். 
 
அவ்வளவு ஏன், தம்மிடம் உற்பத்தியாகும் ஆடைகளை மட்டுமே விற்கும் விற்பனையகத்தைக் கூட அவர்களால் திறம்பட நடத்த முடியவில்லை. மிகப்பெரிய நிறுவனத்தின் விற்பனையகம் இரங்கத்தக்க நிலையில் தேமே என்றிருக்கும். ஞாலமெங்குமுள்ள பன்மாடக் கடையகங்களில் சக்கைப்போடு போடுகின்ற ஆடைகளை உற்பத்தி செய்கின்றவர் தம்மூரில் ஒரு கடையை நிறுவி நடத்திக் காட்ட முடியவில்லை. உற்பத்தியும் விற்பனையும் இருவேறு உலகத்து இயற்கை என்று கூறுகிறார்கள். 
 
அதனால்தான் “ஏழுமலை தாண்டலாம்.. ஓராறு தாண்ட முடியாது” என்று பழமொழியாய்ச் சொல்லி வைத்தார்கள். உங்கள் உடல்வலிமைக்கு ஏறாத மலையென்றாலும் ஏறிவிடுவீர்கள். வெள்ளம் பொங்கிப் பாயும் ஆற்றைக் கடக்க முடியுமா என்ன? துணிந்து இறங்கினால் ஆற்றோடு போகவேண்டியதுதான். மலை தாண்டுவது வேறு. ஆறு தாண்டுவது வேறு. அது முடிகிறது என்பதால் இதுவும் முடியும் என்று பொருளில்லை. இந்தப் பழமொழியே கூடக் கேட்கப் புதிதாய் இருக்கிறது. கி.வா.ஜகந்நாதன் தொகுத்த தமிழ்ப் பழமொழிகள் என்னும் நூலின் முதலாம் பாகத்தில் இப்பழமொழி இடம்பெற்றிருக்கிறது.

- கவிஞர் மகுடேசுவரன் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles