அழகு தமிழ் பழகு - 28

Wednesday, May 31, 2017

உயிரளபெடை 

அளபெடை என்கின்ற எழுத்துகளைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். அளபு, அளபெடை என்பனவெல்லாம் யாவை ? அளவு என்பதைத்தான் அளபு என்கிறோம். 
 
 

தமிழில் வு என்னும் ஈற்றெழுத்துத் தொழிற்பெயரைப் பு என்னும் எழுத்து போலி செய்து அதே பொருளை உணர்த்துவதைக் காணலாம். துணிவு என்பதைத் துணிபு என்பார்கள். முடிவு என்பதை முடிபு என்பார்கள். அதைப்போலவே அளவு என்பதை அளபு என்கிறார்கள். வு என்பதைப்போலவே பு என்பதும் தொழிற்பெயர் விகுதியே என்றும் கொள்ளலாம். ஆக, அளவு என்பதும் அளபு என்பதும் ஒன்றே. 
 
எதன் அளவு ? இங்கே எழுத்து என்பதைப் பற்றி அளபு என்ற சொல் பயில்வதால் இஃது எழுத்தின் அளவு என்று விளங்கிக்கொள்ளலாம். எழுத்தின் அளவு என்று எதைக் கொள்வது ? எழுத்துக்கு எது அளவு ? எழுத்துக்கு அதை ஒலிப்பதற்குச் செலவிடும் ஒலிப்போசையே அளவு. 
 
ஓர் எழுத்தின் ஒலிப்பளவை எதனால் குறிக்கிறோம் ? மாத்திரை என்னும் அளவினால் குறிக்கிறோம். அவ்வளவுதான். நாம் நம் விளக்கத்திற்கு அருகில் வந்துவிட்டோம். மாத்திரையால் குறிப்பிடப்படும் ஓர் எழுத்தின் ஒலிப்பளவுதான் இங்கே அளவு எனப்படுவது. 
 
சரி, அந்த அளவுக்கு என்ன ? அது என்னாகிறது ? அதைத்தான் அளபெடை என்னும் சொற்றொடரின் பிற்பாதி கூறுகிறது. அளபு எடை. எடை என்பது எடுத்தல் என்னும் தொழிலால் விளைந்த தொழிற்பெயர். தடு என்னும் வினைவேர் ஐ என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்று தடு + ஐ = தடை என்றாவதுபோல், கொடு கொடை என்றாவதுபோல், மடு மடை என்றாவதுபோல் எடு என்பது ஐ என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்று எடை என்று ஆகிறது. எடுக்கும்போது காட்டும் விளைவு. அதனால்தான் எடுக்கும்போது காட்டும் சுமைத்தன்மையை நாம் எடை என்ற சொல்லால் வழங்குகிறோம். “அரிசியை எடை போட்டுப் பார்த்தாயா ? தக்காளிக்கூடை என்ன எடை இருக்கும் ?” என்றெல்லாம் நம் வழக்கத்தில் பயிலும் எடை என்னும் சொல் எடுப்பதால் விளையும் சுமைத்தன்மையைக் குறிப்பது. 
 
இங்கே ஓர் எழுத்து தன் ஒலிப்புக்குரிய மாத்திரை அளவிலிருந்து, அளபிலிருந்து கூடுதலாய் எடைகூடி அமைவதால் அதை ‘அளபெடை’ என்கிறோம். எழுத்தின் ஒலிப்பளவு மிகுவது. 
 
அளபெடையை இரண்டு வகைகளாய்ப் பிரிக்கிறார்கள். உயிர் அளபெடை என்றும் ஒற்று அளபெடை என்றும் அவை இரண்டு வகைகள். உயிர் எழுத்துகள் அளபெடுப்பது உயிரளபெடை. ஒற்று எழுத்துகள் (மெய்யெழுத்துகள்) அளபெடுப்பது ஒற்றளபெடை. 
 
முதலில் உயிரளபெடையைப் பற்றிப் பார்ப்போம். இங்கே அளபு எடை ஆகிய இரண்டு சொற்களின் கூட்டே இத்தொடர் என்று விளங்கிக்கொண்டமையால் “உயிரளபடை, ஒற்றளபடை” என்று தவறாக எழுதவே மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உயிரளபெடை, ஒற்றளபெடை என்றே சரியாக எழுதவேண்டும்.
 
உயிர் எழுத்துகள் தமக்குரிய ஒலிப்பளவிலிருந்து மிகுந்து ஒலிக்க வேண்டும். உயிர் எழுத்துகளில் குறில் எழுத்துகள் மிகுந்து ஒலிக்க மாட்டாதவை. நெடில் எழுத்துகளைத்தாம் நீட்டி ஒலிக்க முடியும். அம்மாஆ என்று நீட்டி ஒலிக்கலாம். நெடில் எழுத்துகளுக்குத்தாம் நீண்ட ஒலிப்பு உள்ளது என்பதுதான் அடிப்படை. அதனால் உயிரெழுத்துகள் பன்னிரண்டில் ஐந்து குறில் எழுத்துகளுக்கு உயிரளபெடை பொருந்தாது. மீதமுள்ள ஏழு நெடில் எழுத்துகளுக்குத்தான் உயிரோசையில் அளபெடுத்தல் பொருந்தும். ஆக, உயிரளபெடை என்பது ஏழு உயிர் நெடில்களுக்கு மட்டுமே வரும் என்பதை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.
 
அந்த நெடில் எழுத்து எப்படி அளபெடுக்கும் ? ஒலிக்கும் அளவில் எப்படிக் கூடுதலாய் ஒலிக்கும் ? 
 
அடூஉ, மகடூஉ, கிழாஅர்… இந்தச் சொற்களைப் பாருங்கள். 
 
அடூ என்ற சொல்லில் ட்+ஊ = டூ என்ற உயிர்மெய்யெழுத்தில் உள்ள ஊ என்னும் நெடிலெழுத்து மேலும் நீண்டு உ என்ற குறிலோசையைச் சேர்த்து மூன்று மாத்திரைகள் அளவில் ஒலிக்கிறது. நெடிலுக்கு இரண்டு மாத்திரைகள். அளபெடுக்கும்போது அங்கே அவ்வோசைக்கு மூன்று மாத்திரைகள். தேவைப்பட்டால் நான்கு மாத்திரையளவுக்கும் அளபெடுக்கலாம். நான்கு மாத்திரைகள் என்னும் அளபெடுக்கையில் அக்குறில் எழுத்து இரண்டு முறை எழுதப்படும் “அடூஉஉ” என்று. 
 
இவ்வாறு அளபெடுக்கும் நெடிலெழுத்து தான் அளபெடுத்துள்ளதை தன்னுடைய இனக்குறில் எழுத்தைக் கொண்டு குறிக்கும். ஆ என்னும் நெடில் அ என்னும் தன் இனக்குறிலால் அளபெடுத்துள்ளதை எழுதிக் காட்டும். அவ்வாறே ஈஇ, ஊஉ, ஏஎ, ஓஒ என்று அந்தந்த நெடில் எழுத்துகள் அந்தந்தக் குறில் எழுத்துகளைத் தம்மை அடுத்துத் தோன்றும்படி அளபெடுக்கும். ஐ என்னும் நெடிலுக்கும் ஔ என்னும் நெடிலுக்கும் அவற்றுக்குரிய குறில்கள் இல்லை என்பதால் ஐக்கு இ என்னும் குறிலும் ஔக்கு உ என்னும் குறிலும் தோன்றும். ஐஇ, ஔஉ என்று எழுதப்படும்.
 
உயிரளபெடை சொல்லில் எங்கே தோன்றும் ? சொல்லுக்கு முதலெழுத்திலேயே அளபெடுக்கும். சொல்லுக்கு நடுவெழுத்தில் அளபெடுக்கும். சொல்லுக்கு ஈற்றெழுத்தாயும் அளபெடுக்கும். அஃதாவது மொழியின் முதல் இடை கடை ஆகிய மூன்று எழுத்துகளாயும் உயிரளபெடை தோன்றும்.
 
“ஆஅ வளிய வலவன்றன் பார்ப்பினோ…” என்னும் வரியில் மொழிமுதலெழுத்தாய் அளபெடுத்துள்ளதைக் காண்க.
 
வீழப் படுவார் கெழீஇயலார் தாம்வீழ்வார்
வீழப் படாஅ ரெனின்
 
மேற்காணும் குறளைப் பாருங்கள். கெழீஇயலார் என்ற மொழியில் ழ்+ஈஇ = ழீய என்று சொல்லிடையில் அளபெடுத்துள்ளது. படாஅ என்ற மொழியில் சொல்லீற்றில் அளபெடுத்துள்ளது.
 
ஆக, உயிரளபெடையானது ஒரு சொல்லுக்கு முதலெழுத்தாயும் நீளும், இடையெழுத்தாயும் நீளும், கடையெழுத்தாயும் நீளும்.
 
உயிரெழுத்துகள் தமக்குரிய ஓசை அளவிலிருந்து நீண்டு ஒலித்து அளபெடுக்கின்றன என்பதெல்லாம் சரிதான். எதற்காக அளபெடுக்க வேண்டும். கெழிய, படார், கிழார் என்றெழுதினால் போதாவா ? கெழீய, படாஅர், கிழாஅர் என்றே அளபெடுத்து எழுத வேண்டுமா ? நல்ல கேள்வி.
 
முதற்கண் ஒவ்வொரு சொல்லும் இயற்கையாகவே அளபெடுத்துத் தோன்றியுள்ளன. மகடூஉ, அடூஉ, குழூஉக்குறி போன்ற சொற்கள் தம்மளவில் அளபெடுத்தே தோன்றியுள்ளன. இவற்றின் சொல் தோற்றமே அளபெடுத்துத் தோற்றுவித்ததாய் உள்ளது. இவை இயற்கை அளபெடைகள். இவ்வாறு ஒரு வகை இல்லை என்றாலும் அவ்வாறு நாம் விளங்கிக்கொள்வதில் தவறில்லை.
 
அடுத்து, செய்யுளில் இசைக்குறைவு தோன்றும்போது இவ்வாறு நெடிலை நீட்டி ஒலித்தால் அந்த இசைவுக்கு நிறைவு ஏற்படும். நம்முடைய செய்யுள்கள் அனைத்தும் செப்பலோசை முதற்கொண்டு பற்பல ஓசைகளைக் கொண்டே யாக்கப்பட்டவை. இயற்றமிழ் அனைத்தும் இசைத்தமிழாகவும் இருக்க வல்லவை. இப்பண்புதான் நம் தமிழின் தொன்மையான பண்பு. அவ்வாறு இசைக்கும்போது ஓசைக்குறைவு தோன்றுவதை இவ்வாறு அளபெடுத்து ஈடுகட்டுவது நோக்கம். அதற்காக அளபெடுக்கின்றன. இவை இன்னிசை அளபெடைகள். இதனை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்.
 
இன்னொன்று செய்யுளுக்கு அலகிட்டு வாய்பாடு கூறுதல்தான் யாப்பிலக்கணம். அவ்வாறு ஒரு சீருக்கு அலகிட்டுத் தளைப்பொருத்தம் பார்க்கும்போது எங்கேனும் தவறான அசை தோன்றி யாப்பிலக்கணக் கட்டுமானம் இடிக்கும். அங்கே அளபெடுத்து அந்தக் குறையைப் போக்கலாம். பெரும்பாலும் இவ்வாறு செய்யுளிசையை நிறைவிக்கவே உயிரெழுத்துகள் அளபெடுத்து வந்துள்ளன. இவை செய்யுளிசை அளபெடைகள். யாப்பிலக்கணத்தை நான் தனியாகச் சொல்லித் தருவேன். 
 
சில சொற்களையும் அளபெடுக்கச் செய்வதன்மூலம் பெயர்ச்சொற்களை வினையெச்சங்களாகவும் ஆக்கலாம். அவ்வாறு செய்கையில் ஓசையின்பத்தோடு அச்சொற்கள் இருப்பதை உணரலாம். நசை என்பது விருப்பம். நசைஇ என்று அளபெடுத்தால் விரும்பி என்னும் வினையெச்சமாகிவிடும். தொகை என்ற பெயர்ச்சொல்லைத் தொகைஇ என்றெழுதினால் தொகுத்து என்ற வினையெச்சப் பொருளாகிவிடும். இதைச் சொல்லிசை அளபெடை என்கிறார்கள். சொல்லுக்காக அளபெடுப்பது. இந்த அளபெடை கிட்டத்தட்ட ‘ரன் பண்ணி, குக் பண்ணி, க்ளீன் பண்ணி’ என்று இன்றைய ஆங்கிலச்சொல்லோடு பண்ணி என்னும் வினைச்சொல்லைச் சேர்த்துப் பேசுகின்ற பண்புக்கு முன்னோடியாய் இருப்பதைக் கவனிக்கலாம்.
 
ஏழு நெடிலெழுத்துகளும் முதல், இடை, கடை என்று மூன்று நிலைமைகளில் அளபெடுத்தால் 7 x 3 =  21 அளபெடைகளாகும். இவற்றில் ஔ என்ற நெடிலெழுத்து சொல்லுக்கு இடையிலும் கடைசியிலும் தோன்றாது என்பது நமக்குத் தெரியும். அதனால் அந்த இரண்டு நிலைமைகள் போக 19 உயிரளபெடைகள் செய்யுளிசை அளபெடைகளாகத் தோன்றும். அவற்றோடு இன்னிசைக்குத் தோன்றும் அளபெடையும் சொல்லை உருவாக்கத் தோன்றும் அளபெடையும் சேர்த்து அளபெடைகள் மொத்தம் இருபத்தொன்று என்கிறார் நன்னூலுக்கு விருத்தியுரை எழுதிய சங்கர நமச்சிவாயர். 

- கவிஞர் மகுடேசுவரன் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles