கவிதைகள் சொல்லவா! - கவிஞர் ச.விஜயலட்சுமி 

Wednesday, May 31, 2017

ட்ரைக்கா (தூக்கமாத்திரை)

நவீன இலக்கியத்தில் பரவலாக அறியப்பட்டவர் கவிஞரும், எழுத்தாளருமான ச.விஜயலட்சுமி. ‘பெருவெளிப் பெண்’, ‘எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை’, ‘தமிழ்க் கவிதைகளில் பெண்ணுரிமை’, ‘பெண்ணெழுத்து களமும் அரசியலும’ ,‘லண்டாய’ உள்ளிட்ட படைப்புகள் அவரது ஆக்கங்களில் முக்கியமானவை. சில வருடங்கள் வாழை எனும் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். தொடர்ச்சியாக இலக்கிய உலகுக்கு தனது பங்களிப்பை செய்து வருகிறார். 
 
 

உங்கள் வீட்டில் பெண்குழந்தை இருக்கிறதா?
உங்களால் நிம்மதியாக உறங்க முடிகிறதா?
என்னால் உறங்க முடியவில்லை 
மூச்சு முட்டுகிறது 
கண்மூடிய இருட்டில் 
கத்தி,பிளேடு,கண்ணாடித்துண்டுகள்
தேங்காயெண்ணெய் குடுவை,மூங்கில் கழிகள்
இரும்பு ராடுகள் என்னை சுற்றி சுற்றி துரத்துகிறது
 
திருடன் போலிஸ் 
விளையாடிக்கொண்டிருந்த குழந்தை 
காணாமல் போகிற நாட்களில் 
போலிஸ் திருடனாகி விளையாடுகிறது
 
ஊடகங்கள் முதிர்ச்சியற்ற மூளைகளுக்குள்
வன்மங்களை உருவாக்கி குவிக்கிறது
விற்பனைச் சரக்காக பண்டமாற்று போல 
பெண்களைப் பாவிக்கிற சமூகத்தில் 
நிம்மதியாக உறங்க முடிகிறதா
 
பகத்சிங் இந்த தேசம் 
யோனிப்பாதைகளை சேதப்படுத்தும் 
மனநோயாளிகளின் தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது  
ஒருவயது குழந்தைக்கு பிளேடால் கிழிந்து 
சேதமாகித் தொங்குகிறது
சிறுநீர் கழிக்குமிடம்
தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வரை உன்னால்
அமைதியாக புத்தகம் வாசிக்க முடிந்தது பகத்சிங் 
ஜாலியன் வாலாபாக்கில் கூட தோட்டாக்கள்தான் துளைத்தன
இங்கு இவன்களின் தோட்டாக்களுக்கு 
இரை கிடைக்கவில்லை என்பதற்காக 
பிஞ்சுக்குழந்தைகளில்  ஏவுகிறார்கள்
சிறைத்துப்போடவேண்டிய நோய்மைக்குறிகளை
சிதைக்க வா பகத்சிங் 
 
கல்பனா என்  சிட்டகாங்தோழியே
உன் தேசத்து இளம் மொட்டுகள்
நொய்டா சாக்கடைக்குள் வன்புணர்ந்து 
புதைக்கப்பட்ட கதை
உனக்கு தெரியாதே
நீ இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்
தலைநகர் தில்லி 
உலக செய்திகளில் தலைப்புச்செய்தியானது
நிர்பயாவின் சிதைக்கப்பட்ட உடலால்
கயர்லாஞ்சியில் சொருகப்பட்ட மூங்கில் கழியை
இன்னும் எடுக்கமுடியாமலிருக்கிறோம் 
ப்ரிய கல்பனா என்ன செய்யலாம்?
எனக்கு உறங்கமுடியவில்லை
 
எதற்கும் நிச்சயிக்கப்பட்ட முடிவுகள் உருவாகாத தேசமிது
குடிகளின் தலைக்குமேல் கத்தியும் 
முதுகுக்குபின் தோட்டாக்களும் பாதுகாப்பிற்காக இருக்கிறது
என்ன செய்யலாம் கல்பனா 
உரக்கக் குரல் கொடுத்தால் உதைவிழுகிறது
நூற்றாண்டுகள் மாறலாம் தேசியக்கொடிகள் மாறலாம்
அடிமை விலங்குகள் கைக்காப்பாகி அலங்கரிக்கிறது
வன்புணர்வு நோய் தேசத்தின் அடையாளமாகி விட்டது
ஆங்காங்கே தலைமைப்பீடங்களில் பெண்கள் இருந்தாலும் 
என்ன செய்துகொண்டிருக்கிறோம்
இத்தனைக் கீழ்த்தரமா
வெற்றிப்பதாகைகளைத் தலைகீழாகத் தொங்கவிடலாம் 
வா தோழி!. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles