கவிதைகள் சொல்லவா - கவிஞர் இசாக்

Thursday, June 15, 2017

நவீன இலக்கிய மரபில் கவிஞர் இசாக்கின் கவிதைகள் முக்கியமானவை. தன்னுடைய நாட்டில் வாழ வழியின்றி, தூர தேசம் சென்று உழைக்கும் மக்களின் துயரக் கதைகளை தன் கவிதை வழியே பேசியவர் அவர். துணையிழந்தவளின் துயரம், மௌனங்களின் நிறழ்குடை, பிள்ளைகளின் பிரதேசம் உள்ளிட்ட கவிதைகளில் அதை நாம் உணரலாம். “மிக எளிமையாகச் சொல்லப்பட்ட இந்தக் கவிதையில் பாடுபொருளாவது வாழ்க்கைதான். அந்த வாழ்க்கை நெடும்பிரிவால் அலைக்கழிகிறது குறுகிய நாட்களில் குமிழியிடுகிறது” என்கிறார் மறைந்த கவிஞர் இன்குலாப். அதுவே இசாக் கவிதைக்கான வெகுமதி!
 
 

துணையிழந்தவளின் துயரம்
 
 
கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக்
காணப் போகிற மகிழ்ச்சி
எனக்குள்
 
ரசித்து ரசித்து
வாங்கிய பொம்மைகளோடு
காத்திருக்கிறேன்
நெடுநேரமாக
 
வீடு நுழைந்த முகம் கண்டு
தொட்டுக் கொஞ்சி மகிழ
நெருங்கையில்
 
“யாரும்மா... இவங்க?”
என்கிறாள்
மழலை மொழியில்
என் மகள்.
 
.
 
எப்போதாவதுதான் அமைகிறது
பிரச்னையில்லாமல் பயணமாகிற சூழல்
ஓய்வற்ற ஓய்வாகவே
ஒவ்வொரு பயணமும்
 
மகிழ்ந்த முகத்தோடு
சுடுநீர்
சுவைகுறையாத தேனீர்
உணவுகளில்
பிள்ளைகளுக்குப் பிடித்ததென அம்மா
அவருக்கு விருப்பமென
துணைவி
கூடப்பொறந்தான்
கூடுதலா சாப்பிடுவானென உடன் பிறந்தோர்
வகைவகையாக பரிமாறுகிறார்கள்
எப்படியும்
திரும்பிவிடுவேனென்ற நம்பிக்கையில்
 
கவனிப்பாரெவருமற்று கிடக்கும்
அப்பாவைக் காண்கையில்
மீண்டும் உறுதியாகிறது
தூரப் பயணம். 

- கிராபியென் ப்ளாக்
 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles