கவிதைகள் சொல்லவா - கவிஞர்  அகரமுதல்வன்

Friday, June 30, 2017

துவக்குகளும் விடுதலையும் தயாராகவிருக்கிறது!

இடம்பெயர்ந்து கொண்டிருப்பதை விட
படுகாயங்களில் அமைதியிருப்பதை
அம்மாக்கள் கற்றுக்கொண்டார்கள்
 
 

கிபிர் அடிக்கு மத்தியில்
பிறந்த குழந்தையை ரத்தத்தில்
துடைக்க கற்றுக்கொண்டோம்
 
வெடித்துச் சிதறிய குண்டுகளின்
சுவாலையில்
தேத்தண்ணி சூடாக்கினோம்
பரா வெளிச்சத்தில் பதுங்குகுழி தோண்டினோம்
 
எங்கள் இரவுகள் யுத்தத்தின் தீபாவளி
கைகளில் நடுக்கத்தின் கருப்பை
மிக மோசமாகவிருக்கும்
நாளத்தின் அதிர்வு அசையும்
 
குருதியிழப்பு வாழ்வின் எளிமை
அவலத்தின் முகம் நான்
 
போர் துரத்திய 
எனது மரணம் வியப்பானது
 
தசைகள் சிதைத்து வீசியெறியும்
சிரிப்பற்ற நிலத்திலிருந்து
அது முளைவிடுகிறது
 
பதுங்குகுழிக்குள்ளிருந்து வாளி மூத்திரத்தை
வெளியே ஊற்றிய அம்மாவிடம்
இப்போது கைகளில்லை
 
மாதவிடாயின்
குருதிப் போக்கினை கிடந்தபடி கழித்த
அக்காவின் காயம் பல கடல்கள்
 
டாங்கிகளின் வாய்கள்
பட்டினியான எம்முடலை
பசி கொண்டது
 
ஊரின் தெருக்கள் முழுதும்
ரத்த வாடையை முகர்ந்து பார்த்த
குழந்தைகளின் முகத்தில்
மாமிசத்தின் நதி ஓடிக்கொண்டிருந்தது
 
யுத்தத்தில் பவனி வரும் மரணம்
சவக்குழிகளுள் தாயகம் புதைத்து
அகதி இருட்டிற்கு இழுத்துச்செல்கிறது
 
துயரின் கீழே எனது தாயகம்
மீண்டும் யுத்தத்தை அணியத்தொடங்குவதால்
அய்யமின்றி  அது நம்மிடமே இருக்கிறது.

- கிராபியென் ப்ளாக்
 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles