கவிதைகள் சொல்லவா - கவிஞர் சீராளன் ஜெயந்தன்

Friday, July 14, 2017

மறைந்த எழுத்தாளர் ஜெயந்தனின் புதல்வர் சீராளன். தமிழக ஆளுநரின் நேர்முக உதவியாளர். ‘மின்புறா கவிதைகள்’ இவரின் முதல் கவிதைத் தொகுதி. தனது தந்தையர் பெயரில் வருடந்தோறும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதை வழங்கி, தமிழ் இலக்கிய உலகுக்கு பெருமை சேர்த்து வருகிறார். 

இருள் செய் நெருப்பு

இருள் தன்னை நெருப்பாய் 
காட்டத் துணிந்து
ஊழித் தீயில்
ஒரு துளி
உதறித் தெளித்தது

அரைகுடப் பள்ளியில்
அத்தீ பற்றியெரிய
அறியாமைக் கொள்ளி
யாயிரம்

கூரைவேய்ந்த கூண்டில்
திணிக்கப்பட்ட சிறார்
மிரண்ட மான்களாய்
வழியின்றி
அக்கறையின்மையின்
அவமானச் சின்னங்கள்!

பணம் தின்னும்
பேய்கள்
பிள்ளைக்கறி
வேண்டி நின்றது
பற்றிப் படர்ந்தது தீ.

விதிமுறைகள் ஏதுமின்றி
விதிமுறைகள் ஏமாற்றி
பள்ளிச் சட்டங்கள்
இருள் சூழ் பாதுகாப்பு.

சட்டம் போட்டோரெல்லாம்
திட்டம்போட்டு,
பணம் தின்னும் பேராசையில்
கொழு பற்றியது தீ.

வருமுன் காவாதான்
வாழ்க்கை
எரிமுன் வைத்தூறு போலக் கெடும்
வள்ளுவனை
குருட்டுப் பாடமாய்
சொல்லி வந்த வாத்திக்கு
செயல் காட்டப் படர்ந்தது
தீ.

போலி முலாம் 
பட்டறைகளாய்
பள்ளிகளின் 
திறன் அறியா
கொட்டடி சேர்க்கும்
பெற்றவரின் வறள்
மோகத்தில் விழுந்தது தீ.

காலமெல்லாம்
தூங்கிக் கிடந்து
விதிமுறைகள் விலக்கி வைத்து
தொண்ணூறு
பூச்செண்டுகள்
அக்கினி பந்தமாய் எரிந்தபின்
விழித்திட்ட ஓர் அதிரடி அரசு.
காணாமல் போனது
நாளைய சரித்திரம். 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles