பழமொழி இன்பம் - 28

Friday, July 14, 2017

எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
 
“இருவேறு உலகத்து இயற்கை” என்று வள்ளுவர் கூறுகிறார். இவ்வுலகம் இருவகைப்பட்ட இயல்புகளால் நிறைந்திருக்கிறது. ஏறத்தாழ இக்கருத்தையொட்டி எழுதப்பட்டவைதாம் கார்ல் மார்க்சின் நூல்கள் அனைத்துமே. எல்லாமே இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அங்கே இருந்தால் இங்கே இல்லை. ஒருவர் இழப்பதை இன்னொருவன் பெறுகிறான்.

ஒரு தரப்பு வேண்டுமென்பதை இன்னொரு தரப்பு வேண்டா என்கிறது. வயிற்றுக்கு உணவு தேடும் வாழ்க்கை பலர்க்கு. வயிற்றுக்கு மட்டுணவு கொள்ளவேண்டிய நிலை சிலர்க்கு. இவ்வாறு எல்லா நிலைமைகளிலும் இருவகைப்பாடுகளே நிறைந்திருக்கின்றன. 
 
காய்கறிச் சந்தைக்குச் செல்கிறீர்கள் தக்காளி ஐம்பது உரூபாய்க்கு வாங்குகிறீர்கள். நாம் வாங்கி முடித்து, நகர்ந்தால் இன்னோரிடத்தில் அதே தக்காளி நாற்பது உரூபாய்க்கு விற்கப்படுகிறது. இழப்பை எண்ணி உங்கள் மனம் துடிக்கிறது. ஆனால், யாரோ ஒரு வணிகர்க்கு அன்று பத்து உரூபாய் கூடுதலாகக் கிடைத்துவிட்டது. உங்களுடைய இழப்பு இன்னொருவர்க்கு வரவு. 
 
இதனாலொன்றும் ஆகப்போவதில்லை. நீங்கள் ஐம்பதுக்கு வாங்கிய பிறகு தக்காளியின் விலை அறுபதாகவும் உயரலாம். அப்போது உங்களுக்கு மகிழ்ச்சி. விற்றவர்க்கு இழப்பு. இன்னும் உயரமான தளத்திலிருந்து எண்ணிப் பாருங்கள். பத்து உரூபாயால் இருவர்க்குமே பெரிய விளைவுகள் தோன்றிவிடுவதில்லை. ஆனால், அந்த உணர்வுகளால் நாம் ஆட்டுவிக்கப்படுகிறோம். 
 
இரண்டு அணிகள் விளையாடுகின்றன. ஓர் அணிதான் வெல்ல முடியும். இன்னோர் அணி தோற்க வேண்டும். இது ஆட்டம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் நடப்பிலிருக்கும் இயல்பு. ஆனால், தோற்கும் அணி மலை சரிந்ததுபோல் நிலைகுலைகிறது. வெல்லும் அணி மலையைத் தூக்கியதுபோல் துள்ளித் திரிகிறது. இரண்டுமே மிகையான எதிர்வினைகள். ஆனால், இதுதான் இருவேறு உலகத்து இயற்கை. 
 
இருவேறு இயல்புகளைத்தான் ‘எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்’ என்கிறது தமிழ்ப் பழமொழி. பூனை இரையைக் கண்ட மகிழ்ச்சியில் துரத்துகிறது. எலி தனக்கு இறப்பு நேரப் போகிறது என்ற பதைபதைப்பில் பாய்ந்து ஓடுகிறது. இதில் என்ன தவறு இருக்க முடியும் ? உணவுக் கண்ணியில் இவை ஒன்றையடுத்து ஒன்றாக இருக்கின்றன. 
 
எலிகள் கொறித்துப்போடும் விரைவுக்கு நாட்டில் ஒரு விதையைக்கூடக் காப்பாற்ற முடியாது. எலிகளின் பற்கள் விரைந்து வளருமாம். அந்த வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அவை எவற்றையேனும் கடித்துக்கொண்டே இருக்க வேண்டுமாம். இல்லையேல் பல் வளர்ச்சியால் உணவை மெல்லவே முடியாத நிலைக்கு ஆளாகி இறக்க வேண்டியதுதான். 
 
உயிரிரக்கம் என்ற பார்வையில் எலியின் இறப்பு இரங்கத்தக்கதே. ஆனால், இயற்கை அவ்வாறில்லையே. உயிர்த்தன்மையுடைய ஏதேனும் ஒன்றுதான் இன்னோர் உயிருக்கு உணவாக முடியும். அதுதான் இயற்கையின் கட்டளை. பூனை உணவு கண்டு கொண்டாடுவதும் எலி உயிரைக் காக்கத் திண்டாடுவதும் இருவேறு உலகத்து இயற்கை. அதை மாற்ற இயலாது. 

- கவிஞர் மகுடேசுவரன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles