அழகு தமிழ் பழகு - 31

Friday, July 14, 2017

 மெய்ம்மயக்கம் 
செந்தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள இடைவெளியைத்தான் நாம் கொச்சை என்கிறோம். எழுத்தில் எவ்வாறு ஒரு சொல் பழுதில்லாமல் எழுதப்படுகிறதோ அவ்வாறே அது சொல்லப்படவும் வேண்டும். ஆனால், பேச்சில் அது பெரும்பாலும் இயல்வதில்லை. 
 
 

அம்மா என்று ஒரு சொல் சொல்லப்படுகிறது. அது எழுத்திலும் அம்மா என்றே எழுதப்படுகிறது. இங்கே அச்சொல்லின் எழுத்தும் எழுத்திசையும் (ஒலிப்பும்) ஒன்றுக்கொன்று நேராக இருக்கின்றன. அச்சொல்லுக்கு எந்தக் கொச்சையும் ஏற்படவில்லை. அம்மா, அப்பா, தம்பி, அடி, குத்து, பாட்டு, கூத்து, வா, போ, எடு, கொடு, சொன்னான், வந்தான் என்று எழுதப்படும் ஏராளமான சொற்கள் கொச்சையில்லாமல் சொல்லப்படுகின்றன. எழுத்தில் எவ்வாறு எழுதப்படுகின்றனவோ அவ்வாறே பேச்சிலும் ஒலிப்படுகின்றன. படித்தவர் மட்டுமில்லாமல் எழுதப் படிக்கத் தெரியாத பாமரரும் எழுத்தில் எவ்வாறு அச்சொற்கள் எழுதப்படுகின்றனவோ அவ்வாறே பேச்சிலும் பயன்படுத்துகின்றனர். இத்தகைய சொற்கள்தாம் தமிழின் எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்கும் இடையேயுள்ள பேச்சுக் கொச்சைத் தன்மையை ஏற்காமல் மொழியின் நெடுவாழ்வுக்கு வகை செய்கின்றன. எழுத்திலும் பேச்சிலும் எவ்வொரு மயக்கமோ தேய்வோ பிறழ்வோ திரிபோ மருவலோ இன்றி அவை செம்மாந்து வாழ்கின்றன. 
 
மேற்சொன்னவாறு இல்லாமல், சிறுபான்மை அளவிலான சொற்கள் எழுத்தில் எவ்வாறு எழுதப்படுகின்றனவோ அவ்வாறே கூறப்படாமல் பிறழ்ச்சியாய்க் கூறப்படுகின்றன. மக்கள் வாய்ச்சொற்களாய் இருந்தவைதாம் பேச்சில் வழங்கப்பட்டு எழுதப்பட்டன என்றாலும் அச்சொற்கள் பேச்சில் கொச்சைப்பட்டுவிட்டன. வருவார்கள், தருவார்கள் என்று எழுத்தில் எழுதப்படும் சொற்கள் பேச்சு வழக்கில் “வருவாங்க தருவாங்க” என்று ஒலிப்பு மாற்றம் பெறுகிறது. இதை நாம் மக்களின் பேச்சு வழக்கு, பேச்சுக் கொச்சை என்று ஏற்றுக்கொள்கிறோம். 
 
பலப்பல சொற்களை எழுத்து வடிவில் உள்ளதுபோலவே பேசிக்கொண்டிருக்கும் நாம் சிலப்பல சொற்களை ஒலிமயக்கித் திரித்து உச்சரிக்கிறோம். இதுதான் கொச்சை வழக்கு எனப்படுவது. ஒலிப்பைக் குறித்து வைக்கத்தான் எழுத்து பயன்பட்டது. ஆனால், எழுத்தின்படியே ஒலிப்பு இருக்கவில்லை. நாட்பட நாட்பட ஒரு சொல்லின் திருத்தமான வடிவம் பேச்சு வழக்கில் ஒலி மயங்குகிறது. வழுக்கிச் செல்கிறது. இனமெய்யை வரவழைத்துக் கொள்கிறது. இன உயிர்மெய்யை மாற்றீடு செய்துகொள்கிறது. இலக்கணம் இதைக் குறித்து எதையும் சொல்லவில்லையா? பேச்சு ஒலிப்பைக் கணக்கில் கொண்டால்தானே அது மொழிக்கு நலம் செய்வதாகும்? ஆம். இலக்கணம் இதைக் குறித்தும் கூறுகிறது. 
 
நன்னூலில் எழுத்துகள் மயங்குவது பற்றிய விரிவான வாய்பாடுகள் இருக்கின்றன. எழுத்துப் போலி என்று ஒரு கருத்துருவாக்கத்தையும் இலக்கணம் தருகிறது. எழுத்து வடிவில் ஒருவாறு இருப்பது, பேச்சு வடிவில் வெவ்வேறாக மயங்குவதைக் கணக்கில்கொண்டு அவை கூறப்பட்டுள்ளன. அவற்றை நாம் நுணுகிக் காணாவிட்டாலும் கூட, ஓரளவு அறிந்து கொள்வது நலம் பயக்கும். அவற்றின் வழியே பேச்சுக் கொச்சைகள் எவ்வாறு மயங்கி ஒலிக்கின்றன என்பதற்குரிய விளக்கத்தை நாம் அடையலாம். 
 
நன்னூலின் வாய்பாடு ஒன்றைச் சொல்கிறேன். “ஙம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே” என்பதுதான் அந்த வாய்பாடு. நன்னூலின் நூற்றுப் பதினொன்றாம் வாய்பாடாகிய இதை வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்ற தலைப்பின்கீழ்ப் பதிப்பித்திருக்கிறார்கள். 
 
மெய்ம்மயக்கம் என்றால் மெய்யெழுத்தை உள்ளபடியே சொல்ல முடியாமல் மயங்குவது. வேற்றுநிலை என்றால் வேறுபாடுற்ற நிலை. அஃதாவது ஒரு மெய்யெழுத்து அது எவ்வாறு எழுத்தில் வடிக்கப்பட்டுள்ளதோ அதேபோல் ஒலிக்காமல், தன்னை அடுத்து வரும் ஓர் உயிர்மெய்யெழுத்தால் மயக்கமுற்று, தானே வேறுபட்டோ அல்லது  தன்னையடுத்து வரும் உயிர்மெய்யை வேற்றுமைப்படுத்தியோ ஒலிப்பது.
 
ஙம்முன் கவ்வாம் = ஙகர மெய்யெழுத்தை அடுத்துக் ககர உயிர்மெய் வந்தால்.
வம்முன் யவ்வே = வகர மெய்யெழுத்தை அடுத்து யகர உயிர்மெய் வந்தால்.
 
அஃதாவது ங் என்ற மெய்யை அடுத்து க,கா,கி,கீ… போன்ற உயிர்மெய்கள் வந்தாலோ, வ் என்ற மெய்யை அடுத்து ய,யா,யி,யீ… போன்ற உயிர்மெய்கள் வந்தாலோ அங்கே அம்மெய்யெழுத்து தானே மயங்கியோ தன்னை அடுத்து வரும் எழுத்தை மயக்கியோ ஒலிக்கும். ஏதோ விளங்கியும் விளங்காததுபோலும் இருக்கிறதா? கிட்டத்தட்ட விளங்கிக்கொண்டுவிட்டோம். எடுத்துக்காட்டுக்குச் சென்றால் துலக்கமாக விளங்கிவிடும்.
 
கங்கணம், சங்கிலி, தங்கம்.
 
இந்தச் சொற்களை எடுத்துக்கொள்ளுங்கள். சொற்களுக்கு இடையெழுத்தாக “ங்” என்ற மெய்யெழுத்து வந்திருக்கிறது. அதையடுத்து ககர உயிர்மெய்யெழுத்துகள் வந்திருக்கின்றன. ஙகர மெய்யையடுத்து ககர உயிர்மெய்யெழுத்துகள் வருவது இயற்கை. இதை நாம் எப்படி உச்சரிக்கிறோம்? கங்கணம் என்பதைக் கங்ஙணம் என்றுதான் ஒலிக்கிறோம். ங் என்ற மெய்யை நன்கு நிறுத்தி அழுத்தி ஒலிக்கும்போது அங்கே நம் ஒலிப்பு நிலைப்பட்டுவிடுகிறது. அதையடுத்து வரும் க் என்ற மெய்யின் வல்லினத்தை நம்மால் திறம்பட ஒலிக்க முடிவதில்லை. கங்க்கணம் என்பதைப் போல் நம் ஒலிப்பு அமைந்தால்தான் ககரத்தை அதன் வல்லொலியோடு சேர்த்துச் சொல்வதாகும். ஆனால், நாம் கங்ஙணம் என்றே இலகுவாக ஒலிக்கிறோம். முழுமையாக கங்ஙணம் என்று ஒலிக்காவிட்டால்கூட, ககரத்தின் வல்லொலிப்பில் கொஞ்சம் மட்டுப்படுகிறோம். அந்த மட்டொலியைக் குறிப்பிட நமக்கு எழுத்து இல்லை. ஆனால், எழுத்தில் அவ்வாறு முறையாய் எழுதிவிட்டு ஒலிப்பில் ஒன்றையொன்று சார்ந்து ஒலித்துச் செல்கிறோம். இதைத்தான் மெய்ம்மயக்கம் என்கிறார்கள். ஒலிப்புக்குள்ள இயல்பே இதுதான். அதேபோல் சங்கிலி என்பதை நாம் சங்ஙிலி என்பதைப்போல்தான் உச்சரிக்கிறோம். தங்கப்பதக்கம் என்பதில் இந்த வேற்றுமையை உணரலாம். தங்கம் என்பதில் உள்ள கம், பதக்கம் என்பதில் உள்ள கம்மைப்போல் இல்லைதானே? இன்னும் சுருக்கிச் சொன்னால் ‘தக்கத்தில் உள்ள கம் தங்கத்தில் இல்லை’. எழுத்துக்கும் பேச்சொலிக்கும் இடையில் நிகழும் இவ்வினைகளை நம் இலக்கண மாமுனிகள் எவ்வாறு நிறுத்தி அளந்திருக்கிறார்கள் பாருங்கள்.  
 
வகர மெய்யை அடுத்து ய, யா, யி, யீ... வரிசை உயிர்மெய்யெழுத்துகள் தோன்றினாலும் இவ்வாறு மெய்ம்மயங்கும். எடுத்துக்காட்டாக “தெவ் யாது” என்ற சொற்றொடரை எடுத்துக்கொள்ளுங்கள். தெவ் என்றால் பகை. நமக்குப் பகையாவது யாது என்று கேட்பது அச்சொற்றொடர். தெவ்யாது என்று எழுத்தில் உள்ளபடியே நாம்  முறைப்பட ஒலிக்க இயலாது. தெவ்வாது என்பதைப்போல்தான் ஒலிக்க இயலும். மிகவும் முயன்றால் தெவ் யாது என்று ஒலிக்க முடியும்தான். ஆனால், எல்லா நிலைமைகளிலும் அது இயல்வதில்லை. போகிற போக்கில் விரைந்து ஒலிப்பதுதான் பேச்சு மொழியின் இயற்கை. அதனால் தெவ்வாது என்பதைப்போல்தான் நாம் கூறுவோம். தெவ்வாது என்றுதான் சொல்ல வேண்டும் என்பதில்லை. தெய்யாது என்றும் சொல்லும்படி ஆகும். மெய்யெழுத்தானது தன்னை அடுத்து வரும் உயிர்மெய்ம்மேல் ஏறி மயக்கும். அல்லது தன்னை அடுத்து உயிர்மெய்யை ஏற்று மயங்கும்.
 
ஒரு பானைக்கு ஒரு சோற்றுப் பதமாகத்தான் நன்னூலின் ஒரேயொரு வாய்பாட்டை எடுத்துக்கொண்டு இவற்றை விளக்கினேன். இதன் இயல்புகளில் நாம் பேச்சுத் தமிழை எவ்வாறு ஆக்கிக்கொண்டோம் என்பதற்கான இயற்கை பொதிந்திருக்கிறது. அவற்றை முறையாகவும் ஒவ்வொன்றாகவும் விளங்கிக்கொண்டால் பேச்சுத் தமிழில் வழங்குகின்ற அரும்பொருள்களை நாம் இனங்கண்டுவிடலாம். பேச்சுத் தமிழை அளக்கும் ஆற்றல் பெற்றுவிட்டால் நமக்குத் தமிழ் இலக்கணம் மேலும் எளிதாகிவிடும்.

- கவிஞர் மகுடேசுவரன் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles