பழமொழி இன்பம் 27

Friday, June 30, 2017

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை!

எல்லா ஊரிலும் எல்லாமும் இருப்பதில்லை. ஓர் ஊரில் கிடைப்பது இன்னோர் ஊரில் கிடைக்காது. சேலத்தில் விளையும் மாம்பழம் தஞ்சையில் இருக்காது. கடலூர் மாவட்டத்தில் விளையும் முந்திரி கோவை மாவட்டத்தில் இல்லை. இப்படி ஊர் ஊருக்கு ஒரு விளைச்சலும் விளைபொருளும் வேளாண்மையில் நிலவுகின்றன. இதைத் தீர்மானம் செய்வது அந்தந்த நிலத்து இயல்பும் தட்பவெப்ப நிலையும்தான். 
 
 

வெய்யில் மிக்கிருக்கும் பகுதியில் அதற்கேற்ற பயிர்களும் மரங்களும் விளையும். நீர்வளம் மிகுந்த பகுதிகளில் நீருண்டு செழிப்பவை வளர்க்கப்படும். புன்செய்யில் விளைபவற்றை நன்செய்யில் இடவேண்டியதில்லை. நன்செய்க்குரியவை புன்செய்யில் விளையமாட்டா. இப்படி எல்லாமே நிலம், நீர், மழை, வெய்யில், மக்களின் தேவை ஆகியவற்றோடு நேரடியான தொடர்பில் உள்ளவை. தற்காலத்தில்தான் எங்கே விளைந்தாலும் அவற்றை இறக்குமதி செய்து உண்ணப் பழகிவிட்டோம். காசுமீர அரத்திப் பழங்களும் ஈரான் நாட்டுப் பேரீச்சம் பழங்களும் இன்று உள்ளூர்க் கடைகளில் கிடைக்கின்றன. 
 
இடப்பெயர்வு அரிதாய் இருந்த முற்காலத்தை எண்ணிப் பாருங்கள். நன்செய்யில் விளையும் கரும்பும் வெல்லமும் புன்செய் ஊர்களில் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுமா என்ன? கிடைக்காது. கரும்பை விளைவிப்பது என்பதே பத்துத் திங்கள்களுக்கு நிகழும் பயிர்த்தொழில். விளைந்த கரும்பைப் பிழிவதற்கு ஆலை அமைக்க வேண்டும். உருள்சக்கரங்களுக்கு இடையே கரும்பைச் செலுத்தி சாறு பிழிந்து திரட்ட வேண்டும். பிறகு அச்சாற்றைக் கொப்பரையில் இட்டுக் காய்ச்சி வெல்லமாய்ப் பிடிக்க வேண்டும். இத்தனை வினையாற்றல்களும் நிகழ்ந்தால்தான் இனிக்கின்ற சர்க்கரை கிடைக்கும். தனியாக இருப்பது பூந்தி என்றும் அதை உருண்டை பிடித்தால் இலட்டு என்றும் சொல்கிறோமே, அப்படித் துகளாக இருப்பதைச் சர்க்கரை என்றும் உருண்டை பிடித்ததையோ வார்ப்பிலிட்டு எடுத்ததையோ  வெல்லமென்றும் சொல்வோம். 
 
இந்தக் கரும்பு வெல்லத்தையும் சர்க்கரையையும் புன்செய் நாட்டினர் வந்து வாங்கிச் சென்று பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பண்டமாற்று செய்ய இயலாத தொலைவில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் ஊரில் இனிக்கின்றதுபோல் ஏதேனும் விளையுமா? ஆம். விளைகிறது. இலுப்பை மரம் அவ்வாறு விளையக்கூடிய மரம். அதற்கு நீர்வளம் தேவையில்லை. அம்மரம் இருநூறு முதல் நானூறு ஆண்டுகள் வரை வளர்ந்து நிற்குமாம். அதன் பூக்களின் இதழ்களுக்கு இனிப்புச் சுவை. 
 
சங்கப் பாடல்களில் இடம்பெற்ற இலுப்பையானது இருப்பை, இழுவம், இழுப்பை, மதூகம், குலிகம், சந்தானகரணி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது. சங்கப் பாடல்களில் இருபத்திரண்டு பாடல்களில் இம்மரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அக்காலத்தில் தமிழகமெங்கும் இலுப்பை மரங்கள் நிறைந்திருக்கின்றன. இன்று அம்மரங்களையே காண முடியவில்லை. 
 
அகன்ற தடிமனான இலைகள் அதற்கு. இலுப்பை எண்ணெய் உடல் தோல்நோய்களை நீக்கும் அருமருந்து. கரும்பும் சர்க்கரையும் இல்லாதவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? இலுப்பைப் பூவிதழ்களைச் சேர்த்துக் காயவைத்து பொடியாய் இடித்து வைத்துக்கொண்டார்களாம். அந்த இலுப்பைப்பூப்பொடி சர்க்கரையை விடவும் இனிப்பாய் இருக்குமாம். கரும்பு விளையாத ஊரில் ஆலை எப்படி இருக்கும்? அவர்களுக்கு இலுப்பைப் பூதான் சர்க்கரை. இல்லையென்று தொய்ந்து விழ வேண்டியதில்லை, அங்கேயே அதற்கு ஒரு மாற்று இருக்கும் என்ற நம்பிக்கையைச் சொல்வது இப்பழமொழி. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. 

- கவிஞர் மகுடேசுவரன் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles