அழகு தமிழ் பழகு - 30

Friday, June 30, 2017

தளராத் தமிழ் முயற்சி 

பேரோட்டத்தில் கலந்து கொண்டவர்களைப்போல் இதுவரை தொடர்ச்சியாய் இலக்கணத்தைப் பிடித்துக்கொண்டு ஓடிவந்துவிட்டீர்கள். உங்களை மனமாரப் பாராட்ட வேண்டும். இவ்வளவு நெடுந்தொலைவு பின்பற்றி வந்தமைக்கு உங்களுக்குள்ளே உள்ள மொழி விடாய்தான் இயக்கியாக இருக்க வேண்டும். அதை அப்படியே பிடித்துக்கொள்ளுங்கள். அதை இழக்காதவரை இம்மொழி மக்கள் மறையாது வாழ்வார்கள்.

அதில் சிறிதே சுணக்கம் என்றாலும்கூட இந்த மொழிக்கு எத்தகைய இடர்ப்பாடு வந்து சேருமோ, அறியேன். மூச்சுத்தணியாத இந்நெட்டோட்டத்திற்கு ஒரு களைப்பு மருந்தாக இம்முறை மட்டும் நிழலோய்தல் போன்ற ஒரு கட்டுரையைத் தந்துவிடுகிறேன். 
 
அடுத்த பகுதியிலிருந்து இன்னும் நுண்மையான இலக்கணப் பகுதிக்குள் நுழைந்துவிடுவோம். இதுவரை எழுத்துகளைப் பற்றிய இலக்கண அடிப்படைகளை முற்றாகக் கற்று வந்துவிட்டோம். இனி அடுத்ததாய் இன்னும் நல்ல இலக்கணப் பகுதியில் நுழைந்து பிரித்து மேய்வோம். இவ்வொரு பகுதியில் மட்டும் தமிழ்மொழி சார்ந்து பொதுப்பான்மையோடு இங்கே சிலவற்றைக் கூறுவிடுகிறேன்.
 
அண்மையில் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்த தமிழாசிரியர்களுக்கான பயிற்றுவிப்புக் கருத்தரங்குகளில் நான் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டேன். தமிழ் கற்பித்தல், தமிழ் இலக்கணம் கற்பித்தல் ஆகியவற்றில் பின்பற்றப்படவேண்டியவை என்று என் பரிந்துரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கக் கோரும் கருத்தரங்கங்கள் அவை. சென்னையில் இரண்டும், திருப்பத்தூர், அரியலூர், திருப்பூர் ஆகிய ஊர்களில் ஒவ்வொன்றுமாய் ஐந்து மேடைகளில் ஒன்றரை மணி நேர உரையாற்றலை நிகழ்த்தினேன். தமிழ் இலக்கணம் கற்பித்தல் குறித்து இடைநிலை, மேல்நிலைத் தமிழாசிரியர்கள் நடுவில் மொத்தம் ஏழெட்டு மணிநேரப் பேச்சு. இக்கட்டுரைத்தொடரில் கூறப்பட்ட சிறப்பான பொருள்களை முன்வைத்து என் பேச்சை அமைத்துக்கொண்டேன். ஒவ்வொரு கூட்டத்திலும் பங்குபெற்ற தமிழாசிரியர்கள் உணர்ச்சி மேலிட உவப்பூறியவர்களாக என் கரங்களைப் பற்றிக்கொண்டார்கள். என்னினும் அகவை மூத்தவர்களுக்கு தமிழைப் பற்றிய பேச்சு எத்தகைய உள்ளத்துவகையை ஊட்டியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்படியொருவனை எதிர்பார்த்திருந்தார்கள் என்பதை அவர்களுடைய கண்களே தெரிவித்தன. அப்பேச்சுகளில் நான் பேசிய சிலவற்றை இங்கே கூறுகிறேன்.
 
நம்மொழியின் முதல் தோற்றத்திலிருந்து இன்றைய காலகட்டம் வரையிலான காலம் எப்படித் தாழ்த்தி மதிப்பிட்டாலும் இருபதாயிரம் ஆண்டுகள் என்பதில் மாற்றமில்லை. தமிழின் முதற்சொல் தோன்றிய காலம்தொட்டு இன்று வரையில் இந்தக் காலகட்டத்தின் அகவையை இம்மொழி பெற்றிருக்கிறது. எண்ணிப் பாருங்கள், பழங்காலத்தில் என்ன பெரிதாய் மக்கள் தொகை இருந்திருக்கக்கூடும்? பத்து இலட்சத்திற்குள் மக்கள் தொகை நிலவிய தமிழ்நிலமாகத்தான் இஃது இருந்திருக்கவேண்டும். அத்தகைய சிற்றினக்குழுவாய்த்தான் தொன்மை மாந்தர்கள் அனைவருமே வாழ்ந்திருப்பார்கள். அவர்களுக்குள் பெரிதாய்ப் போக்குவரத்தும் நிலவியிருக்காது. இடையில் கொல்விலங்குகள் வாழும் காடுகளும் மலைகளும் பேரோடைகளும் ஆறுகளும் குறுக்கிடும் நிலப்பரப்பில் ஊரடங்கி வாழ்வதே வாழ்க்கை. அந்த மனிதர்கள் தமக்கென்று ஒரு மொழியைத் தோற்றுவித்து ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு சொல்லைக் கண்டுபிடித்து ஒவ்வொரு சொற்பகுதியையும் பகுத்தாய்ந்து இலக்கணச் செப்பம் அடையுமளவுக்கு வந்த வரலாற்றைச் சற்றே நினைத்துப் பாருங்கள்.
 
தொன்மக்களின் மொழிக்கண்டுபிடிப்பானது அறிவியலில் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதற்கும், குமிழ்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டதற்கும், இயந்திரவியலில் நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதற்கும், வானொலி தொலைக்காட்சி கணினி என்னும் எவ்வொரு கண்டுபிடிப்புக்கும் எவ்வகையிலும் தாழ்ந்ததன்று. அந்தக் காலத்தில் மனிதன் சிந்தனைக்குரிய கருவியான மொழியைக் கண்டுபிடித்துவிட்டான். தமிழ் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு மொழிக்கண்டுபிடிப்பும் வரலாற்றைப் புரட்டிப்போட்ட கருவிக்கண்டுபிடிப்புகளுக்கு எவ்விதத்திலும் தாழ்ச்சியானதன்று என்று சொல்கிறேன். 
 
ஒரு சொல்லைக் கண்டடைவது அவ்வளவு எளிதானதா என்ன? வெற்றி என்ற சொல்லையும் தோல்வி என்ற சொல்லையும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியுமா ? அச்சொற்களுக்குப் பின்னால் அவ்வினைகளால் உற்ற எத்தனை வரலாறுகள் பொதிந்திருக்க வேண்டும்? அப்படித்தானே ஒவ்வொரு சொல்லும் மொழிக்குள் வந்து சேர்ந்திருக்க வேண்டும்? அதனால் மொழி என்பது ஏதோ இரண்டாம் தரமான பாடம் என்றோ மொழி கற்பது வெறுமனே தொடர்புக்கலையை வளர்த்துக்கொள்வதற்கு என்றோ யாரும் எண்ண வேண்டியதில்லை. நம் மொழி நம் மூதாதை நம் கையளித்துச் சென்ற அறிவுச் சொத்துடைமை, உணர்வுச் சொத்துடைமை என்ற தெளிவுதான் வேண்டும்.
 
கடந்த நூறு ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றப் பாய்ச்சலின் விரைவு என்றுமில்லாததாக, அளவில்லாததாக இருக்கிறது. அந்நூற்றாண்டுக்கு முந்திய இருபதாயிரம் ஆண்டுகளாக மொழியும் மக்கள் வாழ்க்கையும் வரலாறும் நிலைப்படத்தில் இருந்ததுபோல் அசைவில்லாமல் நிலைத்திருந்திருக்கிறது. ஆனால், இந்நூற்றாண்டுக்குள் மொழிக்கு ஏற்பட்ட சிதைவுபோல் வேறெக்காலத்திலும் ஏற்பட்டதில்லை. படிக்காதவர்களால் வாய்மொழியாய்க் காப்பாற்றப்பட்டு வந்த தமிழ்மொழி படித்தவர்களால் அழிவுக்கு ஆட்படுகிறது என்று சொன்னேன். 
 
எப்போதுமே பிறமொழி ஆட்சியாளர்களால் இந்நிலப்பரப்பு மீண்டும் மீண்டும் கைப்பற்றப்பட்டது. ஓர் ஆட்சியமைப்பு முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் நீடித்து நிலைத்திருந்திருக்கிறது. அப்போதெல்லாம் கெடாத தமிழ்மொழி இப்போது தமிழுக்கென்று அமைக்கப்பட்ட மொழிவாரி மாநிலத்தரசில் தலைகீழாகச் சிக்கிச் சீரழிகிறது. இந்த முரணைக் களையவேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் எழுத்தாளர்கள், ஊடகத்துறையினர், தமிழாசிரியர்கள், ஆட்சியாளர்கள். ஆனால், இவர்களில் யார்க்குமே தமிழின் நலம்பேணும் வேட்கை இருக்கிறதா என்பது தற்காலத்தில் கேள்விக்குறியே.
 
ஆட்சிக்கு வருவோர்க்கு வாக்குக் கணக்கு. பெரும்பான்மையினர் தமிழுக்கு எதிராக வாக்களித்தால் தமிழை இந்நிலத்திலிருந்து அகற்றிவிடவும் தயங்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன். ஊடகத்துறையினர்க்கு மொழிசார்ந்த அடிப்படை அறம் சிதறிக் கிடக்கிறது. எழுத்தாளர்கள் பலர்க்கு நல்ல தமிழே தெரியவில்லை. குத்து மதிப்பாக மேடையில் தூய தமிழ் பேசுவதுபோல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பிழை திருத்துநர் என்ற பணியை இப்போது யார் செய்கின்றார்கள் என்றே தெரியவில்லை. இறுதியாய் மீதமுள்ளவர்கள் தமிழ் கற்பிப்பவர்கள். இந்தத் தலைமுறையில்தான் தமிழ் கற்பிப்பதற்கு ஒரு கூட்டமும் அவ்வாறு கற்பிக்கப்படும் தமிழைக் கேட்பதற்கு ஒரு கூட்டமும் மீந்திருக்கின்றன. இன்னும் இருபதாண்டுகள் சென்றால் இவர்களில் யாரேனும் ஒரு தரப்பினர் முற்றாக இல்லாமல் போய்விடக்கூடிய பேரிடர் காத்திருக்கிறது என்றே தோன்றுகிறது. இதை நான் தமிழாசிரியர்களிடத்தில் நெகிழ்வுறக் கூறினேன். கூட்டத்தில் சுடுகாட்டின் அமைதி நிலவியது. 
 
இன்னும் ஐம்பதாண்டுகள் கழித்து ஒரு நிலைமையைக் கற்பனை செய்து பாருங்கள். தமிழ் கற்றல், தமிழ் கற்பித்தல் ஆகியவற்றின் நிலை எவ்வாறு இருக்கும் என்றும் கேட்டேன். பள்ளி என்ற அமைப்பே கூட பெரும் மாற்றத்திற்கு உட்பட்டிருக்கும் என்று தமிழாசிரியர் ஒருவர் கூறினார். இணையத்திலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் நிலை தோன்றும் என்பது அவர் கூற்று. அவர் கூறியதில் உண்மை இல்லாமலில்லை. ஆக, இங்கே நான் தமிழ் சார்ந்து பேசுவதும் எழுதுவதும்கூட கடைசி வாய்ப்பாக இருக்கலாம். தமிழைக் கற்றுக்கொள்ளவும் கற்றனவற்றை மீட்டுப்பொலிவுறவும் முன்வரும் ஒரு சிறுதிரள் பிற்காலத்தில் இருக்குமா என்ற பேரச்சம் எல்லார்க்குமே தோன்றிவிட்டது.
 
தமிழை எல்லாம் அழிக்க முடியாதுங்க, எப்போதும் இருக்கும் என்று வெற்று நம்பிக்கையோடு ஒரு கூட்டம் கூறிக்கொண்டே இருக்கும். அவர்களுடைய எழுத்தில் தமிழே சிறுபான்மை இடத்தைத்தான் பிடித்திருக்கும். ஆனால், அவர்கள் தமிழுக்கு முட்டுக்கொடுப்பார்கள். நிலைமை இப்படித்தான் கலவையாக இருக்கிறது. எது நன்று எது தீது என்பதே விளங்கவில்லை. இதையெழுதும் இந்நொடிவரை ஆங்கிலத்தில் பயன்படும் சொற்கள் அதே ஆங்கிலத்தில் அப்படியே பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுக்கு நேராக ஒரு தமிழ்த்தொடரை ஆக்குவதற்கும் ஆக்கிப் பயன்படுத்துவதற்கும் இங்கே யார்க்குமே வேட்கையில்லை என்பது வெட்கக்கேடானது. பாசிசம் என்பது தமிழ்ச்சூழலில் நூற்றாண்டுகளுக்கும் மேலாகப் பயனில் இருக்கின்ற பிறமொழிச்சொல். அச்சொல் அதே ஆங்கிலத்தில் அப்படியேதான் பயன்படுத்தப்படுகிறதே அன்றி, அதற்கொரு தமிழாக்கம் வேண்டும் என்பதில் யார்க்குமே உணர்த்தியில்லை. அத்தொடரைப் பயன்படுத்துவோர்தானே தமிழாக்கத்தை நோக்கி நகர வேண்டும்? அதைச் செய்வதில்லை. ‘பொறாக்கொடுங்கோன்மை’ என்ற தொடரை ஆக்கி வெளியிட்டேன்.
 
எப்படியேனும் ஒரு முயற்சியில் இருந்தால்தான் தமிழைக் காக்க முடியும். அதைத்தான் இத்தொடர் தொடங்கியதிலிருந்து இன்றுவரை மனம் குழுவினரும் நானும் செய்து வருகிறோம். தொடர்ந்து படிக்கும் நீங்களும் அதே முயற்சியினராய் ஊக்கமூட்டுகிறீர்கள். தளராமல் மேலும் செல்வோம். வாருங்கள் !

- கவிஞர் மகுடேசுவரன் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles