நான் ஒரு மேடைக்கலைஞனாகவே அறியப்பட வேண்டும்!  நாடகக் கலைஞர் மாதவ. பூவராக மூர்த்தி

Tuesday, January 31, 2017

“அது அலைபேசி இல்லாத காலம். ஒரு திருமணத்திற்கு அழைப்பு விடுத்த பூர்ணம் விசுவநாதன், “உனக்காக நான் அங்கே காத்திருக்கிறேன், இரவு ஏழு மணிக்கு வந்துடு மூர்த்தி”ன்னு சொன்னாரு. ஆனால், என்னால சொன்ன நேரத்துக்கு போக முடியல. என் குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லாம டாக்டர்கிட்ட காண்பிச்சுட்டு, அந்த இடத்துக்குப் போக ஒரு மணிநேரம் கால தாமதமாகிடுச்சு.

அப்போது, எனக்காக பூர்ணம் விஸ்வநாதன் சார் சாப்பிடாமல் வெயிட் பண்ணிட்டுதான் இருந்தார். அதுக்கு நடுவுல நடிகர் கமல் அவரை வெளியில கூப்பிட்டிருக்காரு. ஆனால் அவரோ, “என் குழுவைச் சேர்ந்த ஒரு ஆளை இங்கே வரச் சொல்லியிருக்கேன், வந்தால் என்னைத் தேடுவாரு பாவம்”னு  சொல்லி இருக்காரு. இது கூட அவர் என்கிட்டே சொல்லலை. சாரோட மனைவிதான் சொன்னாங்க. இப்போ அதை நினைச்சாலும், எனக்கு நெகிழ்ச்சியா இருக்கும். அப்படிப்பட்ட மனிதரோட ஆசியைப் பெற்று ஆரம்பித்ததுதான் எங்க குருகுலம் நாடகக்குழு” என்று உணர்ச்சிவயப்பட்ட நிலையில், தன்னுடைய நாடக உலக அனுபவம் பற்றி பேசத் தொடங்குகிறார் மாதவ. பூவராக மூர்த்தி.

“என் சொந்த ஊர் மாயவரம். சின்ன வயசுலேருந்தே கலைகள் மீது ஆர்வம் அதிகமாக இருந்துச்சு. பள்ளி மற்றும் கல்லூரி காலத்திலே மேடை நாடகங்கள்ல நடிப்பேன். என் நண்பர்கள் எல்லாரும், நீ ரொம்ப நல்லா நடிக்கிறேன்னு சொல்லி என்கரேஜ் செய்வாங்க. அதனால, எனக்கு நடிப்பு மேல ஆர்வம் ரொம்ப அதிகமாகிடுச்சு. ஒரு முறை என்னோட கல்லூரி பேராசிரியர், என் தந்தைகிட்ட “உங்க பையன் நல்லா நடிக்கிறான். சென்னைக்கு அனுப்பினீங்கன்னா, அவனுக்கு நல்ல வாய்ப்புகள் வரும்”னு  சொன்னாரு. அதற்கு, எங்க அப்பா எந்தவிதமான மறுப்பும் சொல்லலை. ஆனால், “ஒரு நல்ல வேலையில சேர்ந்துட்டு, நடிப்பு பக்கமா நீ போகலாம்”ன்னு சொன்னாரு. 

நானும் என்னோட முதுகலை பட்டத்தை நல்லபடியா முடிச்சு, வங்கி வேலைக்காக  காஞ்சிபுரம் வந்தேன். அப்பொழுதும் எனக்குள்ள நடிப்பு மீதான ஆர்வம் இருந்துட்டேதான் இருந்தது. அலுவலகம் முடிஞ்சதும், காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு வந்து நிறைய நாடகங்கள் பார்ப்பேன்; எல்லார்கிட்டயும் சான்ஸ் கேட்பேன். யாருமே எனக்கு வாய்ப்பு கொடுத்தது இல்லை. 

அப்போதான் என்னோட கல்லூரி கால நண்பனைச் சந்திச்சேன். அவன் பூர்ணம் விஸ்வநாதன் குழுவில் நடிச்சிட்டு இருந்தான், அப்படியே அவருகிட்ட என்னையும் அறிமுகப்படுத்தக் கேட்டேன். “இன்னும் கொஞ்ச நாள்ல பூர்ணம் சார் ‘பூர்ணம் நியூ தியேட்டர்ஸ்’ ன்னு ஒரு குழு ஆரம்பிக்கப் போறாரு, நீயும் வா”ன்னு சொல்லி, என்னை கூட்டிட்டுப் போனான். அதுதான் என்னோட வாழ்க்கையில நடந்த திருப்புமுனை. 

நண்பனோட பூர்ணம் விஸ்வநாதன் நாடகத்தோட ஒத்திகைக்குப் போனேன். அவரைப் பார்த்து, என்னோட விருப்பத்தை தெரிவிச்சேன். அவரு நாடகத்துல சின்ன வேஷம் கொடுத்தாரு, அப்போ தொடங்குனதுதான் என்னோட பயணம்.

பூர்ணம் விஸ்வநாதன் குழுவில் இருக்கும்பொழுது, நாடகம் பற்றி நிறையா நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். இப்படி நடிக்கணும், இங்கே நிக்கனும்னு அவரு எதுவுமே சொல்ல மாட்டாரு. டயலாக் பேப்பரை கொடுத்து, எங்களை மனப்பாடம் பண்ணிட்டு நேரா ஒத்திகைக்கு வரச் சொல்லுவாரு. அங்கே நாங்க நடிக்குறதை பார்த்து, என்ன மாற்றங்கள் செய்யணுமோ அதை மட்டும் தான் செய்வாரு. அவரைப் பொறுத்தவரை நடிப்பு என்பது இயல்பாக  இருக்கணும், ரொம்ப மிகைப்படுத்தினா அவருக்குப் பிடிக்காது.

இதே பாணியைத்தான், இப்போ எங்க குருகுலம் குழுவில் பின்பற்றி வந்துட்டு இருக்கோம். எங்களோட தீம் எல்லாம் ரொம்ப யதார்த்தமா இருக்கும். ஒரு குடும்பத்துல நடக்குற பிரச்சினை, அதுக்கு எந்த மாதிரியான தீர்வுன்னு சொல்லுறோம். நாங்க கொடுக்குற தீர்வு, பார்க்குற ஆடியன்ஸுக்கு நிறைவை தரணும். அப்படிப் பார்த்தால், எங்களோட எல்லா நாடகங்களுக்கும் மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. 

நிறைய மக்களுக்கு மெகா சீரியலுக்கும் மேடை நாடகத்துக்கும் வித்தியாசமே தெரியாது. எங்களை மாதிரி ஆர்டிஸ்டுகளுக்கு, அது கொஞ்சம்  வருத்தமான விஷயம். சீரியல்ல அவங்க எடுக்குற விதம் வேற, இங்கே நாங்க சொல்லுற கதைக்களம் வேற, ரெண்டையும் நாம குழப்பிக்க கூடாது. என்னை நேரில் பார்க்கிற பல பேர், நீங்க ‘ராமானுஜர்' சீரியல்ல வர்றவர்தானேன்னு கேட்பாங்க. ஒரு பக்கம் பெருமையா இருந்தாலும், இன்னொரு பக்கம் வருத்தமா இருக்கும். ஏன்னா, என்னை ஒரு மேடை நாடக கலைஞனாகத்தான் மக்கள் அடையாளப்படுத்தணும்னு விரும்புறேன்.

“உங்க நாடகத்தின் பின்னணி பிராமணர்கள் சார்ந்தே இருக்கிறதே” என்று எங்கள் குழு மீது சில விமர்சனங்கள் இருக்கு. இந்த இடத்துல, இந்த விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புறேன். நான் பிராமண குலத்தைச் சேர்ந்தவன். என்னோட பிறப்பு வளர்ப்பு சூழல் எல்லாமே, இதனை சுற்றித்தான் இருந்தது. எங்க வீட்ல உள்ளவங்க ஒரு பிரச்சினையை எப்படி எதிர்கொள்வாங்க. அப்போ அவங்க என்ன பேசுவாங்கன்னு, என்னால தெளிவா சொல்ல முடியும். ஆனால், மற்ற பின்னணியில் இருக்குறவங்க பற்றி எனக்கு தெரியாது. தெரியாத ஒரு விஷயத்தை வலுக்கட்டாயமா எழுதி கஷ்டப்படுறதுக்கு இது எவ்வளவோ மேல். 

எங்க நாடகம் எல்லாமே திருவல்லிக்கேணி, மைலாப்பூர், மாம்பலம் சார்ந்த சபாக்கள்லதான் நடக்குது. அங்கே முக்கால்வாசி பிராமணர்கள் தான். அதுவும்  வயதானவர்கள் தான், எங்க நாடகங்களை பார்க்குறாங்க. அவங்களுக்காகவும் இந்த பாணியை கடைப்பிடிக்க வேண்டியிருக்கு. 

எங்களோட ‘அம்மாவின் அரண்மனை' நாடகத்தை பார்த்தீங்கன்னா, அதுக்கு மேடையில பெரிய செட் அமைத்து இருப்பேன். அந்த செட் கிராமத்துல இருந்த எங்க பாட்டி வீட்டை ஞாபகப்படுத்துறமாதிரி இருந்துச்சு. அந்த நாடகத்தை பார்க்க வந்தவங்க கூட, “நாங்க சின்ன பசங்களா இருந்தப்போ, எங்க பாட்டி வீட்டுல வாழ்ந்த ஞாபகத்தை கொண்டு வந்துடுச்சு”ன்னு சொன்னாங்க. இந்த மாதிரி பாராட்டுக்களை, எங்களுக்குக் கிடைத்த வெற்றி விருதுகளாகப் பார்க்கிறேன்” என்று சொன்ன பூவராக மூர்த்தி, சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார். 

“மேடை நாடகத்தோட எதிர்காலம் நல்லா இருக்கணும்னா, பத்திரிக்கைகள் அதைப்பற்றி எழுத முன்வரணும். அது, எல்லா மக்களுக்கும் போய்ச் சேரணும். அதோட, அரசு எங்களுக்கு குறைந்த விலையில சத்திரங்கள் ஏற்பாடு செஞ்சு கொடுக்கணும். அப்படி செஞ்சா, நாங்க இன்னும் நிறையா மேடை நாடகங்கள் போடுவோம். எங்களால குறைந்த விலைக்கு டிக்கெட்கள் கொடுக்க முடியும், மக்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கு. 

இப்போ ஒத்திகை பார்க்கணும்னா கூட, எங்க வீட்ல தான் பார்த்துட்டு இருக்கோம். அதுக்காக, எங்களால தனியா செலவு செய்ய முடியாது. இந்த நேர்காணல் மூலமாக, எங்க நாடக குழு சார்பா தமிழ்நாடு அரசுக்கு இந்தக் கோரிக்கையை வைக்கிறேன்”  என்று கூறி விடைபெற்றார் குருகுலம் மாதவ.பூவராக மூர்த்தி.

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles