'சிதம்பர நினைவுகள்' என்பதே என் அடையாளம்! எழுத்தாளர் ஷைலஜா 

Tuesday, January 31, 2017

''இந்த பதிமூன்று வருடத்தில் ஒவ்வொரு நாளும் யாரோ முகம் அறியாத ஒருவரிடம் இருந்து அலைபேசி அழைப்போ, குறுஞ்செய்தியோ, இமெயிலோ வந்துகொண்டே தான் இருக்கிறது. அது ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கிறது. அதுதான் சிதம்பர நினைவுகள் படைப்பின் ரகசியம்!"  என்றவாறே பேசத் தொடங்குகிறார் ஷைலஜா. 'சூர்ப்பனகை', 'சர்மிஷ்டா', 'மூன்றாம் பிறை', 'சுமித்ரா', 'முத்தியம்மா' உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படைப்புகளை நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்தவர்.

அவர் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த 'சிதம்பர நினைவுகள்' படைப்பு வாசகரின் மனதில் தடம் பதித்தவற்றுள் முக்கியமானது. அது பற்றிய தன் நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஷைலஜா. 

 

"திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்தி வந்த 'முற்றம்' என்கிற நிகழ்ச்சியில்தான் பாலசந்திரன் சுள்ளிக்காட்டை சந்தித்தேன். அதற்கு முன்னதாக, ஸ்ரீபதி பத்மநாபாவின் 'ஆரண்ய காண்டம்' என்கிற புத்தகத்தில் பாலசந்திரன் சுள்ளிக்காடுவின் எழுத்தில் இருந்து ஒரே ஒரு பத்தியை மட்டும் தான் படித்திருந்தேன். அதன்பிறகுதான், அவரைத் தேடிப்பிடித்து 'முற்றம்' நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தேன். அங்கே அவர் மொத்த மலையாள, இந்திய, உலகக் கவிதைகளைப் பற்றி பேசினார். அவருடைய பேச்சு எனக்குள் பெரிய மனஅதிர்வை ஏற்படுத்தியது. அன்று இரவு எங்கள் வீட்டில்தான் தங்கினார். மறுநாள் அவர், 'சிதம்பர ஸ்மரண்' புத்தகத்தின் சில வரிகளை எங்களிடம் ஒரு குழந்தையைப் போல படித்துக் காண்பித்தார்!

 

ஒரு படைப்பாளி புறம் சார்ந்த எதையும் யோசிக்காமல், ஒரு மழலையைப் போல இருக்க வேண்டும். அப்படியாக இருந்தார் பாலசந்திரன். அவருடைய குரல் கம்பீரமானதாக இருந்தது. அவர் இரண்டு பக்கங்களை வாசித்து முடித்ததும், எங்கள் வீட்டில் பெரிய மவுனம் நிலவியது. பிறகு, அந்த மலையாளப் புத்தகத்தை "ப்ரியப்பட்ட ஷைலஜிக்கு... பாலன்" எனக் கையெழுத்திட்டு, எனக்கு பரிசளித்துவிட்டுப் போனார். 

 

'சிதம்பர ஸ்மரண்' மலையாள நூலைக் கையில் எடுத்தபோது, அதை மொழிபெயர்க்க வேண்டும் என்ற எந்த திட்டமும் என்னிடம் இருக்கவில்லை. அப்போது, எனக்கு மலையாளம் வாசிக்கத் தெரியாது. "மலையாளம் சொல்லிக்கொடு" என்று என் அம்மாவிடம் கேட்பதை சங்கடமாக உணர்ந்தேன். ஆனால், புத்தகத்தை என் கையில் வைத்துக்கொண்டிருந்தேன். எங்களுடைய வீட்டின் மிக முக்கியமான வாசகி என்னுடைய அம்மாதான். அவர்தான் அந்த புத்தகத்தை முதலில் வாசித்தார். அதை வாசிக்கும்போதெல்லாம், அவரிடம் இருந்து ஒரு பெருமூச்சு மட்டுமே வெளிப்படும். "என்னாச்சும்மா...?" என்று கேட்டால், மவுனமாகிவிடுவார். 

 

கோடை விடுமுறையின்போது, என்னுடைய தங்கை ஜெயஸ்ரீயின் மகள் சுஹானா எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். பாலச்சந்திரனின் புத்தகத்தை நான் அடைகாத்துக் கொண்டிருப்பதை, அவள் கண்டுபிடித்துவிட்டாள். என் தாய்மொழியை எனக்கு சொல்லிக் கொடுத்தவள் சுஹானாதான்! அவள் துணையுடன் புத்தகத்தில் இருந்து ஒரு பகுதியை முதலில் மொழிபெயர்த்தேன். என்னுடைய கணவரும் எழுத்தாளரும் சிறந்த விமர்சகருமான பவா செல்லத்துரையிடம் அதைப் படிக்கக் கொடுத்தேன். படித்துவிட்டு, "இது ரொம்ப நல்லா வந்திருக்கு..." என்றார் அவர். அந்த வார்த்தை எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்தது. சுஹானாவுடன் சேர்ந்து மேலும் சில பக்கங்களை மொழிபெயர்த்தேன். அது என் தாய்மொழி என்பதால், போகப்போக எளிமையாக இருந்தது. அப்படியாக, அனைத்துப் பக்கங்களையும் மொழிபெயர்த்து முடித்தேன்!

 

மொழிபெயர்த்த 'சிதம்பர நினைவுகள்' படைப்பை எடுத்துக்கொண்டு, கொச்சின் சென்று பாலசந்திரன் சுள்ளிக்காட்டை சந்தித்தேன். அப்போது, "இலக்கிய ஆர்வமுள்ள ஒருவர் என் புத்தகத்தை மொழிப்பெயர்த்து வெளியிடுவதில், எனக்கு சந்தோஷம்தான்!..." என்று கூறி, அனுமதி கொடுத்தார். அதை என் வாழ்வில் மறக்கவே முடியாது. தற்போது இலக்கிய உலகில் என்னுடைய பெயர் தெரிகிறது என்றால், அதற்கு 'சிதம்பர நினைவுகள்' தான் காரணம்! 

 

என்னை எல்லோரும் "சிதம்பர நினைவுகள் ஷைலஜா..." என்றே அறிந்து வைத்திருக்கிறார்கள். அதன்பிறகு பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருந்தாலும், என்னுடைய முதல் அடையாளம் அதுதான். அந்தப் புத்தகத்தின் வாயிலாகக் கிடைத்த சந்தோஷமும் முக்கியமானது. ஏனெனில், இந்தச் சமூகத்தில் தான் பட்ட பாடுகளை, அவமதிப்புகளை, உதாசீனங்களை, சந்தோஷங்களை, துக்கங்களை எந்த ஒளிவும் மறைவுமின்றி அந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்  பாலசந்திரன். அப்படியான ஒன்று தமிழில் இதுவரை வெளிவராதது தான், அந்தப் புத்தகத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பாகக் கருதுகிறேன். வெளிவந்த ஒன்றிரண்டு பிரதிகள் கூட, உண்மையானதாக இல்லை என்பதுதான் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது!" என்றார். 

 

உண்மைதான், 'சிதம்பர நினைவுகள்' நூலை வாசிக்கும் யாவருக்குள்ளும் தீராத மவுனம் ஊடுருவிக் குடிகொள்ளும். அதன் சிறப்பே அதுதான்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles