அழகு தமிழ் பழகு - 22

Thursday, February 16, 2017

உம்மைத்தொகையும் சொத்துபத்தும்

இதுகாறும் தமிழ் இலக்கணத்தின் பல்வேறு தொடக்க நிலை விளக்கங்கள், விவரிப்புகளைப் படித்தோம். இந்த ஒரு பகுதியில் பேச்சு வழக்கில் நம் பெற்றோர்களும் பெரியவர்களும் பயன்படுத்திய இனிய சொற்றொடர்கள் சிலவற்றின் அடிப்படையாக விளங்கும் இலக்கணக்கூறு ஒன்றையும் அவற்றின் பொருள்கள் என்னென்ன என்றும் பார்க்கப்போகிறோம். 

நெடிதும் கடிதுமான பல்வேறு இலக்கணப் பாடங்களை இதுகாறும் தளராமல் கற்று வந்த நண்பர்களுக்கு இவ்வொரு பகுதியேனும் ஒர் இளைப்பாறலாக அமையட்டும் என்று இடையீடாக இதை எழுதுகிறேன். பேச்சுத் தமிழ் வழக்கின் இரட்டைச் சொற்றொடர்களாய்ப் பயிலும் சிலவற்றைப் பற்றியது இது. பேசும்போது சில சொற்றொடர்களை நாம் பொருளுணர்ந்தோ  உணராமலோ பேசிச்செல்வதுண்டு.

'எனக்கு சொத்து பத்துன்னு ஏதுமில்லை. உனக்காச்சும் நிலம் நீச்சுன்னு ஏதோ இருக்கு...' என்று பெரியவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டிருப்போம். நாமேயும் இவ்வாறு கூறியிருக்கக்கூடும்.

மேற்சொன்ன உரையாடலைக் கவனியுங்கள். சொத்து பத்து, நிலம் நீச்சு - என்னும் இரட்டைச் சொற்கள் உள்ளன. இவற்றை நாம் வழிவழி வந்த மரபுத் தொடர்களாகவே  பயன்படுத்துகிறோம். அச்சொற்றொடர்களின் முதல் சொல்லுக்குரிய பொருள் நமக்கு நன்கு தெரியும். சொத்து என்பது மதிப்புடைய உடைமையைக் குறிப்பது. ஆனால் பத்து என்பது என்ன? பத்து என்னும் எண்ணா? பத்துப் பொருள்களைக் குறிக்கின்ற எண்ணாகுபெயரா? தெரியவில்லை.

சொத்து என்பதன் பொருள் தெரிந்ததுபோல் பத்து என்பதன் பொருள் நமக்குத் தெரியவில்லை. அவ்வாறே நிலம் நீச்சும் என்கின்ற தொடரும். நிலம் என்பதின் பொருள் தெரியும். இப்புவியில் நாம் காலூன்றி நிற்கும் இடம்தான் நிலம். நீச்சு என்பது என்ன? அதுவும் தெரியவில்லை.

'அவங்க நல்ல வசதியோடு இருக்காங்க... அவங்களுக்குத்  தோட்டம் தொறவு நிறைய இருக்கு...' என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம். இத்தொடரில் தோட்டம் என்பதன் பொருள் தெரியும். மரஞ்செடிகொடிகள் நன்கு வளர்ந்து செழித்துப் பலன் தருகின்ற நிலம்தான் தோட்டம். ஆனால் தொறவு என்பதன் பொருள் நாமறியாதது.

இவ்வாறு எண்ணற்ற தொடர்கள் பயன்பாட்டில் உள்ளன. வீடுமனை, காடுகரை, பட்டிதொட்டி, நஞ்சைபுஞ்சை, நாடுநகரம், வண்டிவாசி என ஏராளமான சொற்றொடர்கள் இவ்வகையில் வழங்கப்படுகின்றன. இவற்றில் சிலவற்றுக்கு முதற்சொல்லுக்குப் பொருள் தெரிந்ததுபோல் அடுத்துள்ள சொல்லுக்குரிய பொருள் தெரியவில்லை. அத்தொடரின் இலக்கண விளக்கத்தை முதலில் தெரிந்துகொண்டால் பொருளைத் துலக்கமாக அறிந்துகொள்ளலாம்.

இலக்கணத்தில் உம்மைத் தொகை என்று ஒன்று இருக்கிறது. இரண்டோ இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்ச்சொற்களோ அடுத்தடுத்து அடுக்கி வருமிடத்தில் தமக்குள் உம் என்னும் உருபை மறைத்துக்கொண்டு தொகுபட்டுத் தோன்றும் தொகைதான் உம்மைத் தொகையாகும். உம் என்ற உருபு அத்தொடருக்குள் தொகுபட்டு மறைந்துவிடுவதால் அது உம்மைத் தொகை என்ற பெயரைப் பெற்றது. உம்மைத் தொகையை விரித்தெழுதும்போது உம் என்னும் உருபு ஒவ்வொரு பெயர்ச்சொல்லின் இறுதியிலும் தோன்றும். அப்பெயர்ச்சொற்கள் உம்மைத் தொகையாகும்போது உம் என்னும் உருபு மறைந்து நிற்கும். உம்மைத் தொகையாய்த் தொடர்ந்து எழுதப்படும் பெயர்களுக்கிடையே வலிமிகாது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

சேர சோழ பாண்டியர், மா பலா வாழை என்பன உம்மைத்தொகைகள். சேரரும் சோழரும் பாண்டியரும் என்பது அந்த உம்மைத் தொகையின் விரிவு. விரிவின்போது ஒவ்வொரு பெயர்ச்சொல்லோடும் உம் உருபு பின்வந்து ஒட்டுவதைக் காணலாம். மாவும் பலாவும் வாழையும் என்பது இன்னொரு தொடரின் விரிவு. மாபலா என்பது உம்மைத் தொகை என்பதால்தான் வலிமிகவில்லை. மாப்பலா என்று நாம் எப்போதும் எழுதுவதில்லை.

உம்மைத் தொகையில் அடுக்கப்படும் பெயர்களுக்கிடையே ஓரினத்தன்மை காணப்படும். ஒன்றுக்கொன்று தொடர்புற்று  இருக்கும். "மா மிதிவண்டி வெட்டிவேர்" என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பெயர்களுக்கிடையே உம்மைத்தொகை தோன்றாது. ஒற்றுமையாலோ வேற்றுமையாலோ அவை ஒருதரப்பட்ட பெயர்களாகவே மிகப்பெரும்பாலும் அமையும். மேல்கீழ், வரவுசெலவு என முரண்தன்மையுள்ள பெயர்களுக்கிடையேயும் உம்மைத் தொகை தோன்றும். பெயர்ச்சொற்களை அடுக்கிக்கூறும் நிலைமைகளில் எல்லாம் உம்மைத் தொகையின் பயன்பாடு மிகவும் இன்றியமையாதது.

இப்போது உம்மைத் தொகையின் வெளிச்சத்திலிருந்து மேற்சொன்ன தொடர்களை விளங்கிக்கொள்ளலாம். சொத்து பத்து, நிலம் நீச்சு, தோட்டம் தொறவு முதலான அனைத்துத் தொடர்களும் இலக்கணப்படி உம்மைத் தொகைகளே. இவை ஒன்றுக்கொன்று இனமான தொடர்புடையவை. அதன் அடிப்படையில் தொடரின் இரண்டாம் சொல்லுக்குரிய பொருளை ஆராய்ந்து தெளிவோமா?

சொத்து பத்து என்பதில் உள்ள பத்து என்ன? பத்து என்பது 'பற்று' என்பதன் பேச்சு வழக்காகும். பற்று என்றால் என்ன? உறவுகள் மீது கொண்டுள்ள உணர்வுப் பற்றுதலே பற்று ஆகும். மதிப்புடைய உடைமைகளையும் உறவுகளின் மீது கொண்டுள்ள பாசப்பற்றையும் குறிக்கும் உம்மைத்தொகைதான் சொத்துபத்து என்பது.

நிலம் நீச்சில் உள்ள நீச்சு என்பது 'நெடுநாள்களுக்குத் தேங்கி நிற்கும் வற்றாத வெள்ளத்தைக்' குறிக்கும். நிலமும் வற்றா நீர்வளமும் என்னும் தொடர்தான் நிலம் நீச்சு. சோற்றில் ஊறிய நாள்பட்ட தண்ணீரை 'நீச்சுத்தண்ணி' என்று சொல்வார்கள். அது ஏன் என்று இப்போது விளங்குகிறதா ?

தோட்டம் தொறவு என்பதில் உள்ள தொறவு என்ன? ’தொறுவு'தான் பேச்சு வழக்கில் தொறவு ஆயிற்று. தொறுவு என்பது பசுக்கூட்டம் மிக்கிருக்கும் தொழுவத்தைக் குறிக்கும். மரஞ்செடிகொடிகளும் பயிர்களும் விளைந்து செழித்துப் பலனளிக்கும் நிலமும் கால்நடைச் செல்வமும் என்பதைத்தான் தோட்டம் தொறவு என்ற உம்மைத்தொகை குறிக்கிறது.

எடுத்துக்காட்டில் உள்ள ஒவ்வொரு தொடரின் பொருள் விளக்கத்தைப் பாருங்கள்.

வீடுமனை -  வீடும் அவ்வீடு அமைந்திருக்கும் நிலமும். மனை என்பதற்கு மனைவி என்ற பொருளையும் கருதலாம்.

காடுகரை - இங்கே காடு என்பது புன்செய் நிலத்தையும் கரை என்பது ஆறு ஏரி குளக்கரைகளில் உள்ள நன்செய் நிலத்தையும் குறிக்கும்.

பட்டிதொட்டி - பட்டி என்பது சமவெளியில் உருவான ஆயர்குடிகளுக்கான மேய்ச்சல் நிலங்களைக் கொண்ட ஊர். தொட்டி என்றால் மலையிலமைந்த சிற்றூர்.

நாடுநகரம் -  நனிசிறந்த பேரூர் நகரம். நகரமல்லாத கிராமங்களைக் குறிப்பதே நாடு என்னும் சொல். அதனால்தான் கிராமத்தவர்களை நாட்டுப்புறத்தான் என்கிறோம். கிராமியப் பாடல்களை நாட்டுப்புறப்பாட்டு என்பர்.

வண்டிவாசி - வண்டியைத் தெரியும். போக்குவரத்துக்கு விரைந்து செல்லப் பயன்படுகின்ற நகர்பொருள். வாசி என்றால் என்ன? வாசி என்றால் குதிரை. அக்காலத்தில் வண்டிகளில் செல்வார்கள். வாசிகள் வண்டிகளை இழுத்துச் செல்லும். அதனால்தான் வண்டிவாசி என்னும் சொற்றொடர் தோன்றியது. வாசி என்ற சொல்லுக்கு வேறுபட்ட பல பொருள்களைக் கருத வழியிருப்பினும், உம்மைத் தொகை என்ற இலக்கண அறிவின் வெளிச்சத்தால் குதிரை என்ற பொருளில் அச்சொல்லைக் கருத வழி பிறக்கிறது. இதுதான் இலக்கணத்தின் ஆற்றல். சொற்களின் பொருள் திறப்புக்கு இலக்கணம் செய்யும் பேருதவியும் இதுதான்.

- கவிஞர் மகுடேசுவரன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles