எழுத்தும் நானும் வேறல்ல! எழுத்தாளர் தமயந்தி

Thursday, February 16, 2017

நவீன இலக்கிய உலகில் எல்லோருக்கும் அறிமுகமான பெயர் தமயந்தி. பெண்களின் வலியை தன்னுடைய எழுத்தில் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்து வரும் தமிழச்சி. தற்போது திரைப்படத்துறையிலும் நுழைந்து, 'விழித்திரு' படம் மூலமாகப் பாடலாசிரியராகவும் வசனகர்த்தாகவும் அடையாளம் பெற்றிருப்பவர். தனது எழுத்து, வாழ்க்கை, சமூகம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார் எழுத்தாளர் தமயந்தி. 

"பெண் எழுத்தாளர் என்று என்னை அழைப்பதில் இருநூறு சதவீதம் எனக்கு உடன்பாடே கிடையாது. முக்கியமான காரணம் என்னன்னா, எழுத்துக்கு பால் பேதம் இல்லை. ஜெயகாந்தனையோ, பிரபஞ்சனையோ ஆண் எழுத்தாளர்கள் என்று யாரும் குறிப்பிடுவதில்லை. பெண் எழுத்தாளர் என்று சொல்வதே, குறுகிய வட்டத்திற்குள் உள்ள மனதைத் தான் குறிக்கிறது என்றே பார்க்கிறேன். நம்மை அறியாமலேயே, நம் சமூக கட்டமைப்பில் பெண் போலீஸ், பெண் இயக்குநர்கள் என்றே அழைக்கிறோம். ஆண்கள் செய்கிற அதே வேலையைப் பெண்களும் செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஏன் பெண் எழுத்தாளர் என்று வகைப்படுத்த வேண்டும்? தலித் எழுத்தாளர், பிராமணீய எழுத்தாளர் என்று ஏன் பிரித்துப் பார்க்க வேண்டும்?. 

என்னைப் பொறுத்தவரை எழுத்து என்பது மனம் சார்ந்தது. அதை எழுதுபவர்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ, தலித்தாகவோ, பிராமணராகவோ எது வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. சாதியில்லை என்கிற சமூகத்தை நோக்கித்தான் நாம் நகர வேண்டும். ஆனால், ஆங்கில இலக்கியங்களில் அப்படியெல்லாம் வகைப்படுத்துதல் இல்லை. தமிழில் அதைச் சாத்தியப்படுத்துவதற்கான பயணத்தை நோக்கி கூட நாம் நகரவில்லை. எனவேதான், மேடையில் யாராவது என்னைப் பார்த்து 'பெண் எழுத்தாளர்' என்று குறிப்பிட்டால், அங்கேயே "அய்யா... சாமி... என்னை எழுத்தாளர் என்றே அழையுங்கள்" என்கிறேன். 

என்னுடைய எழுத்தில் பெண்களின் உலகத்தில் நிகழும் வலிகளைப் பதிவு செய்திருக்கிறேன் என்பது உண்மை தான். ஏனெனில், என்னுடைய எழுத்தும் நானும் வேறல்ல. என்னுடைய வாழ்க்கையில் நடந்தவை மற்றும் என்னுடைய தோழிகளின் வாழ்வில் நடந்தவற்றை தான் எழுத்தில் பிரதிபலிக்கிறேன். என்னுடைய எழுத்தில் எந்தவொரு வரியும் பொய்மை கலந்தது அல்ல. இப்போது வெளியாகி இருக்கும் ''கொன்றோம் அரசியை'' என்கிற தொகுப்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை முன்வைத்து எழுதப்பட்டது. அதில் கதைகளின் பட்டியலுக்குப் பிறகு வரும் பக்கத்தில் இப்படி குறிப்பிட்டிருக்கிறேன், "இந்த தொகுப்பு எந்த விருதுக்கோ, பட்டியலுக்கோ அல்ல!". எனக்கு பட்டியலிலோ, தமிழில் வழங்கப்படும் விருதுகளிலோ நம்பிக்கையில்லை. தொடர்ந்து எழுதுவது மட்டும்தான் ஒரு எழுத்தாளருடைய வேலை!

நான் படிக்கும்போது அன்னார்ந்து பார்த்த எழுத்தாளர் பிரபஞ்சன். அவருடைய எழுத்துக்களின் மீது எனக்கு அபாரமான காதல் உண்டு. 'சந்தியா' என்றொரு தொடர்கதையை, தாய் பத்திரிகையில் எழுதினார். அந்தக் கதையில் வரும் சந்தியா என்கிற பாத்திரம் தான், நான் என்னவாக உருவாக வேண்டும் என்கிற புரிதலை எனக்குள் உருவாக்கியது. எனக்குள் கற்பனைக் கோட்டையை கட்டியது. நான் யாராக வேண்டும் என்று விரும்பினேனோ, அதை எழுதியவர் என்னைப் பாராட்டும்போது தலைதாழ்ந்து வரவேற்கிறேன். ஆனால், அந்தப் பாராட்டை ஒருபோதும் என் தலையில் ஏற்றிக்கொள்வதில்லை!

பெண்களின் அக உலகை எழுத்தில் பதிவு செய்யவேண்டும் என்பதே என் விருப்பம். அவர்களின் காதல், காமம், இச்சை, எதிர்பார்ப்புகள் இவை குறித்த பதிவுகள் எதுவுமே இன்றி, பெண்கள் குறித்த ஒரு சித்திரத்தை நம் தமிழகத்தில் கற்பு, கலாச்சாரம் என்று அடைத்துவிட முடியாது. 

பெண்களுடைய வலி எப்படியிருக்கு? என்று சொல்ல வேண்டுமானால், ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசியாக வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்சினை 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் தீவிரமாக இருந்தது. அந்தச் சமயத்தில், ஒருநாள் கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு ஜீப்பில் வீடு திரும்புகிறார்கள் கம்பம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள். அப்போது அவர்களை வழிமறித்த கேரளாவைச் சேர்ந்த சில ஆண்கள், இரவு முழுக்க அவர்களைப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்குகிறார்கள். அதை 'இன்டியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையின் கோகுல் என்பவர் ஒரு கட்டுரையாகப் பதிவு செய்கிறார். 

ஆனால், அப்படியொரு சம்பவமே நடக்காததுபோல, அப்போது ஊடகங்கள் வாய்மூடி இருந்தன. அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அப்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளைக் கட்டமைக்கும் பணியில் மறைந்த பால கைலாசம் அவர்கள் இருந்தார்கள். இந்த விஷயத்தை சொல்லி, "பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களைச் சென்று சந்திக்க வேண்டும்?" என்று சொன்னேன். என்னுடன் பணியாற்றிய சக கேரள ஆண்கள், "அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை" என்று வாதிட்டார்கள். 

எங்கள் செய்தியாளர்கள் குழு கம்பம் பகுதிக்குச் சென்று பெண்களைச் சந்திக்கும்போது, அவர்கள் யாரும் உரையாட முன்வரவேயில்லை. பிறகு, ஒரு நாள் முழுக்க அவர்களோடு தங்கியிருந்து பழகிய பின், என்மீது அவர்களுக்கு ஏற்பட்ட அன்பின் காரணமாக, அந்த உண்மையைச் சொன்னார்கள். ஆனால், அந்தப் பிரச்சனையில் தமிழகத்தின் ஆளும் கட்சியோ, எதிர்கட்சியோ எதையும் செய்யவில்லை. என்னால் 'ஈரம்' என்றொரு கதையைத்தான் எழுத முடிந்தது. என்னால் ஒரு பிரச்சினைக்கு ரியாக்ட் பண்ண முடியாதபோது, எழுத்தில் எனக்கான ஒரு உலகைப் படைத்து அதில் எதிர்வினை புரிகிறேன்!

அது போலவே, இசை என்பது என்னுடைய இன்னொரு உயிர். இசையும் புத்தகங்களும் இல்லை என்றால், நான் என்றைக்கோ தற்கொலை செய்திருப்பேன். இசைக்கேற்றபடி எழுதுவது என்பது நம்மை நாமே திரும்ப திரும்ப புதுப்பித்துக்கொள்வது போன்றது. ஒரு பாடல் எழுதி முடித்தவுடனே இன்று புதியதாய் பிறந்தது போல இருக்கும். அதேபோல என்னுடைய திரைப்பயணத்தில் மிக முக்கியமான இயக்குநர் மீரா கதிரவன். 'விழித்திரு' படத்தில் அவரோடு இணைந்து வசனங்களை எழுதியிருக்கிறேன். அந்தப் படத்தில்தான், என்னுடைய முதல் பாடலும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் அதிகமாக நான் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது, என்னுடைய வாழ்க்கையை மையமாக வைத்து குட்டி ரேவதி இயக்க உள்ள திரைப்படத்தைத் தான்!" வாழ்வு குறித்த தீர்க்கமான பார்வையோடு முடித்தார் எழுத்தாளர் தமயந்தி. உண்மைதான், பெண்களின் அக உலகினுள் பெண்ணால் மட்டுமே நுழைய முடியும்! 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles